`நேற்றுவரை நல்லாதான் இருந்தாங்க… திடீர்னு இறந்துட்டாங்க’ என்ற ஆதங்கத்தின் பின்னணியில் சம்பந்தப்பட்ட அந்த நபரின் ஆரோக்கியம் கேள்விக்குரியது. ஆரோக்கியமானவர் என நாம் நினைத்துக்கொண்டிருந்த அந்த நபர், பெரிய உடலியக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்த்திருக்கலாம். திடீரென நெஞ்சுவலி வந்திருக்கும், டெஸ்ட் செய்தால் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வரும். ஒருவேளை அவர் அறிகுறிகளை உணராத நிலையில், அடைப்பும் அதிகமானதால் திடீரென இறந்திருப்பார்.
இதயத்தில் அடைப்பு இருக்கும்பட்சத்தில் அது 30 – 50 சதவிகிதம் வரை இருக்கும்போது அறிகுறிகளைப் பெரிதாகக் காட்டாது. இதயத்துக்கு வேலை கொடுக்கும்படியான வேலைகள் செய்யும்போதுதான் நெஞ்சுவலியை உணர்வார்கள். டெஸ்ட் செய்து பார்த்தால் இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியும். டெஸ்ட் செய்யாதவர்களுக்கு அதுவும் தெரியாது. அந்த அடைப்பு 80 சதவிகிதமாகும்போதுதான் அறிகுறிகளை உணர்வார்கள்.
அதனால்தான் குறிப்பிட்ட வயதுக்கு மேலானவர்களும், குடும்ப பின்னணியில் இதய நோய்கள் இருப்பவர்களும், இணைநோய்கள் உள்ளவர்களும், புகை, மதுப் பழக்கங்கள் இருப்பவர்களும் வாழ்வியல் முறையில் கவனமாக இருக்கவும், புகை, மதுப் பழக்கங்களைக் கைவிடுமாறும், வருடாந்தர உடல் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.