Doctor Vikatan: அறிகுறிகளே இல்லாமல் ஹார்ட் அட்டாக் வருமா?

Share

Doctor Vikatan: என் நண்பனுக்கு 48 வயது. திடீரென மயங்கி விழுந்தவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவனுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகச் சொலலி சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படி அறிகுறிகளே இல்லாமலும் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வருமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

ஹார்ட் அட்டாக் எப்போதும் அறிகுறிகளோடுதான் வரும் என சொல்வதற்கில்லை.  இதற்கான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன், ஹார்ட் அட்டாக்கின் கிளாசிக் அறிகுறிகள் பற்றி அனைவரும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

மார்புப் பகுதியில் ஓர் அழுத்தம், இறுக்கம், வலி, கசக்குவது போன்ற உணர்வு, அந்த வலியானது கைகளுக்கு, தாடைக்கு, கழுத்துக்கு, முதுகுப் பகுதிக்குப் பரவுவதுதான் மாரடைப்பின் மிக முக்கியமான, பிரதான அறிகுறிகள்.  இதன் தொடர்ச்சியாக சிலர் ‘Levine’s sign ‘ என்ற அறிகுறியையும் உணர்வார்கள். அதாவது கையை மடக்கி மார்புப் பகுதியை அழுத்திக் கொள்வார்கள். 

தலைச்சுற்றல், வாந்தி,

அடுத்து மூச்சு விடுவதில் சிலர் திடீர் சிரமத்தை உணர்வார்கள். இந்த அறிகுறியோடு நெஞ்சுவலி இருக்கலாம், இல்லாமலும் போகலாம். நெஞ்சுவலி இல்லை என்பதால் இதை பலரும் மாரடைப்புடன் தொடர்புபடுத்திப் பார்க்கவே மாட்டார்கள். மாரடைப்பு வரப்போவதன் அறிகுறியாக சிலருக்கு திடீரென காரணமே இல்லாமல் வியர்க்கும். அஜீரணமோ, வயிற்றுப் பிரச்னையோ இல்லாத நிலையிலும் திடீரென சிலருக்கு வாந்தி உணர்வு ஏற்பட்டாலோ, ஏதோ ஓர் அசௌகர்யத்தை உணர்ந்தாலோ அதுவும் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியாக இருக்கலாம். 

திடீரென ஏற்படும் தலைச்சுற்றல், மயக்கம் போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். காரணமே இல்லாமல் திடீரென உணரும் அதீத களைப்பும் அசதியும் கூட மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு சில வாரங்கள் முன்பிருந்தோ, சில நாள்கள் முன்பிருந்தோ இந்த உணர்வு தொடரலாம். 

ஒரு கையிலோ, இரண்டு கைகளிலுமோ வலியை உணர்வது, கழுத்து, முதுகு, வயிற்றுப் பகுதிகளில் வலியை உணர்வது போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். அதாவது தொப்புளில் தொடங்கி, தாடை வரை எந்த இடத்தில் வலி இருந்தாலும் அலட்சியம்கூடாது. 

தாடை வலி

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் எல்லோருக்கும் அவசியம் வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாகவும் இருக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு  பெரும்பாலும் அறிகுறிகளற்ற ‘சைலன்ட் அட்டாக்’ ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்கும் மிக மிதமான அறிகுறிகளே ஏற்படலாம். எனவே, திடீரென உணரப்படும் எந்தவித அசௌகர்யத்தையும் அலட்சியம் செய்யக்கூடாது. அறிகுறிகளே இல்லாமலும் மாரடைப்பு ஏற்படலாம் என்பதால் அவ்வப்போது இதயநலனுக்கான பரிசோதனைகளைத் தவறாமல் செய்து பார்க்க வலியுறுத்தப்படுகிறது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com