வலது உள்ளங்கை அடிக்கடி மரத்துப்போகிறது. விரல்களை மடக்கினாலே ஒரு நிமிடத்தில் மரத்துவிடுகின்றன. எனக்கு ரத்தச்சோகையும் உள்ளது. இடது உள்ளங்காலில் அரிப்பு உள்ளது. எனக்கு என்னதான் பிரச்னையாக இருக்கும்? தீர்வு சொல்வீர்களா?
– அனிதா பிரீத்தி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த, பொதுமருத்துவர் ஆதித்யன் குகன்.
“நீங்கள் குறிப்பிட்டுள்ள மரத்துப்போகும் உணர்வு, ரத்தச்சோகை போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கலாம் என்று தெரிகிறது. சைவ உணவுக் காரர்களுக்கு இந்தப் பிரச்னை சகஜமானது. அசைவம் சாப்பிடுகிறவர்களிலும் சிலருக்கு இந்தச் சத்துகளை உட்கிரகிப்பதில் பிரச்னைகள் இருந்தால் அவர்களுக்கும் இவை பாதிக்கலாம். அதாவது, உடலில் புரதச்சத்து குறைவாக இருந்தால் இந்தச் சத்துகள் உட்கிரகிக்கப்படாது.
எனவே, அடிக்கடி கை, கால்கள் மரத்துப்போவது, குறுகுறுப்பு உணர்வு, ரத்தச்சோகை போன்றவை ஏற்பட்டால் முழுமையான ரத்தப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். `கம்ப்ளீட் பிளட் கவுன்ட்’ என்று சொல்லப்படும் அந்த டெஸ்ட்டில் ரத்தச் சிவப்பு அணுக்களின் அளவு சரிபார்க்கப்பட வேண்டும். ஒருவேளை அந்த அணுக்களின் அளவு பெரிதாக இருந்தால் அதை `மெகலோபிளாஸ்டிக் அனீமியா’ (Megaloblastic anemia) என்று சொல்வோம்.
அனீமியா எனப்படும் ரத்தச் சோகையில் இருவகை மிகவும் சகஜம். ஒன்று `மைக்ரோசைட்டிக் அனீமியா’ (Microcytic anemia ). இது இரும்புச்சத்துக் குறைபாட்டால் வருவது. முதலில் குறிப்பிட்ட மெகலோபிளாஸ்டிக் அனீமியா என்பது வைட்டமின் பி 12 சத்துக் குறைபாட்டால் வருவது.