‘புதிய கேப்டன் தோனி!’
சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியிருக்கும் நிலையில், தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்கவிருக்கிறார். தோனியின் சென்னை அணி எப்படியிருக்கும்? தோனியின் கேப்டன்சி வருகை மட்டுமே அணியிலிருக்கும் இப்போதைய பிரச்னைகளை சரி செய்துவிடுமா? சென்னை அணி தற்போதைய தொடர் தோல்விகளிலிருந்து மீளுமா? என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அதைப் பற்றிய அலசல் இங்கே.

‘புது நம்பிக்கை!’
தோனி மீண்டும் கேப்டனாகியிருப்பது ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அதைத் தாண்டி அணிக்குள்ளுமே ஒரு நம்பிக்கை துளிர் விட்டிருப்பதை பார்க்க முடிகிறது. அணியின் பயிற்சியாளரான ப்ளெம்மிங்கும் சரி, ருத்துராஜூம் சரி, ‘எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் எங்களை சரிவிலிருந்து மீட்பார் என நம்புகிறோம்.’ என்று பாசிட்டிவாகக் கூறுகின்றனர். இதே நம்பிக்கைதான் அணிக்குள்ளும் இருக்கும்.
தோனி எதாவது மேஜிக் செய்துவிடுவார் எனும் மனநிலையே எல்லா தரப்பிலும் நிலவுகிறது. தொடர் தோல்விகளால் தொடர்ந்து எதிர்மறையான எண்ணங்களில் சூழ்ந்திருந்த அணிக்கு நேர்மறையான எண்ணத்தை ஊட்ட தோனி கண்டிப்பாக உதவுவார்.

‘நல்ல மாற்றங்கள்!’
மேலும், அணிக்குள்ளும் தோனி தன்னுடைய ஸ்டைலில் கேப்டன்சி செய்கையில் சில நல்ல மாற்றங்களைப் பார்க்கமுடியும். கடந்த 4 போட்டிகளிலும் சென்னை அணி தோற்றதற்கு ருத்துராஜின் மோசமான பௌலிங் ரொட்டேஷனும் முக்கிய காரணமாக இருந்தது. அணியின் சிறந்த பௌலர் நூர் அஹமதுதான். அவர்தான் ஸ்ட்ரைக்கிங் பௌலர். அவர்தான் விக்கெட் எடுக்கிறார். ஆனால், கடைசியாக ஆடிய இரண்டு போட்டிகளில் அவருக்கு முழுமையாக 4 ஓவர்களை கொடுக்கவே இல்லை.
அதேமாதிரி, அஸ்வின் பவர்ப்ளேயில் அடி வாங்குகிறார் எனத் தெரிந்தும் அங்கேயே தொடர்ந்து அவருக்கு ஓவர் கொடுத்து மேலும் மேலும் அடி வாங்கிக் கொண்டிருந்தார். தோனி ஸ்பின்னர்களின் கேப்டன். ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல ரிசல்ட்டைப் பெறுவதில் கில்லாடி. ஆக, அணியின் மூன்று ஸ்பின்னர்களையும் ருத்துராஜைவிட தோனி மிகச்சிறப்பாகக் கையாள்வார். மேலும், அவரின் செல்லப்பிள்ளையான பதிரனாவுக்கும் இன்னும் அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்து ஸ்ட்ரைக்கிங் பௌலராக மாற்றிவிட முயல்வார்.
செஸ் காய்களைப் போல பீல்டர்களை நகர்த்தி வியூகம் வகுப்பதிலும் தோனி கெட்டிக்காரர். மேலும், எந்தெந்த வீரரெல்லாம் பீல்டிங்கில் கெட்டி, யாரெல்லாம் தேறமாட்டார்கள் எனத் தெரிந்து அதற்கேற்ற பொசிசன்களில் நிற்க வைப்பார். இதெல்லாம் கடந்த 5 போட்டிகளிலும் ரொம்பவே மிஸ் ஆனது. தோனி அதை சரியாகச் செய்வார்.
‘பிரச்சனைகள் சரியாகுமா?’
இதெல்லாம் பாசிட்டிவ்வாக இருந்தாலும் தோனி கேப்டனாவதாலயே அணியின் பிரச்னைகள் எல்லாம் சரியாகிவிடும் என்றெல்லாம் இல்லை. கேப்டன் தோனிக்கு பேட்டர் ருத்துராஜ் அணியில் இல்லாததுதான் முழு முதற் குறையாக இருக்கும். 2020 சீசன்தான் ஐ.பி.எல் வரலாற்றில் சென்னைக்கு மிக மோசமான சீசன். அதிலிருந்து மீண்டு வந்து கடந்த 4 சீசன்களில் இரண்டு முறை சென்னை அணி சாம்பியன் ஆகியிருக்கிறது. சாம்பியனான 2021, 2023 இரண்டு சீசனிலும் ருத்துராஜ் 600 க்கு நெருக்கமான ரன்களை எடுத்திருப்பார்.

வெற்றியில் ஆகப்பெரும் பங்களிப்பு அவருடையதாகத்தான் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு பேட்டர் இல்லாமல் இறங்குவது நிச்சயமாக தோனிக்கு பின்னடைவுதான்.
மேலும், அணியில் எந்த பேட்டருக்குமே இண்டண்டே இல்லை. பஞ்சாபுக்கு எதிரான போட்டியில்தான் கொஞ்சம் காரசாரமாக ஆடினார்கள். துபே, தோனி ஆகியோரைத் தாண்டி யாருமே சிக்சர்கள் அடிப்பதில்லை. அவர்களைச் சொல்லி குற்றமும் இல்லை. சென்னை அணி நவீன டி20 க்கு ஏற்ற ஹார்ட் ஹிட்டர்கள் யாரையும் அணியில் எடுக்கவே இல்லை. அப்படியிருக்க தோனி கேப்டனாவுடன் எல்லாரும் உத்வேகம் ஏறி சிக்சர்களாக பறக்கவிட்டு இண்டண்டோடு ஆடுவார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? அதேமாதிரிதான் பீல்டிங்கும்.
நடப்பு சீசனின் மிக மோசமான பீல்டிங் அணி சென்னைதான். சகட்டுமேனிக்கு கேட்ச்களை விடுகிறார்கள். தோனியால் சரியான பீல்ட் செட்டப்பைதான் வைக்க முடியும். எல்லா இடத்துக்கும் ஓடிச் சென்று அவரே கேட்ச் பிடித்துக்கொண்டிருக்க முடியாது. கடந்த 4 போட்டிகளிலும் சென்னையின் தோல்விக்கு கேட்ச் ட்ராப்கள்தான் மிக முக்கிய காரணமென ருத்துராஜ் புலம்பிவிட்டு சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி கேப்டனாவதால் அணிக்கு புது புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதும், ருத்துராஜ் தவறவிட்ட சில இடங்களில் தோனி நேர்த்தியாகச் செயல்படுவார் என்பதும் நிதர்சனம்தான். தோனியில் பாணியில் சொல்லவேண்டுமெனில், Result is a by-product of process. இங்கே அந்த ப்ராசஸிலேயே நிறைய ஓட்டைகள் இருக்கிறது. அப்படியிருக்க தோனி கேப்டனாவதலாயே அந்த ஓட்டைகளெல்லாம் அடைபடும் என நம்ப முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.
தோனி CSK அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச்செல்ல என்ன செய்யவேண்டும் உங்கள் கருத்தை கமென்ட்டில் தெரிவியுங்கள்