2023-ல் அதே அணியால் ரூ. 50 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மோஹித் சர்மா, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சிறப்பாகப் பந்துவீசி, 27 விக்கெட்டுகள் வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு முக்கியப் பங்காற்றினார். மோஹித் தனது ஐ.பி.எல் கரியரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சீசன் இதுதான். இருப்பினும், கடந்த சீசன் (2024) அவருக்கு சிறப்பாக அமையவில்லை. 12 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தினார்.

இதனால், நடப்பு சீசனுக்கான (2025) மெகா ஏலத்தில் குஜராத் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, டெல்லி அணியால் ரூ. 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். இந்த நிலையில், சி.எஸ்.கே-வில் தான் விளையாடிய காலத்தில் தோனி, டென்னிஸ் ஜாம்பவான் மரியா ஷரபோவாவின் பெயரை தனக்கு செல்லப்பெயராக (Nickname) வைத்து அழைத்த நினைவுகளை மோஹித் சர்மா பகிர்ந்திருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் இதனைப் பகிர்ந்துகொண்ட மோஹித் சர்மா, “மஹி பாய் (தோனி) எனக்கு மரியா ஷரபோவா என்று செல்லப்பெயர் வைத்தார். `சில டென்னிஸ் பிளேயர்ஸைப் போல சத்தம் போடுகிறீர்கள்” என்று அதற்கு காரணமும் சொன்னார். அதற்கு நான், `அவ்வாறு கத்தும்போது, நாம் மெதுவாகப் பந்துவீசினாலும் 140 – 150 கி.மீ வேகத்தில் பந்துவருவதாக பேட்மேன்ஸ்கள் நினைப்பார்கள். அது எனக்கு பிளஸ் பாய்ன்ட்தான்’ என்பேன்” எனக் கூறினார்.
டென்னிஸ் ஜாம்பவான் மரியா ஷரபோவா, 2006 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.