Last Updated : 12 May, 2022 10:36 PM
Published : 12 May 2022 10:36 PM
Last Updated : 12 May 2022 10:36 PM

மும்பை: மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மின்தடை காரணமாக DRS ரிவ்யூ சிஸ்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் சென்னனை வீரர் டெவான் கான்வே.
நடப்பு ஐபிஎல் சீசனின் 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள், வான்கடே மைதானத்தில் விளையாடின. இந்த போட்டியில் டாஸை இழந்த சென்னை அணி முதலில் பேட் செய்தது. வெறும் 97 ரன்களில் ஆல்-அவுட்டானது சென்னை. மளமளவென விக்கெட்டுகளை சென்னை பறிகொடுத்ததே இதற்கு காரணம். இதில் சென்னை வீரர் டெவான் கான்வே எதிர்கொண்ட முதல் பந்து அவரது பேடில் பட, LBW முறையில் அவுட் என நடுவர் அறிவித்தார்.
ஆனால் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் DRS முடிவை கான்வே எடுக்க முடியவில்லை. ஏனெனில், மைதானத்தில் மின் தடை காரணமாக அந்த ஆப்ஷன் அவருக்கு மறுக்கப்பட்டது. அதனால் அவர் களத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னரே சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனை கவனித்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். மின்தடை என்றால் போட்டியை நிறுத்தியிருக்க வேண்டும். இது நியாயமற்றது. நடுவர், மும்பை அணியுடன் கூட்டு சேர்ந்து விட்டார், உண்மையில் அது அவுட் கிடையாது, DRS இருந்திருந்தால் தப்பியிருப்பார் என கமெண்ட் பறப்பதை பார்க்க முடிந்தது.