சென்னை அணியின் வலைப்பயிற்சி ஞாயிறன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த பயிற்சி செஷனுக்கு முன்பாக தோனி இன்னொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க வேண்டியிருந்தது. இந்திய அணி 2011 இல் உலகக்கோப்பையை 12 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சி லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை நான்கரை மணிக்குத் தொடங்கியது. தோனி அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டு உலகக்கோப்பை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
விரைந்து வந்த தோனி சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சென்னை வீரர்களோடு இணைந்துகொண்டார்.
சேப்பாக்கத்தில் இரண்டு பிட்ச்களில் நெட் கட்டப்பட்டிருந்தது. இரண்டிலுமே சென்னை அணியின் வீரர்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், சாண்ட்னர், சிவம் துபே, அம்பத்தி ராயுடு என சென்னை பேட்டர்கள் பட்டாளம் அத்தனை பேரும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஜடேஜாவும் பென் ஸ்டோக்ஸும் அடுத்தடுத்த நெட்களில் நின்று கொண்டு போட்டி போட்டு சிக்சர்களை பறக்கவிட்டிருந்தனர். போட்டிக்கு முன்பாக ஹார்ட் ஹிட்டிங் ப்ராக்டிஸ் செய்வதே வீரர்களின் எண்ணமாக இருந்தது. ஜடேஜா ஸ்பின்னர்களை எளிதில் பெரிய சிக்சர்களாக பறக்கவிட்டார். அதேநேரத்தில் த்ரோ செய்யப்பட்ட பந்துகளையும் வேகப் பந்துகளையும் பவுண்டரியை க்ளியர் செய்து வெளியே பறக்கவிடுவதில் ஸ்பின்னை விட சிறு சிரமத்தை எதிர்கொண்டார். ஜடேஜா, ஸ்டோக்ஸ் இருவரைவிட, சிவம் துபே பந்துகளை நன்றாக டைம் செய்து பெரிய பெரிய சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். இவர்களுக்கிடையே அம்பத்தி ராயுடுவும் கொஞ்ச நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.