பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிந்தார். தோனி சென்னை அணியின் வீரராக விளையாடி வந்தார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்திருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அனைத்து சீசன்களிலும் தோனியே செயல்பட்டார். இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியபோதே தோனி கேப்டனாக அல்ல அணி வீரராக மட்டுமே இருப்பார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு தொடர் தோல்விகளையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்து வந்தது. இது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியளித்தது. இந்நிலையில்தான், கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்துவிட்டு தான் விளையாட்டில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். மே-1 ம் தேதி நடக்கவிருக்கும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது.