ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை தக்கவைக்கவும் ஏலத்தில் வாங்கவும் 120 கோடி ரூபாயை பிசிசிஐ நிர்ணயித்திருக்கிறது. பிசிசிஐ சொல்வது போல 6 வீரர்களையும் ஒரு அணி முழுமையாக தக்கவைக்கும்பட்சத்தில் 79 கோடி ரூபாயை ஏலத்துக்கு முன்பாகவே ஒரு அணி செலவளித்துவிடும். எனில், ஏலத்தில் வீரர்களை எடுக்க கையில் 41 கோடி ரூபாய் மட்டும்தான் இருக்கும். இந்த 41 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு ஏறக்குறைய 19 வீரர்களை அணியில் எடுப்பதென்பது அணிகளுக்கு தலைவலியாக மாறிவிடும். இதனால் பெரும்பாலான அணிகள் முழுமையாக 6 வீரர்களையும் தக்க வைக்காது என்பதே இப்போதைய கணிப்பு.
மூன்று அல்லது நான்கு வீரர்களை தக்கவைத்துக் கொண்டு எஞ்சிய இடங்களுக்கு RTM கார்டுகளுடன் ஏலத்துக்கு செல்லவே அணிகள் விரும்பும். சிஎஸ்கேவும் அப்படியான திட்டத்தில்தான் இருக்கும் என்று தெரிகிறது.
எந்தெந்த வீரர்களை தக்கவைக்கப் போகிறோம் என்பதில் சென்னை அணிக்கு அவ்வளவு குழப்பம் இருக்காது. தோனி எப்படியாயினும் தக்கவைக்கப்பட்டு விடுவார். ருத்துராஜை வருங்காலத்துக்கான கேப்டனாக பார்க்கிறார்கள். ஒரு வீரராக ஓப்பனிங் பேட்டராக வும் அணியில் அவரின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. 2021 சீசனில் 635 ரன்களை எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னை அணியை சாம்பியனாகவும் மாற்றினார். ஒவ்வொரு சீசனிலும் 500 க்கும் அதிகமான ரன்களை அடிக்கும் சீரான தன்மை அவரிடம் இருக்கிறது. அதனால் சந்தேகமே இல்லாமல் ருத்துராஜ் தக்கவைக்கப்படுவார்.