Corona: கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட தூக்கக்கோளாறு, மூளை மூடுபனி பிரச்னை.. மீள்வது எப்படி?

Share

2020 – 2021-ம் ஆண்டுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாய் மடிந்தது எல்லாம் இன்னும் கண்களில் இருந்து மறையவில்லை. மக்களின் சுய கட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி போன்றவற்றால் அந்த கொரோனா ஒருவழியாக அடக்கி வாசித்துக்கொண்டிருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பின்னாளில் தூக்கக்கோளாறு sleep disruption, மூளை மூடுபனி (Brain fog) போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்கள்.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று

தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா வந்தவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதற்கான காரணம் என்ன; அவற்றை எப்படி சரிசெய்வது போன்றவற்றை விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர். பிரபாஷ் பிரபாகரன்.

”Brain fog என்ற சொல் மருத்துவ உலகில் பயன்படுத்தப்படுவதில்லை. அது நினைவாற்றல் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை குறிப்பிடுவதற்கு மக்களிடையே இருக்கும் ஓரு சொல்லாடல். Brain fog என்ற பிரச்னை இருப்பதாக வருபவர்களிடம் முதலில் அவர்களுக்கு நினைவில் குழப்பம், தெளிவில்லாமை, ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமை, ஞாபகமறதி போன்றவற்றில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை பொறுத்தே சிகிச்சை மேற்கொள்வோம்.

Brain fog
Brain fog

தூக்கம் சார்ந்த பிரச்னை என்பது பல வகைகளாக இருக்கும். சரியான நேரத்திற்கு தூக்கம் வராமல் இருப்பது, தூங்கினாலும் இடையில் விழித்துக்கொள்வது, நீண்ட நேரம் தூங்கிக்கொண்டே இருப்பது, காலை எழுந்தாலும் சரியாக தூங்காதது போன்ற உணர்வு ஏற்படுவது, எந்நேரமும் தூக்கக்கலக்கத்துடனே இருப்பது போன்ற பிரச்னைகளை தூக்கக்கோளாறு என குறிப்பிடலாம்.

நிறைய பேர் கொரோனாவிற்கு பிறகுதான் தங்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் வந்திருப்பதாக கூறி சிகிச்சைக்கு வருகிறார்கள். அதற்கு காரணம் கொரோனா காலங்களில் ஏற்பட்ட தூக்க மாற்றமாகக்கூட இருக்கலாம். கொரோனா காலங்களில் அதிக நேரம் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்திருப்போம். பொழுதுபோக்கிற்காக நீண்ட நேரம் போன், டிவி என ஸ்கிரீன்களை பயன்படுத்தி இருப்போம். இவற்றால் நம்முடைய தூக்க நேரங்கள் மாறி இருக்கலாம். அதனால்கூட, இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். இதுவொரு காரணம்.

கொரோனா
கொரோனா

அடுத்தக் காரணம், கொரோனாவால் அதிகம்பேர் பாதித்தபோது, நாம் உயிர்ப்பிழைப்போமா அல்லது இறந்துவிடுவோமா என்கிற பயம் நம் எல்லோருடைய மனங்களிலும் இருந்திருக்கும். சிலர், ஐ.சி.யூ. வரைகூட சென்று மீண்டு வந்திருப்பார்கள். அப்போது ஏற்பட்ட மன அழுத்தம், பயம் போன்றவற்றால் இந்தப் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம். அப்போது குறைவுபட்ட நோயெதிர்ப்பு சக்தி காரணமாக, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதனால்கூட இந்த பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. தவிர, மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைவாக (Hypoxia) இருந்தாலும்கூட தூக்கக்கோளாறும், Brain fog-ம் வர வாய்ப்பு உண்டு.

சீரான தூக்கமும், தினமும் உடற்பயிற்சி செய்வதும்தான் இவற்றுக்கான தீர்வே. தற்போது பலருக்கும் படுத்தவுடன் தூக்கம் வருவதில்லை. அதற்கான காரணம் அவர்களுடைய பழக்க வழக்கங்கள்தான். படுக்கையில் படுத்துக்கொண்டு ‘இன்னும் தூக்கம் வரலையே’ என்று அதைப்பற்றி சிந்தித்து அதையொரு கவலையாக்கிக்கொண்டு இருப்பார்கள். படுக்க சென்றவுடன் இந்த சிந்தனையை மறந்துவிட வேண்டும். எதையும் யோசிக்காமல் இருந்தாலே, படுத்தவுடன் நல்ல தூக்கம் வரும். தவிர, தூங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே உணவு உட்கொள்ள வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பே செல்போன் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இருட்டான அறையில் தூங்க வேண்டும். இப்படி சீரான தூக்கமும் தினமும் உடற்பயிற்சியும் இருந்தாலே போதுமானது. இந்த இரண்டு பிரச்னைகளில் இருந்து மீண்டு விடலாம்” என்று தைரியம் தருகிறார் டாக்டர் பிரபாஷ்.

டாக்டர். பிரபாஷ் பிரபாகரன்.
டாக்டர். பிரபாஷ் பிரபாகரன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com