பத்திரிகையாளரும் கனடா ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினருமான எம்.எம்.பாபி ராபின்சன்தான் மீண்டும் காமன்வெல்த் போட்டிகளுக்கான முன்னெடுப்பை 1928-ம் ஆண்டு தொடங்கினார். பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடி கனடாவில் இருக்கும் ஹாமில்டன் நகரில் முதல் காமன்வெல்த் போட்டியைத் தொடங்கலாம் என்ற யோசனையைக் கூறினார். இதற்கான தீவிர முயற்சிகளும் எடுக்கப்பட்டன.
அதன் விளைவாக, 1930-ம் ஆண்டு ஹாமில்டன் நகரில் முதல் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவு செய்து ஆகஸ்ட் மாதமே எல்லா ஏற்பாடுகளையும் செய்து அசத்தியது கனடா. முதல் காமன்வெல்த் போட்டிகளில் வெறும் 11 நாடுகளே பங்கேற்றன. அவை ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, பெர்முடா, பிரிட்டிஷ் கயானா, கனடா, இங்கிலாந்து, வட அயர்லாந்து, நியூ ஃபவுன்ட்லேண்ட், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வேல்ஸ். அன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நடுவில், 1942 மற்றும் 1946-ல் மட்டும் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை. இந்தியா முதல்முறையாக 1934-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றது. 1930, 1950, 1962, 1986 ஆகிய நான்கு காமன்வெல்த் போட்டிகள் தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் இந்தியா பங்குபெற்றுள்ளது.