ஆனந்த் ஏற்படுத்திக் கொடுத்த தொடக்கமும் அடுத்தத்தடுத்த தலைமுறைகளுக்கு அவர் கடத்திவிட்ட செஸ் ஆர்வமும்தான் இன்றைக்கு இந்தியாவுக்கு மாபெரும் வெற்றிகளை தந்துகொண்டிருக்கிறது. இதனால் இந்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா விருதை விஸ்வநாதன் ஆனந்துக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.
செஸ் ஒலிம்பியாடை கிரிக்கெட்டின் உலகக்கோப்பையோடு கூட ஒப்பிட முடியாது. அதைவிட பெரிய தொடர் அது. ஒலிம்பிக்ஸில் செஸ் இல்லை என்பதால்தான் ஒலிம்பியாட் என்ற பெயரில் பெரும்பாலான உலக நாடுகள் கலந்துகொள்ளும் வகையில் இந்தத் தொடர் தொடங்கப்பட்டது. 1924 லிலிருந்து ஆடப்பட்டு வரும் இந்தத் தொடரில் 2014 இல் தான் இந்திய ஓப்பன் அணி வெண்கலம் வென்றிருந்தது. கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாடிலும் ஓப்பன் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவிலுமே இந்திய அணி வெண்கலமே வென்றிருந்தது. ஆனால், இந்த முறை ஹங்கேரியில் நடந்த ஒலிம்பியாடில் மற்ற அணிகளை விட ரொம்பவே ஆதிக்கமாக ஆடி இந்தியாவின் இரண்டு அணிகளும் தங்கம் வென்றிருக்கின்றன.
இது ஒரு மாபெரும் மகத்தான வெற்றி.