இப்படி எத்தனையோ போட்டிகளில் ஆட்டத்தை மாற்றியிருக்கிறது அந்த அணி. ஆனால், இந்த வெற்றி கொண்டாடப்படவேண்டியதற்கான முக்கியக் காரணம், இப்போது இருக்கும் அணி முந்தைய அணிகளைப் போன்றது அல்ல. செர்ஜியோ ரமோஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஆளுமைகள் இல்லை. மார்செலோ, மோட்ரிச் போன்றவர்களுக்கு வயதாகிவிட்டது. ஒருவரால் ஆட்டத்தைத் தொடங்கவே முடியவில்லை. ஒருவரால் முடிக்க முடியவில்லை. இப்படி ஒரு அணிதான் மில்லியன்கள், இல்லை பில்லியன்கள் மதிப்பு மிக்க… இளம் வீரர்களும், சூப்பர் ஸ்டார்களும் நிறைந்த அணிகளை புரட்டி எடுத்திருக்கிறது.
மான்செஸ்டர் சிட்டி அணிக்கெதிரான போட்டியை முடித்த 11 வீரர்களைப் பார்த்தால், அது ரியல் மாட்ரிட் அணியைப் போலவே தெரியாது. கோர்ட்வோ, லூகாஸ் வஸ்கீஸ், டேனி கர்வகால், நாசோ, ஜீசஸ் வலேஹோ, ஃபெர்லாண்ட் மெண்டி, கமவிங்கா, டேனி சபயோஸ், ஃபெடரிகோ வெல்வர்டே ராட்ரிகோ, அசான்சியோ போன்றவர்கள்தான் அந்த ஆட்டத்தை முடித்தவர்கள். கார்லோ ஆன்சலோடி இந்த அணியை சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
காயத்தால் டேவிட் அலாபா இந்தப் போட்டியில் ஆடவே இல்லை. எடர் மிலிடோ, கடைசி சில நிமிடங்கள் காயத்தால் ஆடவில்லை. ஆனால், அதையெல்லாம் இந்த அணி கடந்து வந்திருக்கிறது. பென்சிமா எனும் தங்க முட்டையிடும் வாத்தையும், அவருக்கு உறுதுணையாய் இருக்கும் வினிசியஸ் ஜூனியரையும் மையமாக வைத்து அவர்கள் அட்டாக்கை வடிவமைத்தார் டான் கார்லோ. கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளையும் பக்காவாக இவர்கள் கோலாக்க, எதிரணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தடமாறுகின்றன.