- எழுதியவர், தாய்ஸ் கர்ரன்கா மற்றும் எம்மா ஏய்லெஸ்
- பதவி, பிபிசி 100 வுமென், பிபிசி பிரேசில்
-
தயேன் லீட் ஒருபோதும் ஒரு பாலியல் தொழிலாளியாக விரும்பவில்லை. ஆனால் அவருக்கு 17 வயது இருக்கும்போது அவரது கணவர் மாரடைப்பால் இறந்தபோது, தயேன் லீட்டால், தனது கணவரின் இறுதிச் சடங்கிற்கு பணம் செலுத்த முடியவில்லை.
பிரேசிலின் பாரா மாகாணத்தில் உள்ள இட்டாய்டுபா பகுதியைச் சேர்ந்தவர் அவர். அந்நகரம் சட்டவிரோத தங்கச் சுரங்க வர்த்தகத்தின் மையமாக உள்ளது.
எனவே அமேசான் பகுதியில் உள்ள சுரங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொள்வதன் மூலம் பணம் திரட்டலாம் என நண்பர் ஒருவர் அவருக்குப் பரிந்துரைத்தார்.
“சுரங்களுக்கு செல்வது சுழற்றிவிடப்பட்ட சோழிகளைப் போன்ற கதை,” என்கிறார் தயேன்.
”பெண்கள் அங்கு கடுமையாக அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் அங்கே திட்டப்படலாம், அறையப்படலாம்.”
“நான் என் அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஆண் ஜன்னல் வழியாக குதித்து என் தலையில் துப்பாக்கியை வைத்தார். பாலியல் உறவுக்காக பணம் செலுத்தும் ஆண்கள், அப்பெண்களை தங்களுக்குச் சொந்தமாக்க விரும்புகிறார்கள்,” என்கிறார் தயேன்.
தன்னுடைய கணவரின் இறுதிச் சடங்கிற்கான பணத்தை ஒருவழியாக திரட்டினார் தயேன். 18 வயதில் அவர் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
கடந்த 16 ஆண்டுகளாக, இட்டாய்டுபாவில் உள்ள பல பெண்களைப் போலவே, சமையல் செய்ய, சலவைப் பெண்ணாக , மது விடுதிகளில் பணியாற்ற மற்றும் பாலியல் தொழிலாளியாக வேலை செய்ய அவ்வப்போது சுரங்கங்களுக்கு சென்று திரும்புகிறார் அவர்.
தற்போது 7 பேரைக் கொண்ட குடும்பத்தை அவர் பராமரித்து வருகிறார்.
சுரங்க குடியிருப்புகளில் வாழ்வது சவாலானது
“இந்நகரத்தில் உள்ள அனைத்து பெண்களும் இதைச் செய்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களில் குறிப்பிட்டளவு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
அதனால் இது சாதாரணமாகிவிட்டது. உண்மையாகவே இத்தொழில் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை” என்று நடாலியா கேவல்காண்டே கூறுகிறார்.
இவர் 24 வயதில், சுரங்க தொழிலாளர்கள் வாழும் கிராமப் பகுதி ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நடாலியா ஒரு மது விடுதி உரிமையாளரை மணந்த பிறகு, பாலியல் விடுதியைக் கவனித்துக் கொண்டிருந்தார். தனது உடன்பிறந்தவர்களின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள, நடாலியா சமீபத்தில் அவ்வேலையை துறந்தார்.
மழைக்காடுகளில் உள்ள சுரங்கக் குடியிருப்புகளில் வாழ்வது மிகக் கடுமையானது. பெரும்பாலான சுரங்க குடியிருப்புகள், அழுக்கான பாதை, மது விடுதிகள் மற்றும் ஒரு தேவாலயத்தைக் கொண்டிருக்கும்.
சுரங்கத் தொழிலாளர்கள், மரம் மற்றும் துணிகளைக் கொண்டு கட்டப்படும் சிறிய கூடாரங்களில் வசிக்கின்றனர். பாம்புகளும் ஜாகுவார்களும் நடமாடும் பகுதியில் ஜெனரேட்டர் அணைக்கப்பட்டதும் முழு பகுதியும் இருள் சூழ்ந்துவிடுகிறது.
சமையல் வேலை செய்யும் பெண்களும் இந்த கூடாரங்களில் இந்த இருளில் வாழ வேண்டும்.
தங்கத்தைக் கண்டுபிடித்து, பணம் சம்பாதித்தவுடன் சுரங்கத் தொழிலாளர்கள் கிராமத்திற்கு வருவார்கள் என்கிறார் நடாலியா.
சில சமயங்களில் உடலுறவுக்கு முன் அந்த ஆண்களைக் குளிக்கச் சொல்லி நாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று பல பெண்கள் கூறுகின்றனர்.
பிரேசிலிய சட்டத்தின் கீழ் பாலியல் விடுதி நடத்துவது சட்டவிரோதமானது. ஆனால் தான் எந்த கமிஷனும் பெறவில்லை என்று நடாலியா கூறுகிறார். மேலும் அவர் மது விடுதி ஊழியர்களை நியமித்து அறைகளை வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
இளம் பெண்கள் சிலர் வேலை கேட்டு அவரைத் தொடர்பு கொள்வார்கள். வேலைக்காக இட்டாய்டுபாவிலிருந்து ஏழு மணிநேரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதால் அதற்காக நடாலியா அவர்களுக்குப் பணமும் கொடுக்கிறார்.
எங்கே செல்கிறது இந்த தங்கம்?
மற்ற பெண்களை இந்த தொழிலில் ஈடுபடுத்துவது குறித்து வருத்தம் அடைந்தது உண்டா என்று கேட்ட போது, “நான் சில நேரங்களில் நினைப்பேன். நானும் அதை கடந்து வந்துள்ளேன். அது ஒன்றும் நல்ல அனுபவம் கிடையாது. ஆனால் அந்த பெண்ணுக்கு குடும்பம் இருக்கிறது. குழந்தைகளை வளர்க்க வேண்டும். இப்பணிக்கு செல்லும் பெண்களுக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் உள்ளன. நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோம்,” என்கிறார் நடாலியா.
திருமணத்திற்கு முன்பே, நடாலியா நிறைய பணம் சம்பாதித்துள்ளார்.
இப்போது அவருக்கு இட்டாய்டுபாவில் சொந்த வீடு உள்ளது. இரு சக்கர வாகனம் ஒன்றும் உள்ளது. சில சமயங்களில் பாலியல் தொழிலுக்காக கட்டணமாக அவ்வபோது பெறப்பட்ட இரண்டு அல்லது மூன்று கிராம் தங்கம் என்று தங்கத்தையும் அவர் சேமித்து வைத்துள்ளார்.
நடாலியா படிக்க விரும்பினார். வழக்கறிஞராக அல்லது கட்டடக் கலைஞராக வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்துள்ளது.
‘தங்கக் கட்டி நகரம்’ என்று அழைக்கப்படும் இட்டாய்டுபாவில் உள்ள சில பெண்கள், அங்கு சம்பாதித்த பணத்தில் தொழில்களை தொடங்கியுள்ளதாக அவர் கூறுகிறார்.
ஆனால் வன்முறை நிறைந்த சட்ட விரோத சுரங்க குடியிருப்புகளுக்குள் ஒரு பெண்ணாக தொழில் செய்ய தொடங்குவது பெரிய ஆபத்து.
சுரங்கங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு நன்கு அறியப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களான வன்முறை, பாலியல் சுரண்டல் மற்றும் ஆள் கடத்தல் ஆகியவை பெரிதளவு கவனம் பெறவில்லை என்று ஐ.நா கூறியுள்ளது.
” இந்தச் சுரங்கங்களில் இருந்து சட்டவிரோதமாகப் பெறப்படும் தங்கம், உரிமம் பெற்ற சுரங்கக் கூட்டுறவு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட தங்கம் என மறு பெயரிடப்படும்.
பிறகு நகைக்காகவும், மொபைல் போன் உதிரி பாகங்கள் தயாரிப்பிற்கும், பிற மின்னணுக் கூறுகளாகவும் மாற்ற ஏற்றுமதி செய்யப்படும்” என ஒரு தங்க வியாபாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
‘கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் பிரிட்டன்’ ஆகியவை பிரேசிலிய தங்கத்தின் மூன்று பெரிய வாடிக்கையாளர்கள். ‘Instituto Escolhas’ எனும் சிந்தனைக் குழுவின் கூற்றுப்படி, ஐரோப்பாவிற்கு செய்யப்படும் மொத்த ஏற்றுமதிகளில் 90% க்கும் அதிகமானவை சட்டவிரோத சுரங்கப் பகுதிகளிலிருந்து வருகின்றன.
வன்முறை தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள்
சுரங்க கிராமங்களில் பெண்கள் கொல்லப்படுவது ஒன்றும் புதிதல்ல. 26 வயதான ரைலே சாண்டோஸின் சடலம், ‘கூயு கூயு’ தங்கச் சுரங்கத்திற்கு அருகில் அவர் வசித்து வந்த அறையில் கடந்த ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதி இட்டாய்டுபாவில் இருந்து 11 மணிநேர பயண தூரத்தில் உள்ளது.
பாலுறவுக்காக, ரைலேவுக்கு ஒரு ஆண் பணம் கொடுத்துள்ளார். ஆனால் ரைலே மறுத்துவிட்டார். அதன் காரணமாக அந்த ஆண் ரைலேவைக் கண்டுபிடித்து அடித்துக் கொன்றதாக அவரது மூத்த சகோதரி, ரெய்லேன் தெரிவித்தார்.
மேலும் “அதிகளவிலான பெண்கள் தினமும் இறப்பதாக” ரெய்லேன் கூறுகிறார்.
“நான் சுரங்கத்தில் பிறந்தேன், சுரங்கத்தில் தான் வளர்ந்தேன், ஆனால் இப்போது நான் சுரங்கங்களில் வாழ பயப்படுகிறேன்.”என்கிறார் அவர்.
ரைலேவின் கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் மீது இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை. மேலும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த நபர் மறுக்கிறார்.
பிரேசிலின் சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் கடந்த 10 ஆண்டுகளில், 2023-ல், இருமடங்காக அதிகரித்து 220,000 ஹெக்டேர்களாக உயர்ந்தது. இதன் பரப்பளவு லண்டனை விடப் பெரியது.
இந்தப் பகுதியில் எத்தனை பெண்கள் வேலை செய்கிறார்கள், எத்தனை சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
மேலும் 80,000 முதல் 800,000 நபர்கள் சட்டத்திற்கு புறம்பாக சுரங்க பணிகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று பிரேசில் அரசாங்கம் கூறுகிறது.
சட்டவிரோத சுரங்கங்களை மூடுவதற்கும், அங்கு உற்பத்தி செய்யப்படும் தங்கத்தை, விற்பனையாளர்கள் வாங்காமல் நிறுத்துவதற்கும், அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் கீழ், பிரேசில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் அதிகரிக்கும் தங்கத்தின் விலை, பலரையும் இப்பணியில் ஈடுபடத் தூண்டுகிறது.
சுரங்கப் பகுதிகளில் உள்ள ஆபத்துகளும் கஷ்டங்களும் தன் உடலைப் பாதிக்கும் என்பதால் தயேன் அங்கு வேலை செய்ய விரும்பவில்லை. ஆனால் கடைசியாக ஒரு முறை அங்கு வேலை செய்துவிட்டு நிறுத்திக்கொள்ளலாம் என அவர் எண்ணுகிறார்.
இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஒரு சிற்றுண்டிக் கடையைத் திறப்பதற்குப் போதுமான அளவு பணம் சம்பாதிப்பதே அவருடைய குறிக்கோள். ஆனால் அக்குறிக்கோளில் வெற்றிபெற முடியாது என்பதையும் அவர் உணர்கிறார்.
“தனியாக இருக்கும் நேரங்களில் எனது குழந்தைகளைப் பற்றி கவலைப்படுவேன். என்னால் முடியாது எனத் தோன்றும் வரை நான் முயற்சி செய்து கொண்டிருப்பேன்,” என்று தயேன் கூறுகிறார்.
“எங்கள் அம்மா மிகவும் கடினமாக உழைத்தார். எங்களுக்காக மிகக் கடினமான அனுபவத்தை அவர் கடந்து சென்றார். ஆனாலும் ஒருபோதும் தனது முயற்சியை அவர் கைவிடவில்லை” என்று தன் குழந்தைகள் ஒரு நாள் சொல்வார்கள் என தயேன் தனது எண்ணத்தை வெளிப்படுத்துகின்றார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு