கேரள மாநிலம், ஆலப்புழாவில், பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செஃபாலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis) என்ற அரிய மூளை தாக்குதல் நோயால், 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுவன் குருதத் கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். அதேபோல், காசர்கோடு மாவட்ட, படனக்காடு பகுதியில் வசித்த ஸ்ரீபாலு என்ற 3 வயது சிறுவன், இந்த அரிய நோய் பாதித்து மரணமடைந்தார்.
பிரைன் ஈட்டிங் அமீபாவால் (Brain-eating Amoeba) ஏற்படும் இந்நோய், ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆலப்புழாவில் பதிவானது. இந்த அரிய நோய் மீண்டும் இப்போது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
திருச்சூரைச் சேர்ந்த பலேஷ், அஸ்வதி ஆகியோருக்கு ஸ்ரீபாலு, சிவபாலு என இரட்டை குழந்தைகள். இந்நிலையில் ஸ்ரீபாலுவுக்கு காய்ச்சல் பாதித்த நிலையில் மூன்று நாள்களுக்கு முன் காஞ்சங்காட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான்.
சிறுவனின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் நேற்று மரணமடைந்தான். இந்த 3 வயதுச் சிறுவனின் மரணத்துக்கான காரணம், மேற்கூரிய அரிய வகை மூளைத் தாக்குதல் நோயாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.