டாக்கா: நடப்பு டி20 உலக சாம்பியனான இங்கிலாந்து கிரிக்கெட் அணியை டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது வங்கதேசம். இந்த வெற்றி அந்த அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது.
டாக்கா நகரில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் 73 ரன்கள் எடுத்தார். நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 47 ரன்கள் எடுத்திருந்தார்.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. டேவிட் மலான் 53 ரன்கள், பட்லர் 40 ரன்கள் எடுத்தனர். இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாகி இருந்தனர். இதில் பட்லர் ரன் அவுட் ஆனார். அதன்பிறகு இங்கிலாந்து ரன் குவிக்க தடுமாறியது. மொயின் அலி, பென் டக்கெட், சாம் கர்ரன் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இங்கிலாந்து. இதன் மூலம் 16 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டாவதாக பேட் செய்து வென்றிருந்தது வங்கதேசம். கடைசி போட்டியில் எதிரணியின் ரன் குவிப்பை தடுத்தது. தொடர் நாயகன் விருதை ஷாண்டோ வென்றார்.