அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்தார். நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு அரங்கைப் பார்வையிட்டனர். ஏ.வி.எம் ஸ்டூடியோஸ் தமிழ் சினிமாவில் தயாரித்து கவனம்பெற்ற படைப்புகள் பற்றிய குறிப்புகளும் அதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் கருவிகள், விண்டேஜ் கார்கள், படத்தொகுப்புக் கருவிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த மியூசியம் குறித்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில்,
“நான் பிறந்த இடமே ஏ.வி.எம் தான். இன்று எனக்கு ஒரு பொன்னான நாள். இந்த மியூசியம் வெறும் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டது அல்ல. சுமார் 80 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாறு இதில் அடங்கியிருக்கிறது. இத்தனை ஆண்டு காலம் ஏ.வி.எம் நிலைத்து நிற்பதற்கு மிக முக்கிய காரணம் மெய்யப்பன் செட்டியார் அவர்கள். அவரை திருப்திபடுத்துவது ஆகாத காரியம். ஒரு சீன் பிடிக்கலனாலும் விடவே மாட்டார் . திரும்ப திரும்ப படப்பிடிப்பு செய்து, துல்லியமான படைப்பு வரும்வரை எடுக்கச் சொல்வார். செட் வொர்க், சாங் ரெக்கார்டிங், பாடல் வரிகள் போன்ற சின்ன சின்ன நுணுக்கங்களையும் படம் வெளிவரும் வரை சரிபார்த்துக் கொண்டே இருப்பார்.