ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்தான் டாஸை வென்று பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. கில்லை ட்ராப் செய்துவிட்டு வாஷிங்டன் சுந்தரை உள்ளே கொண்டு வந்திருந்தார்கள். ஆக, இரண்டு ஸ்பின்னர்களோடு இந்திய அணி களமிறங்கியது. ஒரு முழுமையான பேட்டரை ட்ராப் செய்தது இந்திய அணியின் பேட்டர்கள் மீது கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கப் போகிறது என்கிற உறுத்தலோடுதான் முதல் நாள் தொடங்கியது.
ஆஸ்திரேலிய அணியில் கான்ஸ்டஸை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். ஓப்பனராகவும் இறங்கினார். பெரும் நெருக்கடிக்கு மத்தியில்தான் கான்ஸ்டஸை ஆஸ்திரேலிய அணி மெல்பர்ன் டெஸ்ட்டுக்கு அழைத்து வந்தது. முதல் மூன்று டெஸ்ட்களிலும் ஆஸ்திரேலியாவின் ஓப்பனர்கள் சோபிக்கவே இல்லை. 6 இன்னிங்ஸ்களில் மெக்ஸ்வீனி 72 ரன்களையும் கவாஜா 63 ரன்களையும் மட்டுமே எடுத்திருந்தனர். குறிப்பாக, பும்ராவுக்கு எதிராக இருவருமே கடுமையாக திணறியிருந்தனர். பும்ரா மட்டுமே 8 முறை இவர்கள் இருவரையும் இந்தத் தொடரில் மட்டுமே ஆட்டமிழக்கச் செய்திருந்தார். இதனால்தான் மெக்ஸ்வீனியை டிராப் செய்துவிட்டு கான்ஸ்டஸை அணியில் எடுத்தார்கள். கான்ஸ்டஸூக்கு ஒரே ஒரு டாஸ்க்தான் கொடுக்கப்பட்டது. நியூபாலில் பும்ராவை சமாளித்து நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டும். இது இமாலயச் சவாலென எல்லாருக்குமே தெரியும். ஆனால், கான்ஸ்டஸ் நம்பிக்கையோடு ஆடினார்.
தனது அறிமுகப் போட்டியில் முதல் பந்தையே உலகின் அபாயகரமான பௌலரான பும்ராவுக்கு எதிராக எதிர்கொள்கிறோம் என்கிற பதற்றம் கான்ஸ்டஸூக்கு இல்லவே இல்லை. முதல் பந்தையே நிதானமாக லீவ் செய்தார். முதல் ஓவரின் அத்தனை பந்துகளையும் பார்த்து ஆடினார். ரன் கணக்கை தொடங்கவில்லை. ஆனாலும், பரவாயில்லை. பும்ராவுக்கு எதிராக ஒரு 19 வயது இளைஞன் ஒரு ஓவர் முழுக்க சர்வைவ் ஆனதே பெரிய விஷயமாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால், கான்ஸ்டஸின் பார்வையில் ஒரு தீர்க்கம் இருந்தது. பேக்வர்ட் ஸ்கொயரில் தட்டி விட்டு தனது முதல் சர்வதேச ரன்னையே பும்ராவுக்கு எதிராகத்தான் எடுத்தார். இதன்பின்தான் ஆட்டமே ஆரம்பித்தது.