ஆஸ்திரிய கிராண்ட் ப்ரீ ஃபார்முலா ஒன் பந்தயத்தை வென்று அசத்தியிருக்கிறார் ஃபெராரியின் சார்ல் லெக்லர்க். முதல் முறையாக போல் பொசிஷனில் இருந்து தொடங்காத ரேஸை வென்றிருக்கிறார் லெக்லர்க். இதன் மூலம் டிரைவர்கள் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் அவர். மேக்ஸ் வெர்ஸ்டப்பன், லூயிஸ் ஹாமில்டன் இருவரும் அடுத்த இரு இடங்களைப் பிடித்து போடியத்தை நிறைவு செய்தனர்.

தகுதிச் சுற்று
இந்த கிராண்ட் ப்ரீயில் ஸ்பிரின்ட் ரேஸ் இருந்ததால், வழக்கமாக சனிக்கிழமை நடக்கும் தகுதிச் சுற்று வெள்ளிக்கிழமையே நடந்தது. ரெட் புல் ரிங்கில் நடந்த தகுதிச் சுற்றில் ஆஸ்டன் மார்டின், ஆல்ஃபா ரோமியோ போன்ற அணிகள் பெருமளவு தடுமாறின. 4 முறை உலக சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல் யாரும் எதிர்பாராத வகையில் கடைசி இடம் பிடித்தார். வால்ட்டேரி போட்டாஸ், லாண்டோ நாரிஸ் போன்றவர்களும் Q2 தகுதிச் சுற்றில் வெளியேறினர். அதேசமயம், இரு ஹாஸ் டிரைவர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு 6-7 இடங்களைப் பிடித்தனர்.
வழக்கம்போல் ‘போல் பொசிஷனுக்கு’ வெர்ஸ்டப்பன் vs லெக்லர்க் யுத்தமே நடந்தது. ரெட் புல் அணியின் ஹோம் ரேஸில் போல் பொசிஷனைத் தனதாக்கினார் அந்த அணியின் வெர்ஸ்டப்பன். மற்றொரு ரெட் புல் வீரர் செர்ஜியோ பெரஸ் ஐந்தாவது இடம் பிடித்தார். ஆனால், Q2 சுற்றில் டிராக் லிமிட்டை மீறியதால், அவரின் லேப் நேரங்கள் நிராகரிக்கப்பட்டு 13வது இடத்தில் தொடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். கார்லோஸ் சைன்ஸ் மூன்றாவது இடம் பிடித்தார். Q3ல் டிராக்கிலிருந்து வெளியேறியதால் ஹாமில்டன் ஒன்பதாவது இடமே பிடித்தார்.
ஸ்பிரின்ட் ரேஸ்
ஸ்பிரின்ட் ரேஸ் என்பது ஒரு கிராண்ட் ப்ரீக்கு முந்தைய தினம் நடக்கும் ஒரு மினி ரேஸ். சுமார் 100 கிலோமீட்டருக்கோ அல்லது 30 நிமிடங்களுக்கோ இந்த ரேஸ் நடக்கும். 2022ம் ஆண்டு மாற்றப்பட்ட புதிய விதிமுறைப்படி, ஸ்பிரின்டில் முதல் 8 இடங்களைப் பிடித்த டிரைவர்களுக்கு முறையே 8 முதல் 1 புள்ளி வரை வழங்கப்படும்.

23 லேப்கள் கொண்ட இந்த ஸ்பிரின்ட் ரேஸை பெரிய சவால்கள் இல்லாமல் வென்றார் மேக்ஸ் வெர்ஸ்டப்பன். அவருக்குப் போட்டி இல்லையென்றாலும், ஃபெராரியின் லெக்லர்க், சைன்ஸ் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் முந்திக்கொண்டிருந்தனர். இருந்தாலும், தன் இடத்தைச் சிறப்பாக தக்கவைத்துக்கொண்டார் வெர்ஸ்டப்பன். ஜார்ஜ் ரஸல் நான்காம் இடம் பிடித்தார். 13வது இடத்தில் இருந்து தொடங்கிய செர்ஜியோ பெரஸ் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு ஐந்தாவது இடம் பிடித்தார்.
முன்களத்தில் பல போட்டிகள் இருந்தாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மிக் ஷூமேக்கர், லூயிஸ் ஹாமில்டன் இருவருக்கும் இடையே நடந்த யுத்தம்தான். புள்ளி பெறுவதற்கான கடைசி இடமான எட்டாவது இடத்துக்கு இருவரும் பல லேப்கள் போட்டியிட்டனர். கடந்த ரேஸில், நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பனுடன் கடுமையாக போட்டியிட்ட மிக், இந்த ரேஸில் 7 முறை சாம்பியனான ஹாமில்டனுக்கு சவால் கொடுத்தார். தொடர்ந்து பல லேப்கள் ஹாமில்டனை முந்த விடாமல் சிறப்பாக டிஃபண்ட் செய்தார் மிக். இருந்தாலும், கடைசி தருணத்தில் மிக்கை முந்தினார் ஹாமில்டன்.
பிரதான ரேஸ்
போல் பொசிஷனில் இருந்த வெர்ஸ்டப்பன், நல்ல தொடக்கத்தால் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுவிட்டார். ஆனால், போகப்போக அவருக்கிடையிலான இடைவெளியை குறைத்தார் லெக்லர்க். 10வது லேப்பில் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவியது. அப்போது அதை சிறப்பாகக் கையாண்டிருந்தாலும் வெர்ஸ்டப்பனால், லெக்லர்க்கின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. 12வது லேப்பின் ஆறாவது வளைவில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலிடத்துக்கு முன்னேறினார் லெக்லர்க். வெர்ஸ்டப்பனின் வேகம் குறைந்ததால், அதன்பின் சைன்ஸும் அவரை முந்தினார். எதிர்பார்த்ததை விட மிகவும் சீக்கிரமே பிட் எடுத்ததால், மூன்றாவது இடத்துக்கே வெர்ஸ்டப்பன் போட்டியிடுவார் என்ற நிலை ஏற்பட்டது.
வெர்ஸ்டப்பனுக்கு ஒரு பக்கம் தடுமாற்றம் என்றால், முதல் லேப்பிலேயே ரேஸில் மிகப்பெரிய பின்னடைவை அடைந்தார் மற்றொரு ரெட் புல் வீரர் பெரஸ். ஜார்ஜ் ரஸலோடு அவர் போட்டியிட, ரஸலின் காரோடு மோதி டிராக்கிலிருந்து வெளியேறினார் பெரஸ். அதற்கு ரஸல் 5 நொடி பெனால்டி பெற்றார். அந்த விபத்தால் சேதமடைந்த பெரஸின் கார், அதன்பிறகு பெருமளவு முயற்சி செய்தும் எந்த முன்னேற்றமும் காண முடியாததால் முதல் ஆளாக ஓய்வு பெற்றார்.

முதல் இரண்டு இடங்களையும் ஃபெராரி பெற்றுவிடும் என்று நினைத்துக்கொண்டிருக்க, சைன்ஸின் காரில் இன்ஜின் பிரச்னை ஏற்பட்டு தீப்பற்றியது. அதனால், விர்சுவல் சேஃப்டி கார் கொண்டுவரப்பட்டது. இதைப் பயன்படுத்தி லெக்லர்க், வெர்ஸ்டப்பன் இருவரும் மீடியம் டயருக்கு மாறினர். அவர்களுக்கு இடையிலான நேரமும் குறைந்ததால், கடைசி கட்டத்தில் முதலிடத்துக்குப் பெரும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. லெக்லர்க்கின் காரில் திராட்டில் பிரச்னை வேறு ஏற்பட்டது. இருந்தாலும், எந்த டிராமாவும் இல்லாமல் முதலிடத்தில் முடித்தார் லெக்லர்க். வெர்ஸ்டப்பன், ஹாமில்டன் இருவரும் அடுத்த இரு போடியம் இடங்களைப் பிடித்தனர்.
இந்த ரேஸில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட மிக் ஷூமேக்கர் ஆறாவது இடம் பிடித்து அசத்தினார். கடந்த ரேஸில்தான் அவர் முதல் முறையாகப் புள்ளிகள் பெற்றிருந்தார். இப்போது 7 நாள் இடைவெளியில் மேலும் 8 புள்ளிகள் பெற்று அசத்தியிருக்கிறார் மிக் ஷூமேக்கர்!
புள்ளிப் பட்டியல் – டிரைவர்கள் சாம்பியன்ஷிப்
1. மேக்ஸ் வெர்ஸ்டப்பன் – 208
2. சார்ல் லெக்லர்க் – 170
3. செர்ஜியோ பெரஸ் – 151
4. கார்லோஸ் சைன்ஸ் – 133
5. ஜார்ஜ் ரஸல் – 128
6. லூயிஸ் ஹாமில்டன் – 109
7. லாண்டோ நாரிஸ் – 64
8. எஸ்டபன் ஓகான் – 52
9. வால்ட்டேரி போட்டாஸ் – 46
10. ஃபெர்னாண்டோ அலோன்சோ – 29
11. கெவின் மேக்னசன் – 22
12. டேனியல் ரிக்கார்டோ – 17
13. பியர் கேஸ்லி – 16
14. செபாஸ்டியன் வெட்டல் – 15
15. மிக் ஷூமேக்கர் – 12
16. யூகி சுனோடா – 11
17. ஜோ குவான்யூ – 5
18. அலெக்ஸ் ஆல்பான் – 3
19. லான்ஸ் ஸ்டிரோல் – 3
20. நிகோலஸ் லடிஃபி – 0
21. நிகோ ஹல்கென்பெர்க் – 0
புள்ளிப் பட்டியல் – அணிகள் சாம்பியன்ஷிப்
1. ரெட் புல் – 359
2. ஃபெராரி – 303
3. மெர்சீடிஸ் – 237
4. மெக்லரன் – 81
5. ஆல்பைன் – 81
6. ஆல்ஃபா ரோமியோ – 51
7. ஹாஸ் – 34
8. ஆல்ஃபா டௌரி – 27
9. ஆஸ்டன் மார்டின் – 18
10. வில்லியம்ஸ் – 3