முதல் நாளே குழிப்பிட்சைப் போட்டதில் இலங்கை சிக்கியது. நேதன் லயன், ஸ்வெப்சன் இருவரும் 150க்குள் இலங்கையை சுருட்டியிருப்பார்கள், ஆனால் நிரோஷன் டிக்வெல்லா இறங்கி எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸை ஆடி 59 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 58 ரன்களை விளாச இவரும் ரமேஷ் மெண்டிஸும் (22) இணைந்து 7வது விக்கெட்டுக்காக 54 ரன்களையும் சேர்க்க இலங்கை அணி 212 ரன்களை எட்டியது.
முதல் நாள் பிட்சே உடையத் தொடங்கியது. முதலில் பதும் நிசாங்கா (23) கமின்ஸ் பந்தில் வெளியேறினார். குசால் மெண்டிஸ் 3 ரன்களில் ஸ்டார்கும் விக்கெட் கீப்பர் கேரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, கேப்டன் திமுத் கருணரத்னே (28), அஞ்சேலோ மேத்யூஸ் (39), ஆகியோர் விக்கெட்டை நேதன் லயன் வீழ்த்த தனஞ்ஜய டிசில்வா (14), மற்றும் சந்திமால் (0) ஆகியோரை லெக் ஸ்பின்னர் ஸ்வெப்சன் காலி செய்தார்.
97/5-ல் இறங்கினார் நிரோஷன் டிக்வெல்லா. அதுவும் ஹாட்ரிக் பந்தை எதிர்கொள்ளும் முகமாக இறங்கினார். உடையும் பிட்சில் ஸ்பின்னை தாக்கும் ஸ்ட்ரோக்குகளான ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப்களை ஆடினார். 42 பந்துகளில் அரைசதம் கண்டார். பிறகு 58 பந்துகளில் இவரும் கேரி கேட்சுக்கு லயன் பந்தில் அவுட் ஆக. ரமேஷ் மெண்டிஸ் லயன் பந்தில் எல்.பி.ஆக, வாண்டர்சே, லசித் எம்புல்டேனியா ஆகியோரை முறையே ஸ்வெப்சன் மற்றும் லயன் காலி செய்ய இலங்கை அணி 59 ஓவர்களில் 212 ரன்களுக்குச் சுருண்டது.
நேதன் லயன் 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஸ்டார்க் கமின்ஸ் தலா ஒரு விக்கெட்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் அதிரடியாகத் தொடங்கினார் 5 பவுண்டரிகளுடன் 24 பந்தில் 25 விளாச, கவாஜாவும் இவரும் 47 ரன்களை 9 ஒவர்களில் எடுத்து ஆக்ரோஷ தொடக்கம் கொடுத்தனர், ஆனால் ஆஃப் ஸ்பின் பவுலர் ரமேஷ் மெண்டிஸின் தூஸ்ராவுக்கு பிளம்ப் எல்.பி.ஆனார். லபுஷேன் 13 ரன்கள் எடுத்து ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி பாயிண்டில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். கவாஜாதான் அவரை இழுத்து விட்டார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் கிரீசில் உஸ்மான் கவாஜா 47 ரன்களுடனும் ட்ராவிஸ் ஹெட் 6 ரன்களுடனும் இருக்கின்றனர், ஆஸ்திரேலியா 98/3.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.