Aus v Ind : 'ஒயில்ட் ஃபயராக ஹெட்; இந்தியாவை காப்பாற்றிய பும்ரா' – இரண்டாம் நாளில் என்ன நடந்தது?

Share

பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. பிரிஸ்பேனில் நடந்து வரும் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 405 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருக்கிறது. இந்தியா சார்பில் பும்ரா மட்டுமே உயிரை கொடுத்து பந்து வீசி வருகிறார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் என்ன நடந்தது?

ரோஹித் சர்மா – AUS v IND

முதலில் நேற்றைய நாளில் மழையின் குறுக்கீட்டோடு நடந்த சொற்ப விஷயங்களை பற்றி பார்த்துவிடுவோம். ரோஹித்தான் டாஸை வென்றார். பிட்ச்சையும் மேகங்கள் சூழ்ந்து நின்ற வானிலையையும் கணக்கில் கொண்டு முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். அதன்படி இந்தியாவும் பந்துவீசியது. இந்திய பந்துவீச்சு படையில் ஆகாஷ் தீப்பும் ஜடேஜாவும் இணைந்திருந்தனர். ஹர்ஷித் ராணாவும் அஷ்வினும் பென்ச்சுக்கு சென்றிருந்தனர். முதல் நாளில் மழை குறுக்கீட்டுக்கு முன்பாக வீசப்பட்ட பதிமூன்று சொச்சம் ஓவர்களையுமே இந்தியா கொஞ்சம் சிறப்பாகவே வீசியிருந்தது. பும்ரா, சிராஜ், ஆகாஷ்தீப் மூவருமே ஆளுக்கொரு லைன் & லெந்தை பிடித்துக் கொண்டு கவனமாக வீசியிருந்தனர். பும்ரா வழக்கம்போலவே டைட்டான லைன் & லெந்த்தில் ஆங்கிள் இன் ஆகவும் அவே ஆகவும் வீசி திறம்பட செயல்பட்டிருந்தார். ஆனாலும் முதல் நாளில் விக்கெட் கிடைக்கவில்லை.

இரண்டாம் நாளிலும் இதே நிலைதான் நீடிக்குமோ என நினைத்த நிலையில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஓப்பனர்கள் மெக்ஸ்வீனி, கவாஜா இருவரின் விக்கெட்டையும் பும்ரா வீழ்த்திக் கொடுத்தார். கரியரின் தொடக்கத்திலேயே பும்ரா மாதிரியான வீரரை எதிர்கொள்வது எனக்கு நல்ல பயனை கொடுக்கும் என மெக் ஸ்வீனி பேசியிருந்தார். அதெல்லாம் சரிதான். ஆனால், பும்ராவுக்கு சவாலளிக்கும் வகையில் எதாவது செய்ய வேண்டும் அல்லவா? அவரை நம்பிக்கையோடு எதிர்கொள்ள கொஞ்சமேனும் முயல வேண்டும் அல்லவா? ஆனால், இது எதையுமே மெக் ஸ்வீனி செய்வதில்லை. நான்காவது ஸ்டம்ப் லைனில் பும்ரா வீசினாலே உள்ளே – வெளியே புரியாமல் எட்ஜ் ஆகி அவுட் ஆகிவிடுகிறார். இங்கேயும் அப்படித்தான். கவாஜாவும் அதே கதைதான். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் இன் டெலிவரிக்களாக ஏற்றி செட் ஆக்கிவிட்டு கொஞ்சம் திருப்பினால் காலியாகிவிடுகிறார்.

பும்ரா

கவாஜா ரிஷப் பண்ட்டிடமும் மெக் ஸ்வீனி ஸ்லிப்பில் நின்ற விராட் கோலியிடமும் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர். இதன்பின்னர், லபுஷேனும் ஸ்மித்தும் கூட்டணி சேர்ந்தனர். இருவருமே நின்று நிதானமாக பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கான அடித்தளத்தை அமைத்தனர். இடையில் சிராஜூம் லபுஷேனும் சிறுபிள்ளைகளாக மாறி ஸ்டம்பிலிருந்த பெய்ல்ஸை ஆளாளுக்கு மாற்றி வைத்து ஆட்டத்தில் கொஞ்சல் மசாலாவை தூவ முயன்றனர். இந்தத் தொடரில் நன்றாக செட்டில் ஆகிவிட்டு அதை நல்ல இன்னிங்ஸாக மாற்றாமல் லபுஷேன் பல முறை அவுட் ஆகியிருக்கிறார். இங்கேயும் 55 பந்துகளை எதிர்கொண்டு நின்றுவிட்டு 12 ரன்களில் அவுட் ஆகிவிட்டார். நிதீஷ் ரெட்டி நல்ல வைடாக ஷாட் ஆட வசதியாக வீசிக்கொடுத்த பந்தில் பேட்டை விட்டு எட்ஜ் ஆகி வெளியேறினார். ஆஸ்திரேலியா 75-3 என கொஞ்சம் திணறியது. போட்டி இந்தியா பக்கம் திரும்புவதை போல தோன்றியது. ஆனால், இந்த சமயத்தில்தான் ட்ராவிஸ் ஹெட் உள்ளே வந்தார். வழக்கம்போல இந்தியாவின் தலைவலியாகவும் மாறினார்.

ஸ்டீவ் ஸ்மித் ஒரு பக்கம் செட்டில் ஆகி நின்று தன்னுடைய வழக்கமான கூரான ஆட்டத்தை பக்குவமாக ஆடிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ட்ராவிஸ் ஹெட் இதை வெள்ளை உடை அணிந்த ஓடிஐ ஆக நினைத்து ஆடத் தொடங்கினார். குறிப்பாக, இந்தியாவின் நான்காவது ஐந்தாவது பௌலர்களான ஜடேஜாவையும் நிதீஷ் ரெட்டியையும் சிறப்பாக அட்டாக் செய்தார். ஒருபக்கம் ஹெட் வேகமாக ரன்கள் சேர்க்க இன்னொரு பக்கம் ஸ்மித் நின்று விக்கெட்டை காத்து ஆட ஆஸ்திரேலியா திடமாக முன்னேறியது. சீரான இடைவெளிகளில் பவுண்டரிகளை அடித்து வேகமாக முன்னேறிய ஹெட் 118 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். இந்தியாவுக்கு எதிராகவென்றால் மட்டும் ஹெட் தனி எனர்ஜியோடு ஆடுகிறார். எத்தனையோ முறை இந்திய அணியை அவர் அடித்து துவைத்த போதும் இந்திய அணியால் மட்டும் அவருக்கெதிராக சரியான வியூகங்களை வகுக்கவே முடியவில்லை.

ஹெட்

அவருடைய கரியரிலேயே மொத்தமாக 14% பந்துகளை மட்டும்தான் லீவ் செய்திருக்கிறார். கடைசியாக அடித்திருக்கும் 7 சதங்களில் மொத்தமாக சேர்த்தே 65 பந்துகளைத்தான் லீவ் செய்திருக்கிறாராம். இப்படியொரு புள்ளிவிவரத்தை ஹர்ஷா போக்ளே வர்ணனையில் அடுக்கினார். ஹெட் ஆடுவது அட்டாக்கிங்கான ஆட்டம், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பௌலர்களும் அக்ரஸிவ்வாக அட்டாக்கிங்காக வீச வேண்டும். ஆனால், இருக்கிற அத்தனை பீல்டர்களையும் டீப்பில் வைத்து பவுண்டரிக்களை குறைப்பதிலேயே ரோஹித் சர்மா குறியாக இருந்தார். ஹெட்டுக்கு எதிராக உங்களின் நோக்கமே விக்கெட் எடுக்க வேண்டும் என்பதாக இல்லையெனில், விக்கெட் மட்டும் எப்படி கிடைக்கும்? ஹெட் ஒருபுறம் அதிரடியாக சதமடிக்க, இன்னொரு பக்கம் ஸ்மித் நின்று நிதானமாக பக்குவமாக பந்துகளை எதிர்கொண்டு அவரும் சதத்தை எட்டிவிட்டார். இருவரும் இணைந்து 241 ரன்களை சேர்த்தனர்.

ஆஸ்திரேலியா வலுவான நிலைக்கு வந்தது. இவர்களின் விக்கெட்டையும் பும்ராதான் வீழ்த்த வேண்டியிருந்தது. 80 ஓவர்கள் முடிந்தவுடன் புதிய பந்தை இந்திய அணி எடுத்தது. அடுத்தடுத்து ஸ்மித் மற்றும் ஹெட்டின் விக்கெட்டை பும்ரா வீழ்த்திக் கொடுத்தார். இருவருமே ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துக்கு அக்ரஸிவ்வாக ஷாட் ஆட முயன்று எட்ஜ் ஆகினர். 152 ரன்களில் ஹெட் அப்படி அவுட் ஆனதில் ஆச்சர்யமில்லை. ஏனெனில், அவர் அத்தனை நேரமும் இப்படித்தான் ரிஸ்க் எடுத்து ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், ஸ்மித் கட்டுக்கோப்பாக ஆடிக்கொண்டிருந்தார். அவர் நிதானத்தை இழந்து பேட்டை விட்டதுதான் ஆச்சர்யமாக இருந்தது. 101 ரன்களில் ஸ்மித் பெவிலியனுக்கு திரும்பினார். ‘எப்போதுமே நீங்கள் சதத்தை எட்டியவுடன் நான் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு சென்றுவிட வேண்டும். ஏனெனில், அவ்வளவு நேரம் கவனக்குவிப்போடு ஆடிவிட்டு சதமடித்தவுடன் ஒருவித கொண்டாட்டத்தில் கவனச்சிதறல் அடைந்திருப்போம்.

ஸ்மித்

நான் ஸ்ட்ரைக்கர் எண்ட்டில் நின்று நிதானத்துக்கு வந்தவுடன் மீண்டும் உங்களின் ஆட்டத்தை தொடரலாம்.’ என கவாஸ்கர் அவுட் ஆகி பெவிலியனுக்கு சென்ற ஸ்மித்துக்கு வர்ணனையில் இருந்து அட்வைஸ் செய்து கொண்டிருந்தார். இவர்களோடு சேர்த்து மார்ஷின் விக்கெட்டையும் பும்ரா எடுக்க அவருக்கு மீண்டுமொரு 5 விக்கெட் ஹால் கிடைத்தது. பும்ரா இல்லாத ஒரு இந்திய அணியை யோசித்தே பார்க்க முடியவில்லை. ஒட்டுமொத்த அணியையும் தன்னுடைய மணிக்கட்டில் சுமந்து கொண்டு நிற்கிறார்.

இதன்பிறகு அலெக்ஸ் கேரியும் கம்மின்ஸூம் கொஞ்ச நேரம் நின்று ரன்களை சேர்த்தனர். கம்மின்ஸை சிராஜ் 20 ரன்களில் வெளியேற்றினார். ஆட்டம் முடிகையில் அலெக்ஸ் கேரியும் ஸ்டார்க்கும் ஆடிக்கொண்டிருந்தனர். ஆஸ்திரேலியா 405-7 என்ற நிலையில் இருந்தது.

மூன்றாம் நாளின் முதல் செஷனின் முற்பகுதியிலேயே இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்தியாவின் நிலை சிரமமாகிவிடும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com