அதையெல்லாம் விடுங்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்ததே. அப்போதும் ஒரு டெஸ்ட் போட்டி சேப்பாக்கத்தில் நடந்திருந்தது. அந்தப் போட்டியிலும் அட்டகாசமாக ஆடி சதமடித்திருந்தார் அஷ்வின். டெஸ்ட் போட்டிகளில் சென்னை சேப்பாக்கத்தில் வைத்து மட்டும் 7 இன்னிங்ஸ்களில் ஆடியிருக்கும் அஷ்வின் 250 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார். ஆவரேஜ் ஏறக்குறைய 45 ஆக இருக்கிறது. சமீபத்தில் TNPL தொடரில் கூட திண்டுக்கல் டிராகன்ஸூக்காக சேப்பாக்கத்தில் ஓப்பனிங் இறங்கி அணியை சாம்பியனாக்கியிருந்தார்.
இந்த ரெக்காட்டுகளை சுமந்துகொண்டுதான் இன்றைக்கும் கலைஞர் கருணாநிதி ஸ்டாண்டின் பெவிலியனிலிருந்து அஷ்வின் பேட் செய்ய வந்தார். சூழல் ரொம்பவே சிக்கலாக இருந்தது. இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்தது. 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள். அழுத்தமான நிலை. வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக சுழலுக்கு ஒத்துழைக்கும் பிட்ச் இந்த முறை வேகத்துக்கு ஒத்துழைக்கிறது. பந்து நன்றாக பவுன்ஸ் ஆகிறது. சில சமயங்களில் திடீரென திரும்பியது. இதெல்லாம்தான் மற்ற வீரர்களுக்கு தொல்லையாக இருந்தது. ஆனால், அஷ்வினுக்கு அப்படியில்லை. அவர் சேப்பாக்கத்தில் இதேமாதிரி நூற்றுக்கணக்கான ட்விஸ்ட்களை எதிர்கொண்டிருக்கிறார். உள்ளே இறங்கியவுடனேயே கவுண்டர் அட்டாக் செய்ய ஆரம்பித்தார். ஓடிஐ போட்டியில் ஆடுவதை போல ஆடினார். எல்லாரையுமே அட்டாக் செய்தார். அதுவரை சிறப்பாக வீசிக்கொண்டிருந்த ஹஸன் மஹ்முத்தையும் அட்டாக் செய்தார். பவுண்டரிகள் அடித்தார்.