Ananda Vikatan – 29 April 2015 – நல்ல சோறு

Share

ரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதால் மட்டுமே, ஆரோக்கியம் நம் உடலில்

குடியேறிவிடுமா? நாம் உண்ணும் உணவு அளவுக்கு, உடலுக்கு உழைப்பும் தேவை. அப்போதுதான் ஆரோக்கியம் சாத்தியம். நம் தாத்தா, பாட்டியெல்லாம் கேப்பை, குதிரைவாலி சாப்பிட்டுவிட்டு, அது துளியும் மிச்சம் இல்லாமல் செரிக்கும் அளவுக்கு வயல்களில் மணிக்கணக்கில் வேலை செய்தார்கள். அதனால்தான்

டயபடிக்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலே ஆயுள் முழுக்க வலம்வந்தார்கள். 

ஆக, பாரம்பர்ய உணவுக்குத் திரும்புவது போல, உடல் உழைப்பை மீட்டெடுப்பதும் இப்போது அதிஅவசியம். வருடக்கணக்கில் வளையாமல் இருந்த உடல், திடீரென ஒரே நாளில் அதிக உழைப்புக்குத் தயாராகிவிடாது. அதைப் படிப்படியாக வளைத்து நம் வழிக்குக் கொண்டுவர வேண்டும். ஆனால், குழந்தைகளுக்கு அந்தப் பிரச்னை இல்லை. இந்த நொடி, இந்த நிமிடத்தில் இருந்தே அவர்களிடம் அந்த மாற்றத்தை உண்டாக்கலாம். நொறுக்குத் தீனிகளைக் கொறித்தபடி, டி.வி முன்பு புதைந்திருக்கும் குழந்தை களுக்கு, பாரம்பர்ய உணவுகளோடு நம் பாரம்பர்ய விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்துவது அவசியம்.

அட… எதுக்கெடுத்தாலும் பாரம்பர்யம், பாரம்பர்யம்னு பேசிட்டு! காலத்துக்கு ஏத்த மாதிரி மாற வேணாமா?’ என்ற சலிப்புக் குரல் எழுவதை உணர முடிகிறது. முழுக்க பாரம்பர்யத்துக்குத் திரும்புவது என, காலத்தை பின்னோக்கி இழுக்க நினைப்பது அபத்தம்தான். ஆனால், பழமையில் இருக்கும் நன்மைகளைக் கருத்தில்கொள்ளாமல், அதை முழுக்கப் புறக்கணிப்பதும் அதே அளவு அபத்தம்தானே!

கோடை விடுமுறை வகுப்புகளுக்காக ஆயிரங்களில் கட்டணம் செலுத்தி, டைம்டேபிள் போட்டு,

குழந்தைகளைப் பாடாய்ப்படுத்துகிறோம். ஆனால், எந்தக் கட்டணமும் இன்றி, நேரக் கட்டுப்பாடு இல்லாமல், கிராமத்துக் களத்துமேடுகளில் ஒரு பறவையைப்போல் விளையாடித் திரிகிற ஒரு சிறுவனின் மகிழ்ச்சியை, கட்டண வகுப்புகள் நம் குழந்தைகளுக்குத் தருமா? உச்சி வெயிலில் கிணற்றிலும் ஆற்றிலும் நீச்சலடிக்கிற ஒரு சிறுவனின் மகிழ்ச்சியும், நான்கு புறங்களும் சுவர்களால் மூடப்பட்ட நீச்சல் குளத்தில் குளோரின் தண்ணீரில் நீச்சலடிக்கிற ஒரு சிறுவனின் மகிழ்ச்சியும் ஒன்றாக முடியுமா? சம்மர் வகுப்புகளில் ஏ.சி. அறைகளில் கற்றுக்கொள்கிற செஸ்ஸும், கேரம்போர்டும் மட்டுமே விளையாட்டு ஆகாது.

சரி… கிராமங்களுக்குச் செல்ல வாய்ப்பு இல்லாதவர்களை விட்டு விடலாம், கிராமங்களில் வசிக்க வாய்ப்பு இல்லாதவர்களையும் விட்டுவிடலாம். ‘ரெண்டு மாச லீவுல எதுக்கு தாத்தா, பாட்டி வீட்டுக்குப் போயிட்டு? மண்ணுல விளையாடினா ஏதாவது நோய் வரும். பேசாம சம்மர் கிளாஸ் போ’ எனச் சொல்பவர்கள் யோசிக்கலாமே! ஒரு மணி நேரத்துக்கு 10 முறை ஹேண்ட் வாஷால் கை கழுவும் நகரத்துக்் குழந்தைகளைவிட, புழுதியில் விளையாடும் கிராமத்துக் குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். வயல்வரப்புகளில் நடந்து, நண்டு பிடித்து, வாய்க்காலில் குதித்து, நுங்கு வண்டி உருட்டி, கூட்டாஞ்சோறு  சமைத்து விளையாடும் குழந்தைகள் மன நிம்மதியுடனும் ஆரோக்கியத் துடனும் வளர்கிறார்கள். அதுவே, ‘என்னை ஏன் ஸ்ட்ரெஸ் ஆக்குற?’ என மாநகரக் குழந்தைகள் தலைமுடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

கிராமத்தில் விளையாடும் நொண்டி விளையாட்டு, உடலை எவ்வளவு வலுவாக்கும் தெரியுமா? அந்தத் துள்ளாட்டம் சுரப்புகளைத் தூண்டி இனப்பெருக்க உறுப்புகளை வலுப்பெறச் செய்யும். சீறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் வராமல் காப்பதில் தலையில் வட்டை வைத்துக்கொண்டு, ‘பூவா… தலையா…’ எனக் கேட்கும் நொண்டி விளையாட்டு் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த நன்மை எந்த பிளே ஸ்டேஷன் விளையாட்டிலாவது விளையுமா? நொண்டி விளையாடிய களைப்பில், உட்கார்ந்து விளையாடும் பல்லாங்குழி விளையாட்டின் மூலம் எளிய முறையில் கணக்கை சொல்லித் தரலாம். சித்திரை வெயிலில் வேப்பமரத்தடியில் விளையாடும் தாயக்கட்டை விளையாட்டு, அடுத்த நொடியில் என்ன செய்ய வேண்டும் என்கிற சமயோஜிதப் புத்தியை ஊக்குவிக்கும்.

கண்களை மூடிக்கொண்டு விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு, காதுகளால் பார்க்க கற்றுத்தரும். முதுகில் எழுதிக் கண்டுபிடிக்கும் விளையாட்டு, நுண்ணறிவையும் உற்றுநோக்கும் ஆற்றலையும் ஒருசேரத் தரும். கோலிக்குண்டு, உண்டி வில், பந்து எறிதல்… போன்ற விளையாட்டுக்கள் பார்வையைக் கூர்மையாக்கி, சிறுவயதிலேயே கண்ணாடியைத் தவிர்க்கும். சிலம்பம், மான்கொம்பாட்டம், கோலாட்டம் போன்ற விளையாட்டுக்கள் உடலையும், மனதையும் ஒருசேர உறுதி செய்யும். கடை, கோயில், முற்றம், கிணறு… எல்லாம் உருவாக்கி கூட்டாஞ்சோறு சமைத்து விளையாடும்போது ஒற்றுமைப் பண்பு சிறுவர்களிடத்தில் இயல்பாகவே வரும். ஓடிப்பிடித்து விளையாடும்போது ஒபிஸிட்டியோ, அதனால் வரும் உப விளைவுகளோ இல்லாமல் போகும். எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகள் குழந்தைகளாக வளர்வார்கள். நகரங்கள் தரும் மன அழுத்தத்தில் இருந்து, குழந்தைகளைக் காக்க இந்த விளையாட்டுக்கள்தான் அவசியம்!

– பரிமாறலாம்…

ஆரோக்கியமே அத்தியாவசியம்!  

இந்தத் தொடரின் ஆசிரியர் ராஜமுருகன், திருச்செங்கோட்டுக்காரர். நவீன உணவுப் பழக்கங்களால் வரும் உடல்நோய்களின் பாதிப்புகளைப் பார்த்து அதிர்ந்து, பாரம்பர்ய உணவுப் பழக்கத்தைப் பரவலாக்க ‘நல்ல சோறு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்திவருகிறார். கருத்தரங்குகளில் சிறுதானிய உணவு பற்றி பேசுவது, சிறுதானிய உணவுத் திருவிழாக்களை நடத்துவது, விவசாயிகளிடம் இருந்து நேரடியாகப் பொருட்களைக் கொள்முதல் செய்து மக்களிடம் சேர்ப்பது… என தன் ஒவ்வொரு செயல்பாட்டையும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்காக அர்ப்பணித்திருப்பவர். 

வரகு அடை பிரட்டல்

தேவையான பொருட்கள்

வரகு  புழுங்கல் 1 கோப்பை

கடலைப் பருப்பு 1/2 கோப்பை

பாசிப் பருப்பு 1/2 கோப்பை

வரமிளகாய் 4

சீரகம் 1 தேக்கரண்டி

தேங்காய்த் துருவல்   4 மேசைக்கரண்டி

பச்சைமிளகாய் 2

இஞ்சி சிறு துண்டு

தயிர் 1 கோப்பை

வெங்காயம் 1

கடுகு சிறிய அளவு

கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

* அரிசியையும் பருப்பையும் தனியாக நான்கு மணி நேரம் ஊறவைத்து, வரமிளகாய், சீரகம் சேர்த்து அரைக்கவும்.  இந்த மாவை அடையாக ஊற்றி எடுத்து, துண்டுகளாக்கவும். தேங்காயுடன் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைக்கவும். சூடான எண்ணெயில் கடுகைத் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய அடையைச் சேர்த்து பிரட்டி, தேங்காய் விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.  தயிரைச் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்துவிடவும். வரகு அடை பிரட்டல் தயார்.

வரகரிசியின் மாவுச்சத்தும் பருப்பின் புரதமும் சமச்சீராகக் கிடைக்கும். தயிர், உடல் சூட்டைத் தணிக்கும். இதனுடன் இஞ்சி, சீரகம் சேர்வதால், ஜீரணம் சீராக நடக்கும்.

சோள கார பணியாரம்

தேவையான பொருட்கள்

சோள அரிசி   1 குவளை

உளுந்து   1/4 குவளை

வெந்தயம்   1 மேசைக் கரண்டி

எண்ணெய்   3 மேசைக் கரண்டி

கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு   1 தேக்கரண்டி

மிளகாய்   3

சீரகம்   1 தேக்கரண்டி

கறிவேப்பிலை   2 கொத்து

சின்ன வெங்காயம்

  1/2 கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* சோள அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை நன்கு ஊறவைத்து உப்பு சேர்த்து அரைத்துப் புளிக்கவைக்கவும்.  எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து சீரகம், சின்ன வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து நன்கு வதக்கவும். இதைப் புளித்த மாவுடன் கலந்து பணியாரச் சட்டியில் எண்ணெய்  தடவி, மாவை ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். புதினா துவையலுடன் இதைப் பரிமாறினால், புத்துணர்ச்சியும் குளிர்ச்சியும் நிச்சயம்!

சோளம், இரும்புச்சத்து நிறைந்தது. இது, ரத்தசோகையைக் குறைக்கும். இதில் விட்டமின் பி3 எனும் உயிர்ச்சத்து நிறைந்ததுள்ளதால், இதயம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க உதவும்!

ஒரு குடம் தண்ணி ஊத்தி…

எங்கும் எப்போதும் காற்று மாசுபடும் இந்தக் காலத்தில், பிராண வாயுவை உற்பத்திசெய்ய தாவரங்கள்தான் நம் கடைசி நம்பிக்கை. பிராண வாயு உற்பத்தியில் துளசிக்கு இணையே இல்லை. வீட்டில் இருக்கும் சின்ன இடத்தில்கூட, ஒரு தொட்டியில் துளசியை நட்டுவைத்தால், பிராண வாயு கிடைக்கும். வீட்டில் வீணாகும் பிளாஸ்டிக் பைகளில் மண் நிரப்பி மா, புளி, சப்போட்டா, சீத்தாப்பழம், சிவப்பு கொய்யா, நாட்டுப் பப்பாளி… என கிடைக்கும் விதைகளை குழந்தைகளிடம் தந்து நடச் சொல்லலாம். குழந்தைகள் விளையாட்டாகச் செய்தாலும், தன் முயற்சியால் உயிர் பெறும் செடிகளைப் பார்க்கும்போது, குழந்தையின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com