Ananda Vikatan – 22 April 2015 – நல்ல சோறு

Share

ணவு… பசித்தால் சாப்பிடும் வஸ்து அல்ல; நம் ஆயுளை, ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் அத்தியாவசிய எரிபொருள். ஆனால், ஸ்மார்ட் போன்களில் சார்ஜை எப்படித் தேக்கிக்கொள்வது என யோசிப்பதில் காட்டும் அக்கறையின் ஒரு சதவிகிதத்தைக்கூட, உணவிலும் உணவுக்கான மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பதிலும் நாம் காட்டுவதே இல்லை! 

‘எங்க காலத்துல நாங்க ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கும் என்ன எல்லாம் கைப்பக்குவம் காட்டினோம் தெரியுமா?’ என வீட்டில் பெரியவர்கள் ஆரம்பித்தால், அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து ஓடுகிறோம். ‘ஒரு போன் பண்ணா சாப்பாடு வருது. இதுக்குப்போய் வறுத்து, பொடிச்சு, அரைச்சு, தாளிச்சுனு அதகளம் பண்ணுவாங்களா? நாலு இட்லிக்காக நாலு மணி நேரம் சமையல் அறையில் இருக்க முடியுமா?’ என்ற நம் பதில், மேலோட்டமாகச் சரியானதாகக்கூடத் தோன்றலாம். ஆனால், கொஞ்சம் உற்றுப் பாருங்கள். இன்றைக்கு 70 வயதிலும் முடி நரைக்காமல், கண்ணாடி அணியாமல், ஆட்டோவுக்காகக் காத்திருக்காமல் மைல் கணக்கில் அவர்களால் நடக்க முடிகிறது என்றால், இளமையில் அவர்கள் சாப்பிட்ட உணவுகளே அதற்குக் காரணம்.

‘யூத்’ பட்டத்துடன் வளையவரும் நம்மில் பலருக்கும் மூன்று மாடி ஏறினாலே மூச்சுவாங்குகிறது. அவ்வளவு ஏன்… ஐந்து நிமிடங்கள் சேர்ந்தாற்போல் நடந்தால், ‘கால் வலிக்குது, தூக்கிக்கோ’ என கை நீட்டுகிறார்கள் குழந்தைகள். அவர்கள் வயதில் நம்மை யார் தூக்கிச் சுமந்தார்கள்? காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பினால், மாலை வரை தெருக்களில்தான் ஓடியாடிச் சுற்றிக்கொண்டிருந்தோம். இப்போது டி.வி முன் அமர்ந்து பிரெஞ்சு ஃப்ரைஸ் சாப்பிடும் கொழுக்மொழுக் குழந்தைகள் சோர்ந்து இருப்பதைப்போல நம் குழந்தைப் பருவம் இல்லை. காரணம்… புஷ்டி, போஷாக்கை அள்ளிக்கொடுக்கும் பெருந்தீனி உணவுகளை நாம் சாப்பிட்டதே இல்லை. வெளிநாட்டு சாக்லேட்கள், பாக்கெட் உணவுகள் என எதையும் நம் நாவு ருசித்தது இல்லை.

தேங்காய்ப் பால் முறுக்கு, ஓலை பக்கோடா, வெல்ல அதிரசம்… என மணக்க மணக்க மரச்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயில் பொரித்த வீட்டுப் பண்டங்களைத்தான் நாம் சாப்பிட்டோம். அடுக்குப் பானையிலும் அடுக்களைப் பரணிலும் ஒளித்துவைத்து நம் அம்மாக்கள் தந்த இந்தப் பண்டங்களின் அருகில், காற்று அடைத்த இன்றைய சிப்ஸ் பாக்கெட்கள் வர முடியுமா? இப்படி அன்பும் அக்கறையுமாகத் தயாரிக்கப்பட்ட சிறுதீனிகள் குழந்தைகளுக்குப் பெரும் பலம் கொடுக்கும்.  

‘அட… ஆரம்பிச்சுட்டாங்களா பாரம்பர்ய உணவுப் பெருமை பாடுறதை? முன்னாடி எல்லாம் பெண்கள் வெளியே வேலைக்குப் போறதே இல்லை. அதனால கிச்சன்லயே கிடந்து சமையல் பண்ணாங்க. ஆனா, இன்னைக்கு நிலைமை என்ன? என் அப்பா ஆட்டோ காசு 50 ரூபாயை மிச்சப்படுத்த, 30 நிமிஷம் நடந்தார். நான் 30 நிமிஷத்தை மிச்சப்படுத்த, ஆட்டோவுக்கு 150 ரூபாய்கூடக் கொடுப்பேன். அந்த அளவுக்கு நேரம் இல்லாம பரபரனு எல்லாரும் ஓடிட்டு இருக்கோம். அதனாலதான் குழந்தைகளுக்கு நல்லதுன்னு விற்கிற ஊட்டச்சத்து பானங்களை, உணவுப் பொருட்களை வாங்க கொஞ்சம் எக்ஸ்ட்ரா காசு கொடுக்கிறோம். இந்த அவசர யுகத்தில் இதுவே பெருசு’ எனப் பொங்கிப் பொருமுவார்கள் பலர்.

ஒரு தனிமனிதனையே இந்த அளவுக்கு நிர்பந்திக்கும் இந்த அவசர உலகம், கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டும் சும்மா விட்டுவைக்குமா? வியாபாரத் தந்திரமே தாரக மந்திரமாகக்கொண்டு செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உணவு அரசியலில், இன்னும் எத்தனை எத்தனை சூழ்ச்சிகள் மறைந்திருக்கின்றன என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. குழந்தைகளின் உடல் எடையை அதிகரித்து, எதிர்ப்பாற்றலைக் குறைத்து, உடலின் உப்புத்தன்மையை அதிகப்படுத்துவது எல்லாம்… கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் குப்பை உணவுகளே! குழந்தைகளை அதற்கு அடிமையாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கலகல விளம்பரம் முதல் கலர்ஃபுல் அலங்காரம் வரை, அனைத்து அம்சங்களிலும் ஈர்த்து இழுக்கின்றன அந்த உணவுகள்.

அதனால் அந்த வகையான உணவுகளை அடையாளம் கண்டு குழந்தைகளிடம் இருந்து அவற்றை ஒதுக்கிவைப்பது அவசியம். அந்த உணவின் தீமைகளையும் பாதிப்புகளையும் எடுத்துக் கூறி, குழந்தைகளுக்கான தின்பண்டங்களை ஆரோக்கியமானதாக மாற்றுவதே புத்திசாலித்தனம்.

நம் அடுப்படியில், நம் கைப்பக்குவத்தில் சமைப்பதைக் காட்டிலும், எங்கோ தயாரான, ஏதோவொரு சான்றிதழ் பெறப்பட்ட எந்த உணவும் சிறந்தது அல்ல. இந்த எண்ணத்தை மட்டும் மனதில் இருந்து அகற்றாமல் இருப்போம்!

– பரிமாறலாம்…

தினை பால் கொழுக்கட்டை

தேவையானப் பொருட்கள்

தினையரிசி – 100 கிராம்

நாட்டு வெல்லம் –  50 கிராம்

(சிறிது நீரில் கரைத்து வடித்தது)

தேங்காய்ப் பால் – 100 மி.லி

ஏலக்காய்த் தூள் –  1 சிட்டிகை

நெய் –   1 டேபிள் ஸ்பூன்

முந்திரி (நறுக்கியது) –  தேவைக்கு ஏற்ப

உப்பு –  தேவைக்கு ஏற்ப

தினையரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, உப்பு கலந்து கெட்டியாகவும் மிருதுவாகவும் அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவை சிறு நீள உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து அதோடு உருண்டைகளைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

வெல்ல நீரைச் சேர்த்து நன்கு வேகவிடவும். அதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய்த் தூளைத் தூவி எடுக்கவும். சூடாகவோ, குளிர்ச்சியாகவோ… எப்படிச் சாப்பிட்டாலும் தித்திக்கும் இந்தக் கொழுக்கட்டை!

கேழ்வரகு லட்டு

தேவையானப் பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 200 கிராம்

வெல்லம் (துருவியது) – 200 கிராம்

நெய் – 100 மி.லி

உப்பு – 1 சிட்டிகை

ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை

சுக்குத் தூள் – 1 சிட்டிகை

முந்திரி – தேவைக்கு ஏற்ப

திராட்சை – தேவைக்கு எற்ப

செய்முறை:

சிறு தீயில் கேழ்வரகு மாவை சிறிது நேரம் வறுக்கவும். இதோடு துருவிய வெல்லம் சேர்த்தால், வெல்லம் உருகி மாவு பிசையும் பதத்தில் வரும். இதோடு நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி, ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் சேர்த்து உருண்டையாகப் பிடித்தால், ருசியான லட்டு ரெடி!

என்ன பலன்?

தினை பால் கொழுக்கட்டை:

தினையில், நார்ச்சத்து மிக அதிகம். பி.காம்ப்ளெக்ஸ் விட்டமினும் தாது உப்புக்களும் நிறைந்திருக்கின்றன. சிறிதளவு ஃபோலிக் அமிலமும் இருக்கிறது. தேங்காய்ப் பாலில் கொழுப்புச் சத்தும் புரதமும், வெல்லத்தில் இரும்புச்சத்தும் கார்போஹைட்ரேட்டும் இருப்பதால், ஓடி விளையாடும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உடனடி உற்சாகம் கொடுக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வயதானவர்கள் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் உடனடி உற்சாகம் கொடுக்கும் டயட் உணவு இது.

கேழ்வரகு லட்டு:

இதை ‘எனர்ஜி லட்டு’ என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஊட்டச்சத்து நிறைந்தது. கேழ்வரகில் அதிக அளவு கால்சியம் இருப்பதால், எலும்பு வளர்ச்சிக்கு உதவும்; மாவுச்சத்தும் கிடைக்கும்.  சிறிது அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்களும் இருப்பதால் உடலுக்கு சக்தி அளிக்கும். சுக்கு, நல்ல ஜீரண சக்தியைக் கொடுத்து பசியைத் தூண்டும். ஆனால், அதிக உடல் பருமன் உள்ளவர்கள் தவிர்க்கலாம். எடை குறைந்த குழந்தைகளுக்குக் கொடுத்தால் எடை கூடுவார்கள்!

சர்க்கரை… அக்கறை!

குழந்தைகளுக்கு இனிப்பு தரும்போது வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக, நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துவதே நல்லது. ஆனால், நாட்டுச் சர்க்கரையிலும் கலப்படம் கண்களைக் கட்டுகிறது.  

சுத்தமான நாட்டுச் சர்க்கரை என்பது, கரும்புச் சாற்றில் இருந்து எடுப்பது. கரும்புச் சாற்றை அடுப்பில் காய்ச்சி, கொஞ்சம் விளக்கெண்ணெய் சேர்த்து, கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பொங்கிவரும் அழுக்கை நீக்க கொஞ்சமே கொஞ்சம் சுண்ணாம்பு சேர்ப்பார்கள். அவ்வாறு அழுக்கு நீக்கப்பட்ட வெல்லம், களிப் பதத்தில் இருக்கும். அதை ஒரு மரக்கொப்பரையில் பரத்தி, கொஞ்சம் கொஞ்சமாகத் துணியில் கட்டி தலைக்கு மேலே ஒரு சுற்றுச் சுற்றினால் வெல்லம் ஒரு வடிவத்துக்கு வரும். அதுவே களிப் பதத்தில் இருக்கும் வெல்லத்தை, மர அச்சில் ஊற்றினால் அச்சு வெல்லம் தயார். இதுதான் தரமான நாட்டுச் சர்க்கரையின் செய்முறை.

ஆனால், இப்போது வெல்லத்தின் நிறத்தை அதிகரிக்க சோடா உப்பு, சல்ஃபர், பொட்டாசியம், வாஷிங் சோடா… என பல வகை ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. எடையை அதிகரிக்க கோல மாவும் சேர்க்கப்படுகிறது. இந்த வகை வெல்லம் வெளிர்

மஞ்சள் நிறத்தில் இருக்கும். எனவே, அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும் நாட்டு வெல்லத்தையே வாங்க வேண்டும். நல்ல ஆற்றுப்பாசனத்தில், களிமண்ணில் வளரும் கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லம், அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வெல்லத்தை நாக்கில் வைத்தால், நாக்கு எரியக் கூடாது. இவை நல்ல வெல்லத்தைக் கண்டுபிடிப்பதற்கான சில வழிகள்!

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com