“இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்.” என்று அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்து, நாடெங்கிலும் அமித் ஷாவிற்கும், பா.ஜ.கவிற்கும் எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றன. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இன்று நாடாளுமன்றம் முன்பு அம்பேத்கரின் புகைப்படத்தை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்தும் நாடெங்கிலும் பலவேறு அரசியல் கட்சியினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் “நா.த.க’ ஒருங்கிணைப்பாளார் சீமான், “அம்பேத்கர்! அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ‘பேஷன்’ ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைக்கும்” என்கிறார் மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள். உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? சொர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சொன்னால் வாழும் பூமியையே சொர்க்கமாக மாற்ற முடியும்.