இந்த ஆண்டு மினி ஏலத்தில் 50 லட்சம் என அடிப்படைத் தொகை கொடுத்து ரஹானே வாங்கப்பட்ட போது உயராத புருவங்களில்லை, எழாத இளக்காரப் பேச்சுக்களில்லை, சிஎஸ்கே ரசிகர்களிடம்கூட இந்த முடிவுக்கு பெரிய ஆதரவில்லை; இதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. 2019 வரை ஒரளவு சிறப்பாகவே ஐபிஎல்லில் ஆடிவந்த ரஹானேவிற்கு 2020-க்குப் பிந்தைய ஐபிஎல் பயணம் சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கவில்லை. குறைந்த போட்டிகளில் வாய்ப்பு, அதில் சொற்ப ரன்களின் சேர்ப்பு என மோசமாகவே அத்தனையும் நடந்தேறியது. கடந்த மூன்று ஐபிஎல்களில் அவரது சராசரி ஸ்ட்ரைக்ரேட் 103.17 மட்டுமே. அக்காலத்தில் ஆடிய 18 போட்டிகளில் ஒரு அரைசதத்தை மட்டுமே அடித்திருந்தார். அதுவும் 2020-ல்.
சர்வதேச டி20 போட்டிகளில் அவர் ஆடியது 2016-ல் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக. சர்வதேச ஒருநாள் போட்டியிலும் 2018-ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஆடி 34 ரன்களை எடுத்த அந்தப் போட்டிக்குப்பின் இந்திய வெள்ளைப் பந்துலகம் அவரை மறந்து கடந்து விட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 2022 ஜனவரியில் ஆடிய போட்டிக்குப்பிறகு இந்திய ஜெர்ஸி அவரை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தே விட்டது. இப்படி டெஸ்டே அடைக்கலம் தராத ஒரு வீரருக்கு சிஎஸ்கே புகலிடம் தந்ததுதான் புரியாத புதிராக இருந்து வந்தது. Trust the process என்னும் தோனியின் வார்த்தைகள் இங்கேதான் உயிர்பெறுகின்றன.