`டீப் ஃபேக் எனப்படும் இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மூலமாகத்தான் ‘இந்தியன் -2’ திரைப்படத்தில் விவேக்கின் கதாபாத்திரத்தை சாத்தியப்படுத்தியிருந்தார்கள். ‘கோட்’ படத்தில் விஜயகாந்தின் உருவத்தையும் ஏ.ஐ மூலமாகத்தான் காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் பாடல்களைப் போல துல்லியமாக மறைந்த நடிகர்களின் முகத்தை கொண்டு வருவது என்பது இன்னும் இந்திய சினிமாவில் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. பாடலுக்கு வேறு ஒரு பாடகரை அந்தப் பாடலின் ஒரிஜினல் டிராக்கை பாட வைப்பார்கள். அதன் பிறகு மறைந்த பாடகர்கள் பாடிய டியூன் இல்லாத குரலை வைத்து ஏ.ஐ மூலம் மேட்ச் செய்வார்கள். இப்படித்தான் ஏ.ஐ மூலமாக பாடல்கள் உருவாகிறது. அதன் பிறகு நடிகர்களின் உருவங்களுக்கு அவர்களைப்போல தோற்றம் கொண்ட வேறு நடிகர்களை நடிக்க வைத்து அதன் பின் ஏ.ஐ மூலம் `டீப் ஃபேக்’ செய்வார்கள்.
தமிழ் சினிமாவில் இதுவரை இந்த இரண்டு துறைகளில்தான் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். பாலிவுட்டில் டப்பிங் , எடிட்டிங், கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்ப துறைகளோடு பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கணிப்பதற்கும் பயன்படுத்துகிறார்களாம். ஹாலிவுட்டில் கதை கலந்துரையாடல் தொடங்கி பல்வேறு துறைகளில் ஏ.ஐ தொழிழ்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். ஒரு திரைப்படம் முழுவதையும் ஏ.ஐ பயன்படுத்தி உருவாக்குவதற்கு சாத்தியக்கூறுகள் இன்று அதிகமாகவே இருக்கிறது.
`ரன்வே’ எனப்படும் ஏ.ஐ ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று அவர்களின் நிறுவனத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைப்படம் எடுக்கும் 100 இயக்குநர்களுக்கு 5000 டாலர் முதல் 1 மில்லியன் டாலர் வரை நிதி அளிப்பதாக கூறியிருக்கிறது. இது போன்ற வசதிகளும், வாய்ப்புகளும் கைகளுக்கு எட்டும்போது அதை நினைத்ததைப் போல பயன்படுத்திக் கொள்ளத்தான் பல புதுமுக இயக்குநர்களும், சீனியர் இயக்குநர்களும் ஆயத்தமாவார்கள்.