- ஆ. விஜயானந்த்
- பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சியில் ஏற்படும் காவல் நிலைய மரணங்கள் மீது உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் தவறி விட்டதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் குற்றம்சுமத்துகின்றனர். ‘புதிய அரசு பொறுப்பேற்றவுடன் காவல்நிலைய மரணங்கள் தொடர்பாக மூன்று தீர்ப்புகள் அடங்கிய புத்தகங்களைக் கொடுத்தோம். அதன்படி, இந்த அரசு செயல்பட்டிருந்தால் காவல் மரணங்கள் தொடர்ந்திருக்க வாய்ப்பில்லை’ எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
விக்னேஷ் மரணம்; தொடர் போராட்டம் ஏன்?
சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 25 வயதான விக்னேஷ் என்பவர் குதிரை ஓட்டும் வேலையை செய்து வந்துள்ளார். இவரும் சுரேஷ் என்ற நபரும் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி புரசைவாக்கத்தில் உள்ள கெல்லீஸ் அருகே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் இருவரையும் விசாரித்துள்ளனர். தொடர்ந்து தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தபோது விக்னேஷ் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்குப் பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பது தெரிய வந்ததால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து நடத்திட சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்றார்.
முன்னதாக, வலிப்பு ஏற்பட்டதாலேயே விக்னேஷ் இறந்ததாக காவல்துறை தரப்பில் வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல்நிலைய எழுத்தர் முனாஃப் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தாலும், காவல்நிலைய மரணங்களின் மீது அரசு அலட்சியம் காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ”விக்னேஷ் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கையை கடுமையாகப் போராடித்தான் பெற்றோம்” என்கிறார்,
மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல் இயக்குநரும் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஹென்றி திபேன்.
ஹென்றி திபேன்
” விக்னேஷ் வழக்கில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. கடந்த மே 3 ஆம் தேதிதான் அதன் அறிக்கை கிடைத்தது. அத்தனை நாள்கள் வரையில் அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் காட்டாமலேயே வைத்திருந்தது.
மேலும், ‘சட்டபூர்வ உரிமை உள்ளவர்களிடம்தான் கொடுக்க முடியும்’ என்றனர். நாங்களும் சட்டப்பூர்வ உரிமை உள்ள ஒருவரைக் கூட்டிச் சென்றோம். அதன்பிறகு அதற்கான சான்று வாங்கி வரச் சொன்னார்கள். அவர்களிடம் ஆதார், பான் கார்டு, ரேசன் அட்டை என எதுவுமே இல்லை. இதன்பிறகு கடும் போராட்டத்துக்குப் பிறகு மே 3 ஆம் தேதி பிரேதப் பரிசோதனை அறிக்கையை கொடுத்தனர். முன்னரே அது வெளிவந்திருந்தால் 26 ஆம் தேதி சட்டசபையில் முதல்வர் உண்மையைப் பேசியிருப்பார். இதற்கிடையில் விக்னேஷ் மரணத்துக்கு வலிப்பு நோய் காரணம் என அவருக்கு யார் அறிக்கை கொடுத்தது?” என கேள்வி எழுப்புகிறார், ஹென்றி திபேன்.
ஓராண்டில் எத்தனை காவல் மரணங்கள்?
தொடர்ந்து கடந்த ஓராண்டில் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களையும் பட்டியலிட்டார்.
அதில், சென்னை எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலையத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி சூர்யா என்ற இளைஞர் மரணமடைந்தது, சேலம் ஆத்தூரில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதியவர் ராஜாமணி உயிரிழப்பு, அதே ஆண்டு ஜூலை மாதம் கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் 45 வயதான இந்திர பிரசாத் மரணம், தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 35 வயதான சத்தியவாணன் மரணம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூரில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 42 வயதான மணிகண்டன் உயிரிழப்பு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் ராமநாதபுரத்தில் உள்ள கீழத்தூவல் காவல் நிலையத்தில் 19 வயது இளைஞர் மணிகண்டன் மரணம்,
கடந்த ஜனவரியில் நாமக்கல் கிளைச்சிறை காவல்நிலையத்தில் 45 வயதான பிரபாகரன் மரணம், நெல்லையில் கடந்த பிப்ரவரி மாதம் ஹைகிரவுண்ட் காவல்நிலையத்தில் சுலைமான் மரணம், இதே நெல்லையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தாலுகா காவல் நிலையத்தில் 38 வயது தடிவீரன் மரணம் எனத் தொடர்ந்து இறுதியாக கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் 25 வயது விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழப்பு என பட்டியல் நீள்வதாகக் குறிப்பிட்டார் ஹென்றி திபேன்,
”காவல்நிலையங்களில் சி.சி.டி.வி பொருத்தியிருக்க வேண்டும் என பரம்வீர் சிங் வழக்கில் நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் முறையாக இயங்குகிறதா? அப்படியிருந்திருந்தால் விக்னேஷ் வழக்கை மறைப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் பணம் கொடுத்தது பதிவாகியிருக்கும். இதுதொடர்பாக, தலைமைச் செயலக காலனி சி.சி.டி.வி கேமரா காட்சிகளை முதலமைச்சர் கேட்டிருந்தாலே உண்மைகள் வெளிவந்திருக்கும்” என்கிறார் ஹென்றி.
”தி.மு.க அரசு பொறுப்பேற்றபோது, ‘சகிப்புத்தன்மையற்ற (Zero tolerance) அரசாக இது இருக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டோம். அதாவது, ‘எந்தவித சித்ரவதைகளும் காவல்நிலையங்களில் நடக்காத தமிழகமாக இருக்க வேண்டும்’ என்றோம். காரணம், சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தில் தி.மு.கவும் ஓர் உறுப்பினராக இருந்தது. சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவத்தில் எங்களோடு இணைந்து அவர்கள் குரல் கொடுத்தனர். சுமார் 80 இயக்கங்கள் கொண்ட கூட்டு இயக்கமாகவும் இது உள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் காவல் மரணங்கள் தொடர்பான புத்தகத்தையும் அரசுக்குக் கொடுத்தோம். மேலும், காவல் மரணம் தொடர்பாக உள்ள மூன்று தீர்ப்புகளைக் கொடுத்தோம். அதன்படி, அரசு செயல்பட்டிருந்தால் விக்னேஷ் மரணம் நடந்திருக்க வாய்ப்பில்லை” என்கிறார் ஹென்றி.
பட மூலாதாரம், Getty Images
தி.மு.க அரசும் கண்டுகொள்ளவில்லை
2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த பிரகாஷ் சிங் வழக்கு பற்றி நம்மிடையே விரிவாகப் பேரினார் ஹென்றஇ.
”அந்த வழக்கின் தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்ட 6 கட்டளைகள் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். அந்த உத்தரவில் மாநில காவல் புகார் ஆணையம், மாவட்ட காவல் புகார் ஆணையம் என இரண்டையும் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், மாநில அளவில் காவலர்களுக்கு எதிரான புகார்களை விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, 2 உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். மாவட்ட புகார் ஆணையத்தைப் பொறுத்தவரையில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். இவர்களுக்கு புலனாய்வு குழு ஒன்றையும் கொடுக்க வேண்டும். இவர்கள் அளிக்கும் பரிந்துரைகளை அரசு செயல்படுத்த வேண்டும்.
ஆனால், அதிமுக அரசில் காவல் புகார் ஆணையத்தை அமைக்காமலேயே வைத்திருந்தனர். நீதிமன்றம் நிர்பந்தம் கொடுத்தவுடன் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்காமல் உள்துறை செயலரை நியமித்தனர். மாவட்டத்தில் மாவட்ட நீதிபதியை நியமிக்காமல் மாவட்ட ஆட்சித் தலைவரை நியமித்தனர். இது எப்படி தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருக்க முடியும்? இது அ.தி.மு.க ஆட்சிக்கால நடைமுறையாக இருந்தது. அதில் இருந்து தி.மு.க அரசு மாறுபட்டதாக இருக்கும் என நினைத்தால் அதனை இவர்களும் கண்டுகொள்ளவில்லை” என்கிறார் ஹென்றி.
மேலும், ”இருளர் சமூகத்தினரின் துயரத்தைப் பற்றிப் பேசிய ஜெய்பீம் படத்தைப் பார்த்துவிட்டு முதல்வர் கண்ணீர் வடித்தார். ஆனால், சட்டசபை நடக்கும்போது கொடூரமான காவல் மரணம் நடக்கிறது. இந்த விவகாரத்தில் அரசை தவறாக வழிநடத்திய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதேநேரம், விக்னேஷின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகள் கிடைப்பதில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியின் உதவி மிக முக்கியமானதாக இருந்தது. அந்தக் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையை கொடுத்தத்தோடு ஆதார், ரேசன், பான் அட்டை என அனைத்தும் கிடைப்பதற்கு உதவி செய்தார். மாநில அரசில் நல்ல அதிகாரிகளும் உள்ளனர்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
”இதேபோல், மாநில மனித உரிமை ஆணையத்தில் எந்த வழக்கையும் தன்னிச்சையாக எடுத்துக் கொள்வதில்லை. 25 ஆண்டுகளை நிறைவு செய்த ஆணையத்தில் 4,000 புகார்கள் நம்பராகாமல் உள்ளன. அங்கு 22,000 புகார்கள் நம்பர் ஆனாலும் உறுப்பினர்களுக்கு அசைன் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும், முப்பது பணியிடங்கள் காலியாக உள்ளன. தவிர, முன்னூறுக்கும் மேற்பட்ட வழக்குகளின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படாமலேயே உள்ளன. இவற்றின் மீது அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்கிறார் ஹென்றி திபேன்.
காவல்துறையின் பதில் என்ன?
காவல்துறை மீதான குற்றச்சாட்டு குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ” காவல்துறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நடக்கலாம். இது அஜாக்ரதையால் நடக்கக் கூடிய ஒன்றுதான். ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. காவல்துறையில் பணியாற்றக் கூடியவர்களுக்கு இருக்கக் கூடிய தண்டனைகளிலேயே அதிகப்படியானது காவல் மரணங்கள் தொடர்பானவைதான். அது நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனைதான். அவ்வாறு சிறைக்குச் சென்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களது பதவி உயர்வும் பாதிக்கப்படும். அதன் விளைவுகளை ஆராயாமல் எல்லைகளைத் தாண்டி அடிப்பது நடக்கிறது” என்கிறார்.
தொடர்ந்து பேசிய கருணாநிதி, ”ஒருவர் மனதில் ஒளிந்திருக்க உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு எந்தவித அறிவியல் முறைகளும் இல்லை. அதனை விசாரிப்பதற்கு சில வழிமுறைகளை காவல்துறை கையாண்டுதான் ஆக வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் வழக்கை புலனாய்வு செய்ய முடியாது. அதாவது வேறு வழிமுறைகள் என்றால் அடித்து உதைப்பது என்பது கிடையாது. வலி மட்டும் இருக்கும், ஆனால் காயம் ஏற்படாது. சிலவற்றில் பொய் வாக்குறுதிகளைக் கூறி குற்றவாளியிடம் இருந்து உண்மையை வரவழைக்க முயற்சிப்பார்கள்.
வாக்குறுதி கொடுத்தோ, அடித்தோ பொய்யான வாக்குமூலம் வாங்கக் கூடாது என சட்டம் சொல்கிறது. எதுவுமே இல்லாமல் பொய்யான வழக்கை புனைந்தால் தவறு. அவ்வாறு பெரும்பாலும் நடப்பதில்லை. காவல் மரணங்களில் காவலர்களைக் கைது செய்தால், இதர காவலர்களுக்கும் வேலை செய்வதில் அச்சம் ஏற்படும். சிலர் எல்லை மீறிச் செயல்படுவதால் சிக்கிக் கொள்கின்றனர். காவல் மரணம் நடந்துவிட்டாலும் அடிப்பதை போலீஸார் நிறுத்துவதில்லை. சென்னையில் வயோதிக தம்பதிகள் கொல்லப்பட்ட வழக்கில் சிக்கியவர்களையும் அடித்துத்தான் விசாரணை செய்திருப்பார்கள். அப்போதுதான் உண்மை வெளிவரும்” என்கிறார்.
சி.சி.டிவி கேமராவை அலட்சியப்படுத்துவது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
”காவல்நிலையங்களில் சி.சி.டிவி காட்சிகளை பதிவு செய்வதில் அலட்சியம் காட்டப்படுவதாக புகார்கள் எழுகிறதே?” என்றோம்.
”காவல்நிலையங்களில் வழக்குகளுக்காக பல அட்ஜஸ்ட்மெண்டுகளை செய்ய வேண்டியது வரும். அதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்லவும் முடியாது. வியாபார நுணுக்கம் என்பதுபோல காவல்துறைக்கும் சில நுணுக்கங்கள் உள்ளன. காவல் நிலையத்தில் சி.சி.டி.வி கேமராக்களை வைத்தால் புலனாய்வை அது பாதிக்கும். எந்தெந்த இடங்களில் வைக்க வேண்டும் என்பதை வரையறுத்து வைக்கலாம்.
தவிர, காவல் நிலையத்துக்கு வரும் நபர்களைப் பொறுத்து முதல் தகவல் அறிக்கையை உடனே பதிவு செய்ய முடியாது. முறையான சாட்சிகள் இருக்க வேண்டும். அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும். தற்போது 80 சதவீத அதிகாரிகள் மிகச் சரியாக செயல்பட்டு வருகின்றனர். எங்கோ நடக்கும் செயல்களை வைத்து மொத்த காவல்துறையை குற்றம் சொல்வது தவறு” என்கிறார்.
மேலும், ” காவல்நிலையங்களில் 6 மணிக்கு யாரையும் வைக்கக் கூடாது என்பதெல்லாம் போலீஸாருக்குக் கூடுதல் சுமையை கொடுக்கும். போலீஸாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கி, கட்டுப்பாடுகளை விதிக்கும்போது புலனாய்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், ‘வழக்கின் குற்றவாளியை கண்டறிய முடியவில்லை’ எனக் கூறுவதுதான் நடக்கிறது” என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: