- சரோஜ் சிங்
- பிபிசி செய்தியாளர்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில் அங்கு புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறது இந்தியா. அவரது தலைமையிலான அரசுடன் தொடர்ந்து இந்தியா பணியாற்றும் என்று அறிவித்திருக்கிறார் கொழும்பில் உள்ள இந்திய தூதர்.
அடிப்படையில் இந்தியாவையும்,இலங்கையையும் நாம் ஒப்பிடமுடியாது. காரணம், பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் இலங்கை மிகவும் சிறிய நாடு. மக்கள்தொகையும் இந்தியாவை விட மிக, மிகக் குறைவு.
இருந்த போதிலும் சில நாட்களுக்கு முன்பு ‘இலங்கையில் நடந்தது, தற்போது இந்தியாவில் நடக்கிறது,’ எனக் கூறும் சில பதிவுகளை சமூக வலைதளங்களில் இப்போது பார்க்க முடிகிறது. அப்படியானால் இந்தியாவும் இலங்கையைப்போல ஆகிக்கொண்டிருக்கிறதா?
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ஹலால் புறக்கணிப்பு, முஸ்லிம் கடைகள் மற்றும் மசூதிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய, இலங்கையின் டேட்லைனில் இருந்து வெளியிடப்பட்ட செய்திகளின் ஸ்க்ரீன் ஷாட்டுகளும் பகிரப்படுகின்றன.
இலங்கை நெருக்கடியில் இந்த செய்திகளுக்கு என்ன பங்கு என்பது பற்றிய நிபுணர்களின் கருத்து வேறுபட்டுள்ளது. ஆயினும், இந்த நெருக்கடியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் குறித்து வல்லுநர்கள் மத்தியில் ஒரு பொதுவான கருத்து உள்ளது,
இன்று இலங்கையில் நடப்பது பொருளாதார நெருக்கடியாக ஆரம்பித்த ஒரு கதைதான். ஆனால் இந்த பொருளாதார நெருக்கடியின் விளைவு இப்போது அரசியல் நெருக்கடி வடிவத்தில் உலகத்தின் முன்னே வந்துள்ளது.
போதுமான அந்நிய செலாவணி கையிருப்பு
பட மூலாதாரம், Getty Images
இந்தப் பின்னணியில், இலங்கையிடம் இருந்து இந்தியா கற்றுக் கொள்ளக் கூடியவற்றை பொருளாதாரப் பாடங்கள், அரசியல் பாடங்கள் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
உலகின் எல்லா பொருளாதாரங்களும் வேறுபட்டவை. ஆனால் அனைவருக்கும் பொருந்தக்கூடிய சில சூத்திரங்கள் உள்ளன என்கிறார் சோனிப்பத்தில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் பூலாப்ரி பாலகிருஷ்ணா.
உதாரணமாக, ஒரு நாட்டில் போதுமான அளவு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லை என்றால், அந்த நாடு அந்த பொருட்களை வெளியில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். அதற்கு அந்நிய செலாவணி கையிருப்பு தேவைப்படுகிறது. அந்நியச் செலாவணியைப் பெற, அந்த நாடு எதையாவது ஏற்றுமதி செய்ய வேண்டும். அதற்காக அது சர்வதேச சந்தையில் போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும்.
“பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் இலங்கை நெருக்கடியிலிருந்து இந்தியா எடுக்க வேண்டிய முதல் பாடம் அந்நிய செலாவணி கையிருப்பு மீது கவனம் வைப்பதுதான். இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த சில மாதங்களில் குறைந்துள்ளது உண்மைதான். ஆனால் ஒரு வருடத்திற்கான இறக்குமதிக்கு தேவையான செலாவணி நம்மிடம் உள்ளது. ஆகவே இந்த விஷயத்தில் இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், நீண்ட கால அடிப்படையில் இறக்குமதிச் செலவை எப்படிக் குறைக்கலாம் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று பேராசிரியர் பூலாப்ரி பாலகிருஷ்ணா தெரிவித்தார்.
ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது 7 மாத இறக்குமதிக்கு போதுமானதாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இதில் தான் இரண்டாவது பாடம் மறைந்துள்ளது.
இறக்குமதிச்செலவை குறைக்க நடவடிக்கை
வரவிருக்கும் நாட்களில், மாற்று எரிசக்தி ஆதாரங்களில் கவனம் செலுத்துவது, நிலக்கரிக்கான வெளிநாட்டு சார்பைக் குறைப்பது, அதே போல் நாட்டிலேயே சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவது ஆகியவை இந்தியாவுக்கு முக்கியமானது. இது இறக்குமதிச்செலவை குறைத்து தன்னிறைவு அடைய உதவும்.
புள்ளிவிவரங்களின்படி, இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80-85 சதவிகிதத்தை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. கடந்த சில நாட்களாக, ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடிக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டது. இந்தியா இதே போல எண்ணெய்க்காக உலக நாடுகளைச் சார்ந்து இருந்தால், கூடவே எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தால், அன்னியச் செலாவணி கையிருப்பு காலி ஆவதற்கு நேரம் பிடிக்காது. ஆகவே மாற்று எரிசக்தி ஆதாரங்களைச் சார்ந்திருப்பதை இந்தியா வேகமாக அதிகரிக்க வேண்டும். இது ஒரே இரவில் நடக்க முடியாத. இதற்கு நீண்ட திட்டமிடல் தேவைப்படும்.
நிலக்கரி துறையிலும் இதே நிலைதான். மின்சாரத்திற்காக இந்தியா, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை நம்பியிருக்கிறது. சமீப காலமாக, சில மாநிலங்கள் மின் நெருக்கடியையும் சந்தித்துள்ளன.
சமையல் எண்ணெய் மற்றும் தங்கத்தின் கதை நிலக்கரி ,பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டதல்ல. இந்தியாவின் இறக்குமதிச் செலவில் பெரும்பகுதி இவற்றுக்காகச் செலவிடப்படுகிறது.
இந்த சார்பைக் குறைக்க, அரசுடன் இணைந்து, பொதுமக்களும் முன்முயற்சி எடுக்க வேண்டும்.
இலங்கை நெருக்கடியின் மறுபக்கம் அரசியல். அதிலும் இந்தியா கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.
பட மூலாதாரம், Getty Images
கோப்புப்படம்
அதிகாரத்தை மையப்படுத்துதல்
பல ஆண்டுகளாக ஒரு சிலரின் கைகளில் அதிகாரத்தை மையப்படுத்துவது எந்த நாட்டுக்கும் உகந்தது அல்ல என்று பேராசிரியர் பூலாப்ரி பாலகிருஷ்ணா கூறுகிறார்.
இலங்கையில் ராஜபக்ஷ குடும்பம் பல ஆண்டுகளாக அதிகாரத்தில் எப்படி ஆதிக்கம் செலுத்தி வருகிறதோ, அதேபோன்ற நிலைதான் இந்தியாவிலும் உள்ளது என்கிறார் அவர். இங்கும் பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகளை எடுக்கும் உரிமை அரசின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலோசகர்களின் கைகளில் மட்டுமே உள்ளது. சொல்லப்போனால், இந்தியாவில் உள்ள எல்லா அரசுகளும் (கேரள மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்தியில் மோதி அரசாக இருந்தாலும் சரி) பக்க சார்பு மனப்பான்மையுடன் செயல்படுகின்றன.
இலங்கை நெருக்கடியிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொண்டு இந்திய அரசு இந்த உத்தியில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அவர் தெரிவிக்கிறார்.
பட மூலாதாரம், EPA
சமையல் எரிவாயுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்
பெரும்பான்மைவாத அரசியல்
இலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையாகவும், தமிழர்கள் சிறுபான்மையாகவும் உள்ளனர். பெரும்பான்மைவாத அரசியல் செய்வதாக அங்குள்ள அரசு மீது அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது.
இதே குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷும் ட்வீட் செய்துள்ளார்.
“நீண்ட காலமாக நான் இலங்கையை கூர்ந்து கவனித்து வருவதால், இந்த அழகான நாட்டில் நிலவும் நெருக்கடியின் வேர், சிலகாலமாக நிலவும் பொருளாதார நெருக்கடியைக்காட்டிலும், கடந்த சில தசாப்தங்களாக நிலவும் மொழி, மத மற்றும் கலாசார ரீதியிலான பெரும்பான்மைவாத அரசியலுடன் தொடர்புடையது என்று என்னால் கூற முடியும். இதில் இந்தியாவிற்கும் படிப்பினை உள்ளது” என்று ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.
இன்றும் இந்தியாவில், பாஜக ஆட்சியில் இல்லாத பல மாநிலங்கள் இந்தி மொழியை திணிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றன. ஹிஜாப், ஒலிபெருக்கி, கோவில்-மசூதி தகராறு, இறைச்சி தகராறு என்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து செய்திகள் வருகின்றன.
“நான் பெரும்பான்மைவாத அரசியலை கலாசார நிகழ்ச்சி நிரலுடன் தொடர்புபடுத்துகிறேன். இதுபோன்ற அரசியலால், நாட்டின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டதாக உணரத் தொடங்குகிறது. இதன் விளைவாக அரசின் கவனம் உண்மையான பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பப்படுகிறது,” என்று பேராசிரியர் பூலாப்ரி கூறுகிறார்,
இலங்கையிலும் அப்படித்தான் நடந்தது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் இது நடந்து வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
வலுவான சிவில் சமூகம் மற்றும் அரசியலமைப்பு அமைப்புகள்
ஒரு நாட்டில் இது நடக்கும் போது, சிவில் சமூகம் மற்றும் அரசியலமைப்பு அமைப்புகளும் அதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
இதை சுட்டிக்காட்டி கோடக் மஹிந்திரா வங்கியின் சிஇஓ உதய் கோடக் ட்வீட் செய்துள்ளார். “ரஷ்யா-யுக்ரேன் போர் நடந்து வருகிறது. அது இன்னும் கடுமையாகி வருகிறது. நாடுகளுக்கு உண்மையான சோதனை இப்போதுதான்.. நீதித்துறை, காவல்துறை, அரசு, நாடாளுமன்றம் போன்ற அமைப்புகளின் வலிமை முக்கியமானதாக இருக்கும். மக்களை கவருவதற்காக அல்லாமல், சரியானதைச் செய்வது முக்கியம். எதைச் செய்யக்கூடாது என்பதை ‘எரிந்து கொண்டிருக்கும் இலங்கை’ நமக்குச் சொல்கிறது.”என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தில் (IDSA) இலங்கை விவகாரங்களை கவனிக்கும் அசோசியேட் ஃபெலோ, டாக்டர் குல்பீன் சுல்தானாவும் உதய் கோடக்குடன் உடன்படுகிறார்.
இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு பல காரணங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். “கடன் சுமை, அரசை நடத்தும் விதம், அதன் கொள்கைகள் போன்றவையே இதற்கு பொறுப்பு. இலங்கை அரசு செய்தது போல், ஆட்சியைப் புறக்கணிக்கக் கூடாது என்றும், வாக்கு அரசியலுக்காக மட்டும் முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும், இந்திய அரசு பல பாடங்களை கற்க முடியும்,” என்று அவர் கூறுகிறார்.
“2019ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ஷ , பொதுமக்களுக்கு வரிவிலக்கு அளிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆட்சிக்கு வந்ததும் அதை அமல்படுத்தினார். அந்த வரி விலக்கு காரணமாக அரசின் வருமானத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்குறுதிகளை அளிக்கும் போது தேர்தல் ஆதாயங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டன. வல்லுநர்களின் கருத்து மற்றும் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் புறக்கணிக்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரிந்தது. இந்த சூழ்நிலையில் நாடாளுமன்றம், நீதித்துறை அல்லது சிவில் சமூகத்தின் குரல் ஓங்கி ஒலிப்பது அவசியமானது.
இந்தியாவிலும் இதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. சில சமயங்களில் இந்த விவகாரம் நீதிமன்றத்தை எட்டும், சில சமயங்களில் சிவில் சமூகம் குரல் எழுப்பும். சில சமயங்களில் நாட்டின் நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்படுகிறது.
இந்த அமைப்புகள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது இலங்கை நெருக்கடியின் மிகப்பெரிய படிப்பினைகளில் ஒன்றாகும்.
பட மூலாதாரம், Getty Images
விரைவான லாபத்திற்காக நீண்டகால இழப்பு
இலங்கை அரசின் மற்றுமொரு முக்கிய முடிவு மீது கவனம் செலுத்துவது பற்றி டாக்டர் சுல்தானா பேசுகிறார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உர இறக்குமதியை நிறுத்தினால் அந்நிய செலாவணியை சேமிக்க முடியும் என அரசு கருதியது. 2021 ஏப்ரலில் கோட்டாபய ராஜபஷ, விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அறிவித்தார்.
ஆனால் இந்த முடிவின் நீண்டகால விளைவுகளைப் பற்றி அரசால் சிந்திக்க முடியவில்லை. இதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டது. உரம் இல்லாமல் விவசாய உற்பத்தி மிகவும் குறைந்தது. நவம்பர் மாதத்திற்குள் அரசு இந்த முடிவை மாற்ற வேண்டி வந்தது.
“அரசு முடிவுகளை மேற்கொள்ளும்போது, பல்வேறு நிபுணர்களின் கருத்தைக்கேட்பது முக்கியம். இதை இந்திய அரசும் புரிந்து கொள்ள வேண்டும். விரைவான ஆதாயங்களுக்காக எடுக்கப்படும் முடிவுகள் நீண்ட கால இழப்புகளை ஏற்படுத்தக்கூடும்,” என்று டாக்டர் சுல்தானா சுட்டிக்காட்டினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: