பாம்புக் கடிக்குக் கொடுக்கப்படும் சித்த மருந்துகளில் குப்பைமேனி தவறாமல் சேர்க்கப்படுகிறது எனும் உண்மையை இருளர் பழங்குடியினரிடம் பேசினால் தெரிந்துகொள்ளலாம். விஷமுறிவு மருத்துவத்தில் சிறந்து விளங்குபவர்கள் இருளர் பழங்குடியினர். தங்களின் பாரம்பர்ய மூலிகை அறிவைக் கொண்டு விஷத்தை முறிக்கும் வித்தை தெரிந்தவர்கள் அவர்கள்.

எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒரு `இன்ஸ்பிரேஷன்’ இருப்பார்கள்! என்னைப் பொறுத்தவரையில் குப்பைமேனியும் ஒரு இன்ஸ்பிரேஷன்தான். குப்பை என்று ஒதுக்கப்பட்டு, களைச்செடி எனப் பார்ப்பவர்களால் பிடுங்கி வீசப்பட்டு பல இன்னல்களை அனுபவித்தாலும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து மக்களின் நலனுக்காகப் போராடும் மூலிகை குப்பைமேனி.
சூரிய ஒளியைப் பெறுவதற்காக, ஒவ்வோர் இலையும் அழகாக வெளியே நீட்டிக்கொண்டிருப்பது குப்பைமேனியின் சிறப்பு. நேரம் கிடைக்கும்போது ஆங்காங்கே இருக்கும் குப்பைமேனியின் அழகை ரசித்துப் பாருங்கள், குப்பையும் அழகாகத் தெரியும். குப்பைகள் அனைத்துமே பயனற்றுப் போவதில்லை. குப்பையிலிருந்து மின்சாரம் கிடைப்பதைப்போல, இந்த குப்பைமேனி செடியிலிருந்து நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கிய மின்சாரம் உறுதியாகக் கிடைக்கும்.
தாவரவியல் பெயர்:
Acalypha indica
குடும்பம்:
Euphorbiaceae
கண்டறிதல்:
சிறுசெடி வகையைச் சார்ந்தது குப்பைமேனி. இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். சூரிய ஒளியைப் பெறுவதற்கு வெவ்வேறு அளவுள்ள இலைகளாய் உருப்பெற்றிருக்கும். முட்டை வடிவ இலைகள். ஆண், பெண் மலர்கள் ஒரே மஞ்சரியில் தனித்தனியாக அமைந்துள்ளது. இலைக்காம்புடன் ஒட்டிய பூக்கள் கொண்ட அமைப்பு. விதைகள் மூலமாகப் பரவும் தாவரம். இதைப் பராமரிக்க அதிக சிரத்தை எடுக்கத் தேவையில்லை.
தாவர வேதிப் பொருள்கள்:
Acalyphine, Clitorin, Acalyphamide, Aurantiamide, Succinimide, Inositol
குப்பைமேனி… குப்பை அல்ல… பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்!