சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
இன்றைக்கு, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவிலே கஞ்சாவைப் பயன்படுத்திக்கொள்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
சபாநாயகர் அப்பாவு: நீங்கள் எந்த அதிகாரியென்று சொல்ல வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி: இதில் யார் ஈடுபட்டார்களோ அவரைத்தான் நான் சொல்கிறேன்.
அப்பாவு: நீங்கள் அரசாங்கத்திடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்.
எடப்பாடி பழனிசாமி: நாகப்பட்டினத்தில் என்று நான் குறிப்பிட்டுத்தானே சொல்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: குட்கா, கஞ்சா தமிழகத்திலே பரவுவதற்குக் காரணமே அதிமுக ஆட்சிதான். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. ஆந்திராவிலிருந்து வந்த அந்த வியாபாரிகள் மீது கைது நடவடிக்கை மட்டுமல்ல, அவர்கள் சொத்தையும் இப்போது நாங்கள் பறிமுதல் செய்துகொண்டிருக்கிறோம். நாங்கள் கஞ்சா வேட்டையில் ஈடுபட்ட காரணத்தினால்தான் கைது நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்களே சொல்கிறீர்கள், கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று. கைது எப்படி செய்ய முடியும். நடவடிக்கை எடுத்ததால்தானே, கைது செய்கிறோம்.
இது நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆட்சி. ஆனால், உங்கள் ஆட்சி என்பது, அதை வைத்து எப்படி பலன் பெறலாம் என்பதைப் பற்றி இதே அவையிலே நான் பேசியிருக்கிறேன். அதற்குப் பிறகு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. அதற்குப் பிறகு, அதை இப்போது சிபிஐ விசாரித்துக்கொண்டிருக்கிறது. அந்த விசாரணை முடிவடையக்கூடிய நிலையில் இருக்கிறது. முடிவடைந்து தீர்ப்பு வரும்போது, யார் குற்றவாளி என்பது நாட்டிற்கு நிச்சயம் வெளிவரப் போகிறது.
எடப்பாடி பழனிசாமி: போதைப் பொருள் தடுப்புச் சட்டம் ஏற்கெனவே வந்திருக்கிறது. இன்றைக்கு, நேற்றைக்கு இல்லை. இதைக் குறைக்க வேண்டும்; தடுக்க வேண்டுமென்பதுதான் ஒவ்வொருவரின் எண்ணம். அதைத்தான் நாங்கள் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். இவ்வளவுப் பேரை கைது செய்திருக்கிறார்களென்றால், என்ன அர்த்தம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இவ்வளவுபேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே, என்ன அர்த்தம் என்று கேட்கிறீர்களே. அப்படியெனில் கைது செய்ய வேண்டாம் என்கிறீர்களா. இவ்வாறு விவாதம் நடந்தது.