சென்னை: ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலினை ரகசியமாக சந்தித்து பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என்றும், அதை ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயாராக இருக்கிறோம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் ஜெசிடி.பிரபாகர் அறிவித்துள்ளனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெசிடி.பிரபாகர், பி.எச்.பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் கூட்டாக நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது அபாண்டமான பொய்யான குற்றச்சாட்டாகும். ஸ்டாலினுடன் ஓபிஎஸ் ரகசியமாக சந்தித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். நாங்கள் அரசியலை விட்டே விலகுவதற்கு தயாராக இருக்கிறோம். தான் சொன்ன தகவலை நிரூபிக்காவிட்டால் எடப்பாடி அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும். எங்கள் சவாலை ஏற்பதற்கு எடப்பாடி தயாராக இருக்கிறாரா என்பது குறித்து அவர் உடனடியாக பதிலளிக்க வேண்டும்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை, திமுகவை எதிர்ப்பதில் என்றைக்கும் சளைத்தவரில்லை. திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி, அதிக அறிக்கைகள் விடுத்தவர் அவர்தான். அவர் சரியான பாதையில் தான் பயணிக்கிறார். திமுகவை சரியான முறையில் எதிர்க்கும் தெம்பும் திராணியும் ஓபிஎஸ்சுக்குதான் இருக்கிறது. எதிர்க்கட்சி துணைத்தலைவர், ஓ.பன்னீர்செல்வம்தான் என்று சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தவரே எடப்பாடிதான்.
அதற்காக சட்டசபை புறக்கணிப்பும் வெளிநடப்பும் உண்ணாவிரதமும் தேவையற்றது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்தும் அதன் தொடர்ச்சியான விசாரணை குறித்தும் அரசின் நடவடிக்கைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிறப்பான சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருந்தார். இதை அன்றைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் நேரடியாக வலியுறுத்தினார்.
ஆனால், இரவு சந்தித்து விட்டு பின்னர் கூறுவதாக சொன்னவர்கள், திரும்ப அதுபற்றி எதுவும் சொல்லவில்லை.
மேலும் அமெரிக்கா அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக அப்போலோ மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் ஜெயலலிதா வெகுவிரைவில் குணமடைந்து விடுவார் என்று டாக்டர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். எனினும் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தான் விரும்பினார். ஜெயலலிதா மரண தேதியில் நிலவும் முரண்பாடுகள் குறித்து, ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து அரசு நடத்தும் விசாரணைக்கு பின்னர் தான் தெரியவரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
* எடப்பாடி தான் சொன்னதை நிரூபித்தால் அரசியலுக்கு முழுக்கு: ஓ.பன்னீர்செல்வம் சவால்
சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையில், என்னை பற்றி ஏதாவது கூறியிருந்தால், கேளுங்கள். பதில் சொல்கிறேன். நேற்று எடப்பாடி பழனிசாமி நடத்திய போராட்டம், எனக்கு எதிரானதாக கருதவில்லை. தமிழக முதலமைச்சருடன் நான், 1 மணி நேரம் பேசியதை நிரூபிக்க தயாரா என்று என்னுடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று, பழனிசாமிக்கு சவால் விட்டு உள்ளனர். தமிழக முதலமைச்சரை நான் சந்தித்ததாக கூறுவதை, பழனிசாமி நிரூபித்தால், நாங்கள் அரசியலை விட்டு விலக தயார். நிரூபிக்கவில்லை என்றால் பழனிசாமி விலக தயாரா என்றார். மேலும்,மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியதாவது, ‘மெதுவாக ஊர்ந்து, ஊர்ந்து சென்று பதவி வாங்கியது யார், நம்பிக்கை துரோகம் செய்தது யார் என அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்’ என்றார்.