காங்கிரஸ் தலைவர் தேர்தல் முக்கிய நிர்வாகிகளுக்கு வாக்களிக்க கட்டுப்பாடு: பொறுப்பாளர் மிஸ்திரி உத்தரவு

Share

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கட்சியின் அனைத்து பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலோ அல்லது இங்குள்ள கட்சித் தலைமையகத்திலோ வாக்களிக்க வேண்டும் என கட்சியின் மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரசின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவும், ஜி-23 தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்பி.யுமான சசி தரூரும் இதில் போட்டியிடுகின்றனர். கார்கேவுக்கு சோனிய குடும்ப ஆதரவும், ஜி-23, மூத்த தலைவர்கள் ஆதரவு இருப்பதால் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இருப்பினும், இருவரும் மனுதாக்கல் செய்து உள்ளதால் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம், அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 17ம் தேதி, அனைத்து காங்கிரஸ் தலைமையகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், செயலாளர்கள் மற்றும் இணை செயலாளர்கள் யாரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே, தங்கள் சொந்த மாநிலத்திலோ அல்லது இங்குள்ள கட்சித் தலைமையகத்திலோ வாக்களிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

* வரவேற்பு கிடைக்கவில்லை
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சசி தரூர் கூறியதாவது: நான் பல இடங்களில் பார்க்கிறேன். மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் மிகப்பெரிய தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கேவை வரவேற்கிறார்கள். அவருடன் அமர்ந்து உரையாடுகின்றனர். தொண்டர்களையும் அங்கு வரும்படி அழைப்பு விடுக்கிறார்கள். இது அனைத்தும் ஒரு வேட்பாளருக்கு மட்டும் நடக்கிறது. என்னை யாரும் கண்டுகொள்வதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* நாடாளுமன்றத்தில் புதிய பதவி
ரசாயனம் மற்றும் உரத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக சசிதரூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பரிந்துரையை காங்கிரஸ் தலைமை செய்துள்ளது. இதற்கு முன், தகவல் தொழில்நுட்ப குழு தலைவராக இவர் இருந்தார். கட்சி தலைவர் தேர்தலில் சசி தரூர் போட்டியிடும் நிலையில், அவருடைய பெயரை இப்பதவிக்கு கட்சி மேலிடம் பரிந்துரை செய்துள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com