கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் உலகக் கோப்பையை வெல்வதே உச்ச இலக்கு. அணிகளுக்கு மட்டுமல்ல அந்நாட்டு ரசிகர்களுக்கும் கூட இதுவே பெரும் கனவாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள 8-ஆவது 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடருக்கு பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தொடரானது, ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நடத்தப்படவுள்ளது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் தொடரில் பங்கேற்கவுள்ளன.
உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றில் மொத்தம் 8 அணிகள் விளையாடும். அவற்றிலிருந்து தகுதிபெறும் 4 அணிகள் அடுத்ததாக சூப்பர் 12 சுற்றுக்குச் செல்லும். இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து ,தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடவுள்ளன.
அந்த வகையில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்று ஆட்டங்கள் அக்டோபர் 21 ஆம் தேதி முடிவடையும் நிலையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சூப்பர் 12 சுற்று 22ஆம் தேதி ஆரம்பமாகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்தையும் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்ளவுள்ளன. அரை இறுதி ஆட்டங்கள் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. புதிய சாம்பியன் யார் எனத் தீர்மானிக்கும் பிரம்மாண்ட இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்பர்னில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: இலங்கையை வீழ்த்தி 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி
இந்திய அணியைப் பொறுத்தவரை தனது முதல் ஆட்டமாக அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் ஒரு முறை கூட தோற்காமல் இருந்துவந்த இந்திய அணி, கடந்த முறை தோற்று விமர்சனத்துக்கு ஆளானது. அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடப்புத் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 8 முறை இறுதிப்போட்டி… 7 முறை வெற்றி… ஆசிய கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி
அதேபோல, அக்டோபர் 27ஆம் தேதி தனது இரண்டாவது போட்டியை விளையாடும் இந்தியா, 3ஆவது போட்டியாக தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் நவம்பர் 2ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்திய அணி, இச்சுற்றின் தனது கடைசி போட்டியை நவம்பர் 6ஆம் தேதி விளையாடவுள்ளது.
கிரிக்கெட் திருவிழாவான இந்த உலகக் கோப்பையை நேரில் கண்டுகளிக்க இதுவரை சுமார் 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
முதல் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி அதன் பின்னர் ஒரு முறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை. தற்போது நல்ல ஃபார்மில் இருந்துவரும் இந்திய அணி, கோப்பையை வென்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.