
இயற்கை உணவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் இயற்கையாக விளைந்தவையா என்பதை தரச்சான்றிதழ் மூலமாக மட்டுமே உறுதி செய்துவிட முடியாது.

தரச்சான்றிதழை சில வழிமுறைகளைக் கொண்டு எளிதில் பெற்று விடலாம் என்பதால் அதனை நம்பி மட்டுமே வாங்காதீர்கள். போலிகள் உருவாவது இயல்பு என்பதால் நாம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நீங்கள் வாங்கும் பொருள் எங்கு விளைந்தது, யாரால் விளைவிக்கப்பட்டது என்கிற தகவல்களை நீங்கள் கடை உரிமையாளர்களிடம் கேட்க வேண்டும்.

எந்த ஒளிவுமறைவுமின்றி அவர்கள் தகவலைத் தருகிறார்கள் என்றால் அவர்களை நம்பலாம். இயற்கையாக விளைந்த பொருட்களை உண்டவர்கள் அதன் சுவையை வைத்துக் கண்டறியலாம்.

நம்பகத்தன்மை அடிப்படையில்தான் இயற்கை அங்காடிகளில் வாங்க முடியுமே தவிர, உணவுப் பொருள்களின் வெளித்தோற்றத்தை பார்த்தெல்லாம் இயற்கையாக விளைந்தவையா என்று கண்டுபிடிக்க முடியாது.

ஆர்கானிக் பொருட்களின் விலை கூடுதலாக இருப்பதாக பலரும் நினைக்கின்றனர். நுகர்வோர் குறைவான அளவிலேயே இருப்பதாலேயே விலை சற்று கூடுதலாக இருக்கிறது.

இயற்கை விவசாயப் பொருட்களை வாங்கும் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கையில் உற்பத்தி அதிகரித்து விலை குறையும்.