வந்தநாள் முதல் இன்றுவரை தோனியைப் பார்க்கும்போதெல்லாம் பண்ட்டின் கண்களில் மரியாதையும் அபிமானமும் டன்கணக்கில் வழியும். கடைசியாய் இந்திய அணியில் தோனி ஆடி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் இன்றுவரை ஹர்திக், பண்ட் போன்றவர்களுக்கு தோனிதான் ஆதர்ஷம். தோனியின் சொல்தான் மந்திரவாக்கு. அப்படியான சிஷ்யனின் கையில்தான் சென்னை அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு இருந்தது இந்த ஆட்டத்தில்.
அதுவும் மாலை நடந்த முதல் போட்டியில் பெங்களூருவும் ஜெயித்துவிட, வரும் எல்லா ஆட்டங்களிலும் நல்ல ரன்ரேட்டில் ஜெயிக்கவேண்டும், பெங்களூருவும், ராஜஸ்தானும் எஞ்சிய எல்லா ஆட்டங்களிலும் தோற்கவேண்டும் என ஏகப்பட்ட டிஸ்க்ளைமர்கள். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படும் கட்டத்தை எல்லாம் தாண்டிவிட்டார்கள் சென்னை ரசிகர்கள். அவர்களுக்கு இனி ஒவ்வொரு ஆட்டத்திலும் தோனி பேட்டிங் ஆர்டரில் தன்னை ப்ரமோட் செய்துகொண்டு மேலே ஆடவேண்டும். அவர் ஆடும் ஒவ்வொரு பந்தையும் ரசித்துப் பார்க்கவேண்டும். அவ்வளவுதான்!
டாஸை வென்ற டெல்லி கேப்டன் பண்ட் எதிர்பார்த்தபடியே பௌலிங்கைத்தான் தேர்வு செய்தார். அவர் அணியில் இரண்டு மாற்றங்கள். கடந்த ஆட்டத்தில் ப்ருதிவி ஷாவுக்கு பதிலாய் வந்த மந்தீப் மறுபடியும் வெளியே. அவருக்கு பதில் ஆர்.சி.பிக்காக கடந்த சீசனில் கலக்கிய பரத் ஒருபெரும் காத்திருப்புக்குப் பின் வந்தார். அக்ஷருக்கு உடல்நலம் சரியாகிவிட்டதால் லலித் யாதவ் வெளியே.
சென்னை அணியில் ஒரேயொரு மாற்றம். (அப்படித்தான் தோனி சொன்னார்). முன்னாள் கேப்டன் ஜடேஜா பிட்டாக இல்லாத காரணத்தால் அவருக்கு பதில் தூபே. ஆனால் ப்ளேயிங் லெவனை டிஸ்ப்ளேயில் காட்டும்போது அதில் ப்ரிட்டோரியஸ் இல்லை. அவருக்கு பதில் ப்ராவோ. இதற்கு முன்னரும் கேப்டன்கள் டாஸின்போது அணியிலிருக்கும் மாற்றங்களை மறப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தோனி இதைச் செய்வது அநேகமாய் இதுதான் முதல்முறை. அதுசரி, தலைக்கும் டங் ஸ்லிப்பாகும்தானே.
நிலையான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இல்லாததே சென்னை அணியின் மிகப்பெரிய மைனஸ்களுள் ஒன்றாக இருந்தது இந்தத் தொடரில். ஒருவழியாக ருத்துராஜ் பார்முக்கு வர, கான்வேக்கும் சரியான வாய்ப்புகள் கிடைக்க, இப்போது ஓபனிங் நன்றாகவே செட்டாகிவிட்டது. களமிறங்கினார்கள் இருவரும். இருவருமே டெக்ஸ்ட்புக் ஷாட்களை ஆடக்கூடியவர்கள். கிடைக்கும் சின்ன சின்ன கேப்களில் எல்லாம் சிங்கிள் தட்டித் தட்டி ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்பவர்கள். முதல் சில பந்துகளை அனுமானித்து அதன்பின் டாப் கியரில் பறப்பவர்கள். அதனால் முதல் இரண்டு ஓவர்களில் 9 ரன்கள்தான்.