மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் மூன்றாவது முறையாக முதல் பந்தில் டக்-அவுட்டாகி தனது விக்கெட்டை இழந்துள்ளார் ஆர்சிபி வீரர் விராட் கோலி.
கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என போற்றப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட் களம் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவர். இந்தியாவுக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 23650 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அனைத்து சீசன்களையும் சேர்த்து 6499 ரன்களை பதிவு செய்துள்ளார். இது தனியொரு பேட்ஸ்மேன் பதிவு செய்துள்ள அதிகபட்ச ரன்களாகும்.
இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார் விராட் கோலி. இருந்தாலும் நடப்பு சீசனில் ரன் குவிக்க மிகவும் சிரமப்படுகிறார் அவர். நடப்பு சீசனில் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி 216 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் கோலி. ஒரே ஒரு அரை சதம் மட்டுமே இதில் பதிவு செய்துள்ளார். ஆறு முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ளார்.
இதில் மூன்று போட்டிகளில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பியுள்ளார். அவர் மிகவும் அரிதாகவே டக் அவுட் ஆவார். இப்படியாக ஒரு பக்கம் அவரது மோசமான ஃபார்ம் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருக்க பெங்களூரு அணி நிர்வாகமும், அணியின் கேப்டனும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். நிச்சயம் அந்த அணி அடுத்ததாக விளையாட உள்ள இரண்டு போட்டிகளிலும் கோலி, ஃபார்முக்கு திரும்புவார் என நம்புவோம். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டான விரக்தியில் இருந்த அவரை தேற்றியுள்ளார் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்.