கடைசியில் மில்லர் உள்ளே வந்து ஹாட்ரிக் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு தென்னாப்பிரிக்காவை பெரிய ஸ்கோரை நோக்கி நகர்த்தினார். இந்திய அணிக்கு டார்கெட் 228.
இலக்கை விரட்டிய இந்திய அணியால் 178 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 18.3 ஓவர்களிலேயே ஆல் அவுட்டும் ஆகியிருந்தனர். ரபாடா வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் ஸ்டம்புகளைப் பறிகொடுத்து டக் அவுட் ஆகினார். நம்பர் 3-ல் வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் பர்னலின் பந்துவீச்சில் lbw ஆகி சீக்கிரமே வெளியேறினார். ரோஹித்துடன் ஓப்பனிங் வந்த ரிஷப் பண்ட்டும் நம்பர் 4 க்கு ப்ரமோட் ஆகியிருந்த தினேஷ் கார்த்திக்குமே அதிரடியைத் தொடங்கினர். இங்கிடியின் ஒரே ஓவரில் 20 ரன்களை அடித்துவிட்டு அதே ஓவரில் விக்கெட்டையும் பறிகொடுத்து வெளியேறினார் பண்ட். வேகப்பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்து அரைசதத்தை நெருங்கிய தினேஷ் கார்த்திக் ஸ்பின்னரான கேசவ் மகாராஜவின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று ஸ்டம்பைப் பறிகொடுத்தார். உலகக்கோப்பைக்கான இந்திய ப்ளேயிங் லெவனில் ரிஷப் பண்ட்டா தினேஷ் கார்த்திக்கா எனும் கேள்வி வரும்போது சந்தேகமே இன்றி தன்னை டிக் அடிக்க வைப்பதற்கான வேலையை தினேஷ் கார்த்திக் சரியாகச் செய்துவிட்டார். இவர்கள் அவுட்டான பிறகு மற்ற வீரர்களும் அதிரடியாகவே ஆடினர். ஆனால், யாராலும் நிலைத்து நிற்க முடியவில்லை. பெரிய பார்ட்னஷிப்கள் அமையவில்லை.
டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆடும் கடைசி டி20 போட்டி இதுதான் எனும்போது இந்திய அணி இந்தப் போட்டியை வெல்வதே சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், ஒருவகையில் இந்தத் தோல்வியுமே இந்திய அணிக்கு அவசியமானதுதான். இந்திய அணியின் குறைகளும் பலவீனங்களும் முழுவதுமாக அம்பலமாகியிருக்கின்றன. டெத் ஓவர் பௌலர்களால் சிறு தாக்கத்தை கூட ஏற்படுத்த முடிவதில்லை. வெறுமென பேட்டிங் பலத்தை வைத்து மட்டுமே போட்டிகளை வெல்ல முடியாது. பேட்டர்களால் ஒவ்வொரு போட்டியிலுமே 200+ ரன்களை எடுக்க முடியாது. இந்த உண்மைகளுக்கெல்லாம் உலகக்கோப்பைக்கு முன்பாக முகம் கொடுத்து சரிசெய்ய இந்திய அணிக்கு இந்தத் தோல்வி அவசியமே.