இந்த ஐபிஎல் சீசனிலிருந்து அதிகாரபூர்வமாக மும்பை அணி நாக் அவுட்டாகி இருக்கிறது. என்ன இப்பத்தானா என்கிறீர்களா? ஆம், அப்படித்தான் சொல்கிறார்கள். இனி கால்குலேட்டரில் என்ன செய்தாலும், மும்பையால் உள்ளே வர முடியாது. பலமுறை கோப்பை வென்ற மூன்று அணிகளும் புள்ளிப் பட்டியலில் பாதாளத்தில் இருக்கின்றன.
‘வாழ்க்கை ஒரு வட்டம்டா, இங்க ஜெயிக்கறவன் தோப்பான், தோக்கறவன் ஜெயிப்பான்’ என சொன்ன இயக்குநர் ரமணா எவ்ளோ பெரிய தீர்க்கதரிசி. அதே சமயம், நேற்றைய முதல் போட்டியின் முடிவில் ஒரு அணி தனக்கான வாய்ப்பை இன்னும் அதிகமாக இறுகப்பிடித்திருக்கிறது. இன்னொரு அணி வெளியே செல்வதற்கான வெளியை இன்னும் எளிதாக்கியிருக்கிறது.

போட்டிகளில் வென்று கொண்டிருக்கும் வரை டாஸில் தோற்பது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. சஞ்சு சாம்சன் இந்த சீசனில் விளையாடிய 11 போட்டிகளில் 10 முறை டாஸில் தோற்றிருக்கிறார். டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால், அணியில் எந்த மாற்றமும் இல்லை என்பதாக பேட்டிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸில் கருண் நாயருக்குப் பதிலாக யசஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டார். மீண்டும் கிடைத்த வாய்ப்பை கிரிப்பாகப் பிடித்துக்கொண்டார் ஜெய்ஸ்வால் என்றுதான் சொல்ல வேண்டும்.
பேர்ஸ்டோவும், தவானும் ஓப்பனிங் இறங்க, முதல் ஓவரை வீசினார் போல்ட். ஓவர் தி விக்கெட்டில், போல்ட் வீசிய ஸ்விங் பந்தை மிட்விக்கெட் திசையில் பவுண்டரி ஆக்கினார் பேர்ஸ்டோ. மூன்று பந்துகளுக்குப் பிறகு அரௌண்ட் தி விக்கெட் எடுத்தார் போல்ட். இந்தப் பக்கம் வந்தா மட்டும் விட்டுடுவனா என்பதாக, மீண்டும் லெக் சைடில் ஒரு பவுண்டரி. முதல் ஓவரில் பத்து ரன்கள். அதே சமயம், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை அட்டகாசமாக வீசினார் போல்ட். தவானால் அந்த ஓவரில் எதுவுமே செய்ய முடியவில்லை. மெய்டன் ஓவர்.
மெய்டன் எல்லாம் போட்டிருக்காரே என நம்பி, பவர் பிளேவுக்குள்ளாகவே மூன்றாவது ஓவரையும் கொடுத்ததுதான் ஆபத்தாக முடிந்துவிட்டது. இரண்டு பவுண்டரி, டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ் என அமர்க்களப்படுத்தினார்கள் ஓப்பனர்கள். இந்த சீசனில் பேர்ஸ்டோ அடிக்கும் முதல் சிக்ஸ் இதுதான். பவர்பிளேயின் கடைசி ஓவரை வீசினார் அஷ்வின். அவுட்சைட் ஆஃபாக வீசப்பட்ட பந்தை இறங்கி வந்து ஃபிளிக் செய்ய முயன்றார் தவான். ஆனால், அது பட்லர் முன்பு நின்றுகொண்டிருந்த இடம் நோக்கிச் சென்றது. பந்து வரும் திசையைக் கணித்து, அதற்கேற்ப நகர்ந்து ஒற்றைக் கையில் பந்தைப் பிடித்து அசத்தினார். அட்டகாசமான கேட்ச். பவர்பிளே இறுதில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.