Last Updated : 07 May, 2022 07:10 AM
Published : 07 May 2022 07:10 AM
Last Updated : 07 May 2022 07:10 AM

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. 208 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. டெல்லி அணியின் வெற்றியில் டேவிட் வார்னர் 58 பந்துகளில் விளாசிய 92 ரன்களும், ரோவ்மன் பாவல் 35 பந்துகளில் விளாசிய 67 ரன்களும் முக்கிய பங்கு வகித்தன.
போட்டி முடிவடைந்ததும் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறும்போது, “டேவிட் வார்னர் பேட்டிங் செய்த விதம், அவரது இன்னிங்ஸின் வேகம் ஆகியவை நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. ரோவ்மன் பாவலால் அணிக்கு என்ன கொடுக்க முடிவும் என்பதை நாங்கள் அறிவோம்.
நாங்கள் அவருக்கு ஆதரவு வழங்கினோம். தற்போது அவர், அற்புதமாக விளையாடி வருகிறார். ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். 100 சதவீத திறனை கொடுக்க முயற்சிக்கிறோம். இது எங்களுக்கு முக்கியமான வெற்றி” என்றார்.