அணியின் கேப்டன் நபி, இதைப் பற்றி சொல்லும் போது, “பௌலர்கள் தங்களது திறனால் பெற்றுத் தந்த குறைந்த ஸ்கோரைக் கூட, எங்களது பேட்டிங் யூனிட்டால் சேஸ் செய்ய முடியாதென்பதே கடந்த காலகட்டங்களில் எங்கள் மீதான விமர்சனமாக இருந்து வந்தது. அதை இந்தப் போட்டிகளில், மாற்றிக் காட்டியிருக்கிறோம்” எனக் கூறியிருந்தார்.
இந்தப் புள்ளியில்தான் ஆப்கன் புதிதாகத் தெரிகிறது. கடந்த 2018 ஆசியக் கோப்பையில் கூட, 50 ஓவர்கள் ஃபார்மேட்டில் ஆடிய போது, இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்திலும், பங்களாதேஷை 136 ரன்கள் வித்தியாசத்திலும் ஆப்கன் வென்றிருந்ததுதான். எனினும், சேஸிங் செய்ய வேண்டிய சூழல்களில், பெரும்பாலும் ஆப்கன் சற்றே திணறியிருப்பதுதான் பழைய வரலாறு. இந்தியாவிற்கு சேஸிங்கில்தான் கூடுதல் விருப்பம் என்றால், ஆப்கன் அதற்கு நேர்மாறு. அதைத்தான் இத்தொடரில் மாற்றியிருக்கின்றனர்.
இப்போட்டிகளில், இரண்டாவதாக பேட்டிங் செய்த போதும் கூட, எங்கேயும் சின்ன தடுமாற்றம் கூட ஆப்கானிஸ்தானின் இன்னிங்ஸில் இல்லை. முதல் போட்டியில் ஓப்பனர்கள் ஹஜ்ரதுல்லா மற்றும் குர்பாஜ் கூட்டணியே போட்டியைக் கிட்டத்தட்ட முடித்து வைத்திருந்தது. இரண்டாவது போட்டியில், பங்களாதேஷ் அவர்களது விக்கெட்டுகளோடு ஆறுதல்பட்டுக் கொண்டனர். ஆனால், இப்ராஹிம் ஜத்ரனை அவர்களால் அசைக்கக் கூட முடியவில்லை. அந்த ஜத்ரன் ஆங்கர் ரோலில் போட்டியின் லகான் கை மாறாமல் பார்த்துக் கொண்டார் என்றால், 17 பந்துகளில், 43 ரன்களைக் குவித்த நஜிபுல்லா ஜத்ரன், ஜித்தனாக மாறி பவர் ஹிட்டிங்கிற்குப் பாடம் எடுத்தார். பங்களாதேஷின் மொத்த இன்னிங்ஸிலும் ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே வந்திருக்க, இவர் ஒருவரே ஆறு சிக்ஸர்களை விளாசினார். அடுத்தடுத்த ஐபிஎல் உள்ளிட்ட டி20 லீக்களில், அவரைப் பார்ப்பதற்கான உத்தரவாதமாக அந்த இன்னிங்ஸ் அமைந்தது.
இவை தாண்டி நபியின் கேப்டன்ஷிப்பிலும் பக்குவம் இருந்தது. ஃபீல்ட் செட் செய்வதிலிருந்து பௌலிங் மாற்றங்கள் வரை சிறப்பாகவே செய்தார். ஒட்டுமொத்தமாக, இந்த இரு வெற்றிகளின் வாயிலாக மற்ற அணிகளையும் தங்களை உற்று நோக்க வைத்துள்ளது ஆப்கானிஸ்தான். `சூப்பர் 4-ல்’ இந்தியா, பாகிஸ்தான் இரண்டில் ஒன்றை ஆப்கானிஸ்தான் வெளியேற்றினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அஜய் ஜடேஜா கூறியிருக்கிறார்.