என் வயது 30, நான் இரண்டு குழந்தைகளின் தாய். எனக்கு டீன்ஏஜில் இருந்தே பிசிஓடி (PCOD) பிரச்னை இருந்தது. பிசிஓடிக்கும், குழந்தையின்மைக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகுதான் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகும் முறையற்ற மாதவிடாய் இருந்தது. நான் எந்த மருத்துவ சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை. இரவில் 2 பேரீச்சம் பழம் மட்டும் எடுத்துக்கொண்டேன். கடந்த இரு மாதங்களாக எனக்கு பாலாடை போல் வெள்ளைப் படுதல் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களில் எனக்கு 3 முறை மாதவிடாய் வந்தது. ரத்தப்போக்கு வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது. இதற்கு என்ன காரணம் ?
– அஷ்மிதா (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.
“பிசிஓடி அல்லது பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் என்பது சினைப்பை நீர்க்கட்டிகளைக் குறிக்கும் பிரச்னை. அது வளர்சிதை மாற்றத்தோடு தொடர்புடைய ஒரு பிரச்னை.
ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தக்கூடிய ஹார்மோன்தான் இன்சுலின். அது சரியாகச் சுரக்காத நிலையை `இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்’ என்று சொல்வோம். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கும், உடல்பருமன் அதிகமுள்ளோருக்கு, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பிசிஓடி பிரச்னை வரலாம். பிசிஓடி பாதிப்புள்ள பெண்களுக்கு மாதவிடாய் முறையற்று வரும். கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கும்.
பிசிஓடி பிரச்னைக்கு முதல் அறிவுரை எடையைக் குறைப்பதுதான். இரவில் 8 மணி நேரம் தூங்குவது, ஸ்ட்ரெஸ் இல்லாமலிருப்பது, உடற்பயிற்சிகள் போன்றவை முக்கியம். தினமும் உடற்பயிற்சிகள் செய்வோருக்கு இன்சுலின் சுரப்பில் பிரச்னைகள் வராமலிருப்பதால் பிசிஓடி பாதிப்பைக் கட்டுப்படுத்துவது சுலபமாக இருக்கும்.