காந்திநகர்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று முறை எம்எல்ஏவான அஸ்வின் கோத்வால் ராஜினாமா செய்துவிட்டு பாஜவில் இணைந்தார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பழங்குடியினர் தலைவரான அஸ்வினி கோத்வால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர், சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கேத்பிரம்மா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2007, 2012 மற்றும் 2017ம் ஆண்டுகள் என மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், காங்கிரசில் இருந்து இவர் திடீரென விலகினார். பின்னர், காந்தி நகரில் நேற்று பிற்பகல் நடந்த விழாவில் குஜராத் பாஜ தலைவர் சிஆர் பாட்டில் முன்னிலையில் பாஜ.வில் இணைந்தார். இது தொடர்பாக அஸ்வினி கோத்வால் கூறுகையில், ‘‘ காங்கிரசின் செயல்பாட்டினால் எனக்கு மகிழ்ச்சி இல்லை. கட்சியில் அநீதி இழைக்கப்படுகிறது. எனவே, கட்சியில் இருந்து விலகி விட்டேன்,” என்றார்.