இலங்கையிடம் ஆஸ்திரேலியா அதிர்ச்சி இன்னிங்ஸ் தோல்வி- சண்டிமாலின் 206 ரன்களால் டெஸ்ட் தொடர் சமன்

Share

காலேயில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 4ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்ஸில் 41 ஓவர்களில் 151 ரன்களுக்கு சுருண்டு ஒரு இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது, முதல் டெஸ்ட்டை தோற்ற இலங்கை இந்த வெற்றி மூலம் அபாரமான எழுச்சியில் தொடரை 1-1 என்று சமன் செய்தது. தினேஷ் சண்டிமால் முதல் டெஸ்ட் இரட்டைச் சதம் விளாசினார், பவுலிங்கில் ஜெயசூரியா 2 இன்னிங்ஸ்களில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தினேஷ் சண்டிமால் எடுத்த 206 ரன்களை ஆஸ்திரேலியாவின் 11 வீரர்கள் எடுக்க முடியவில்லை. 151 ரன்களுக்கு ஆல் அவுட்.

இன்று காலை 431/6 என்று தொடங்கிய இலங்கை தன் முதல் இன்னிங்சில் 554 ரன்கள் குவித்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது, இலங்கை அணியின் தினேஷ் சண்டிமால் 118 என்று தொடங்கியவர் இரட்டைச் சதம் விளாசினார். 326 பந்துகளில் சண்டிமால் 16 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 206 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் லெக் ஸ்பின்னர் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

190 ரன்கள் பின்னிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா கவாஜா (29), டேவிட் வார்னர் (24) 49 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்தனர். அதில் முதலில் வார்னர் மெண்டிஸ் பந்தில் 5 எல்.பி.டபிள்யூவில் முதல் எல்.பி.ஆக வெளியேறினார்.

19வது ஓவர் திருப்புமுனையானது இடது கை ஸ்பின்னர் ஜெயசூரியாவிடம் கவாஜா ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆக, அதே ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் பிளம்ப் எல்.பி.ஆகி டக் அவுட் ஆனார். ட்ராவிஸ் ஹெட் 5 ரன்களில் மெண்டிஸ் ஆஃப் பிரேக் பந்து ஒன்று போதிய அளவு திரும்ப ஆஃப் ஸ்டம்பை இழந்தார். மார்னஸ் லபுஷேன் ஸ்வீப் ஷாட்டை நன்றாகப் பயன்படுத்தி 32 ரன்கள் எடுத்து அதே ஸ்வீப் ஷாட்டில் ஜெயசூரியாவிடம் பிளம்ப் எல்.பி.ஆனார்.

கேமரூன் கிரீன் 23 ரன்களுக்கு நன்றாக ஆடினார் ஆனால் ஜெயசூரியா பந்தில் டிக்வெல்லா ஸ்டம்பிங்குக்கு வெளியேறினார், அதே ஓவரில் மிட்செல் ஸ்டார்க் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். பாட் கமின்ஸ்,நேதன் லயன் ஆகியோரும் தீக்சனாவிடம், கட எல்.பி.ஆக கடைசி விக்கெட்டாக லெக் ஸ்பின்னர் மிட்செல் ஸ்வெப்சன் ஜெயசூரியாவிடம் பவுல்டு ஆனார், அலெக்ஸ் கேரி ஒரு முனையில் 16 நாட் அவுட், ஆஸ்திரேலியா 41 ஓவர்களில் 151 ஆல் அவுட், 39 ரன்களில் இன்னிங்ஸ் தோல்வி கண்டது.

ஆட்ட நாயகன் ஜெயசூரியா முதல் இன்னிங்ஸில் 118 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்ததோடு, 2வது இன்னிங்சில் 59 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்து 12 விக்கெட்டுகளை இந்த டெஸ்ட்டில் அள்ளினார். தொடர் நாயகனாக தினேஷ் சண்டி மால் தேர்வு செய்யப்பட்டார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com