ஆனால், ப்ளெம்மிங்கின் அணுகுமுறையும் சிந்தனையும் பழமைவாய்ந்தது. நவீன டி20 க்களுக்கு ஏற்ற பரபரப்பான வியூகங்கள் அவரிடம் இல்லை. மேலும் டி20 க்களுக்கு ஒரு இளம் அணியை கட்டமைக்க வேண்டும் என்கிற புரிதலையும் அவர் தாமதமாகத்தான் கண்டடைந்தார். ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர் சந்திப்புகளில் இளம் வீரர்களை பயிற்சி கொடுத்து மெருகேற்றுவதற்காக அணியை நடத்தவில்லை எனுமளவுக்கு காட்டமாகவெல்லாம் பேசியிருந்தார்.
ப்ளெம்மிங்கை பொறுத்தவரை டி20 யை ஓடிஐயின் குறுகிய வடிவமாகவே பார்த்தார். முதலில் ஒன்றிரண்டு ஓவர்கள் பார்த்து ஆட வேண்டும். பின்னர் பவர்ப்ளேயில் அதிரடி. இடையில் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து பார்ட்னர்ஷிப் பில்டிங். கடைசியில் மீண்டும் அதிரடி. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆடப்பட்ட இதே பாணியின் மீதுதான் ப்ளெம்மிங் இப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
அதனால்தான் ஹார்ட் ஹிட்டர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்காமல், ஒரு மாதிரியாக கலவையாக அணியை தேர்வு செய்து வைத்திருக்கிறார். பழைய சிந்தனையோடும் பழைய அணுகுமுறையோடும் சென்னை அணியால் மற்ற அணிகளோடு போட்டியே போட முடியவில்லை. விளைவு, தொடர்ந்து 3 சீசன்களாக சென்னை அணி ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப் பெறவில்லை.
தோனி கிட்டத்தட்ட ஓய்வை எட்டிவிட்டார். இனி, தோனிக்கு பிறகான ஒரு நவீன அணியை கட்டியமைக்க வேண்டும். அதற்கு ப்ளெம்மிங் சரியான ஆப்சனாக இருப்பாரா இல்லையா என்பதுதான் சென்னை அணியின் முன்பிருந்த கேள்வி.
கடந்த மூன்று ஆண்டு நிகழ்வுகளின்படி ப்ளெம்மிங்கை தாண்டி யோசிக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு சென்னை அணி நிர்வாகம் வந்திருக்கிறது. அதனால்தான் அந்த முடிவை மரியாதையான முறையில் ப்ளெம்மிங்கிடமும் தெரியப்படுத்தி பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக வைத்திருக்கிறது.
டி20 யின் நவீன வடிவம் கேட்கும் அணுகுமுறையை நம்பி, இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மனப்பாங்கை கொண்டிருக்கும் ஒரு நபரைத்தான் சென்னை அணி பயிற்சியாளராக தேடக்கூடும்.
அது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!