பட மூலாதாரம், Getty Images
இரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஐந்து வாரங்களுக்கும் மேலாக நடத்தும் போரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடுக்களை விதித்தும், வேண்டுகோள்கள் மற்றும் எச்சரிக்கைகளை விடுத்தும் வந்துள்ளார். ஆனால், அவை இவ்வளவு வெளிப்படையாக அமைந்திருப்பது மிக அரிதே.
“இரானுக்கு எதிரான புதிய தாக்குதல்கள் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். செவ்வாய்க்கிழமை வாஷிங்டன் டிசி நேரப்படி இரவு 8:00 மணிக்கு (GMT நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு 12:00 மணிக்கு) இத்தாக்குதல்கள் தொடங்கும். நான்கு மணிநேரத்துக்குள், அந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பாலமும் மின் நிலையமும் “முற்றிலுமாக அழிக்கப்படும்”.
“மிகக் குறைவான விஷயங்களே வரம்புக்கு அப்பாற்பட்டவை,” என்று திங்கட்கிழமை டிரம்ப் கூறினார்.
இந்த நிலையைத் தவிர்க்க டிரம்பின் கூற்றுப்படி, இரான் “அவருக்கு ஏற்புடைய” ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹோர்மூஸ் நீரிணை வழியாக “தடையற்ற எண்ணெய் போக்குவரத்து” இடம்பெற வேண்டும்.
காலக்கெடு நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், டிரம்பின் நிபந்தனைக்கு இணங்க இரான் தயாராக இருப்பதாகக் காட்டும் அறிகுறிகள் மிகக் குறைவாகவே உள்ளன. இரான் தற்காலிகப் போர் நிறுத்தத்தை நிராகரித்ததுடன், தங்களுக்கான கோரிக்கைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்; அமெரிக்க அதிகாரி ஒருவர் இக்கோரிக்கைகளை ‘அதிபட்சக் கோரிக்கைகள்’ என்று வர்ணித்துள்ளார்.
இது அமெரிக்க அதிபரை ஒரு இக்கட்டான நிலையில் நிறுத்துகிறது. ஒருவேளை உடன்பாடு ஏதும் எட்டப்படாவிட்டால், டிரம்ப் தனது காலக்கெடுவை நீட்டிக்கக் கூடும் — அப்படி செய்தால் கடந்த மூன்று வாரங்களில் அது நான்காவது முறையாக இருக்கும்.
ஆனால், கடுமையான சொற்களும் தீவிர எச்சரிக்கைகளும் இணைந்த இத்தகைய விரிவான மிரட்டல்களுக்கு பிறகு பின்வாங்கினால் டிரம்ப் மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படக்கூடும்.
இரானின் உட்பகுதியில் விமானம் வீழ்த்தப்பட்ட நிலையில் சிக்கிக்கொண்ட இரண்டு விமானிகளை மீட்க, இந்த வார இறுதியில் அமெரிக்கா மேற்கொண்ட நுட்பமான நடவடிக்கையின் மூலம் அதன் ராணுவ வல்லமையும் தந்திரோபாயத் திறனும் தெளிவாக வெளிப்பட்ட போதிலும், அமெரிக்கா ஒரு தெளிவான, வலிமையான நிலையிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று இரானும், உலகின் பிற நாடுகளும் முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளது.
“நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்,” என்று திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்ற தனது செய்தியாளர் சந்திப்பின்போது டிரம்ப் வலியுறுத்திக் கூறினார்.
“அவர்கள் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். அவர்களிடம் எஞ்சியிருப்பது ஒரே ஒரு மனநிலை மட்டுமே: ‘நாம் நீரில் ஓரிரு கண்ணிவெடிகளைப் போடுவோம்’ என்பதுதான் அது.”
டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகள் ஆகியவற்றைக் கொண்டு, ஹோர்மூஸ் நீரிணை வழியாக எண்ணெய் டேங்கர்கள் செல்வதைத் தடுக்கும் திறன் கொண்ட அந்த ‘உளவியல்’ அணுகுமுறையானது, அமெரிக்கா ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதை விடவும், இரானுக்கு மிகவும் வலிமையான ஒரு ஆயுதமாக இருக்கக்கூடும்.
பட மூலாதாரம், Getty Images
திங்களன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, கடந்த ஆண்டில் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட “மிட்நைட் ஹேமர்” (Midnight Hammer) குண்டுவீச்சுத் தாக்குதல், ஜனவரி மாதம் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டது மற்றும் இந்த வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணி ஆகியவற்றில் வெளிப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் துல்லியம் குறித்து டிரம்ப் வியந்தார்.
நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் உயரடுக்கு ராணுவ வீரர்களை ஒருங்கிணைத்தல், திசைதிருப்பும் உத்திகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத் திறன்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அந்த மிகச் சமீபத்திய நடவடிக்கையை, அவரும் அவரது தேசியப் பாதுகாப்பு அணியினரும் கொண்டாடினர். அந்த முயற்சி வியக்கத்தக்கதாக அமைந்திருந்த போதிலும், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் ஒரு ‘சாத்தியமான பேரழிவு’ என்று ஒப்புக்கொண்டிருந்த ஒன்றை முறியடிப்பதற்காகவே அது மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பேரழிவு தவிர்க்கப்பட்டிருந்தாலும், அந்த வெற்றிகரமான மீட்பு நடவடிக்கை, இரானில் அமெரிக்கப் படைகள் இன்றும் எதிர்கொள்ளும் ஆபத்தை சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க ராணுவ வல்லமைக்கும் வரம்புகள் உண்டு என்பதை அதிபர் தற்போது உணர்ந்து கொண்டிருக்கலாம்.
“நாம் அவர்களைச் சரமாரியாகக் குண்டுவீசித் தாக்கலாம்,” என்று அவர் கூறினார். “அவர்களை நிலைகுலையச் செய்யலாம். ஆனால், அந்த நீரிணையை மூடுவதற்கு, ஒரே ஒரு பயங்கரவாதி மட்டும் போதும்.”
மற்றொரு வழி, டிரம்ப் தனது எச்சரிக்கைகளை செயல்படுத்தலாம். திங்களன்று பல சந்தர்ப்பங்களில், தான் அந்த வழியைப் பின்பற்ற விரும்பவில்லை என்று டிரம்ப் கூறினார்.
பட மூலாதாரம், Reuters
இரான் மக்கள் தற்போது நடைபெற்றுவரும் அமெரிக்க ராணுவ நடவடிக்கையைத் தாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் — சொல்லப்போனால், தங்கள் நகரங்கள் மீது விழும் குண்டுகளை அவர்கள் வரவேற்பதாகவும் டிரம்ப் கூறிய அதேவேளையில், அமெரிக்கா இப்போது எதையெல்லாம் அழிக்கிறதோ, அவை அனைத்தும் இறுதியில் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டியிருக்கும் என்பதையும், அந்த மறுசீரமைப்புப் பணியில் அமெரிக்காவே இறுதியில் பங்களிக்கக் கூடும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
“அவர்களின் உள்கட்டமைப்பை நான் அழிக்க விரும்புகிறேனா? இல்லை,” என்று அவர் கூறினார். “தற்போதைய நிலையில், நாங்கள் இன்றே அங்கிருந்து வெளியேறினால், தங்கள் நாட்டை மீண்டும் கட்டமைக்க அவர்களுக்கு 20 ஆண்டுகள் ஆகும்.”
தான் விடுத்த குண்டுவீச்சு மிரட்டல்களைச் செயல்படுத்தினால், மறுசீரமைப்புப் பணிகள் ஒரு நூற்றாண்டு காலம் பிடிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இரான் எந்த ‘கற்கால நிலைக்குத்’ தள்ளப்படும் என்று அவர் எச்சரித்தாரோ, அது அப்படியே நிகழ்ந்துவிடாது என்றாலும், இரான் உறுதியளித்துள்ள அந்த ‘கடும் விளைவுகளை ஏற்படுத்தும்’ பதிலடியால் ஏற்படக்கூடிய பிராந்தியத் தாக்கங்கள் உள்ளிட்ட, அதைத் தொடர்ந்து எழக்கூடிய மனிதாபிமான நெருக்கடியானது பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.
எனினும், இந்த நேரத்திலும் டிரம்ப் ஒரு திருப்புமுனைக்கான நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறார்.

“மறுபுறத்தில், சுறுசுறுப்பான, பேச்சுவார்த்தையில் விருப்பமுள்ள ஒரு தரப்பினர் எங்களிடம் உள்ளனர்,” என்று அவர் கூறினார். “அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்ட விரும்புகிறார்கள். அதற்கு மேல் என்னால் எதுவும் கூற இயலாது.”
நிலைமை இவ்வளவு சிக்கலாக இருக்கும் நிலையில், அதிபரின் வெளிப்படைத்தன்மை இன்மை குறிப்பிடத்தக்கது. அவரிடம் ஒரு திட்டம் உள்ளது, “ஒவ்வொரு விஷயமும் எங்களால் முழுமையாகச் சிந்திக்கப்பட்டுள்ளது” என்று அவர் திங்களன்று கூறினார் — ஆனால் அவர் அதை வெளியிட மறுக்கிறார்.
திரைக்குப் பின்னால் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்பட்டதை விட வெகுதூரம் முன்னேறியுள்ளன என்பதற்கான ஒரு அறிகுறியாக இது இருக்கலாம். அல்லது, இது வெறும் மிரட்டல் மற்றும் வீண் ஆசை ஆகியவற்றின் ஏதோவொரு கலவையாகவும் இருக்கலாம்.
“நாளை (இன்று) வரை அவர்களுக்கு அவகாசம் உள்ளது,” என்று டிரம்ப் கூறினார். “என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவர்கள் நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நான் நம்புகிறேன். அது நமக்குத் தெரிந்துவிடும் என்று நினைக்கிறேன்.”

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு