IPL : `தண்ணீர்ல மீனைப் போட்டா நீந்தும், கருவாடைப் போட்டா?' – வெறுப்பேற்றும் சிஎஸ்கே

Share

வந்தாரை வாழ வைக்கலாம். அதற்காக பக்கத்து ஸ்டேட்டுக்கு பஸ்ஸூ பிடித்துப் போயெல்லாமா இன்னொரு டீமை வாழ வைப்பது? சிஎஸ்கே அந்த அளவுக்கு பரந்துபட்ட மனப்பான்மையோடு எதிர்த்து ஆடும் எல்லா அணிகளுக்கும் 2 புள்ளிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

RCB vs CSK
RCB vs CSK

இந்த சீசன்ல ஹாட்ரிக் தோல்வின்றத நினைச்சு வருத்தப்படறதா, ஆர்சிபிகூட கடைசியா நடந்த நான்கு போட்டிகள்லயும் தொடர்ந்து சிஎஸ்கே தோத்துருக்காங்கனு வருத்தப்படறதா, இல்லேன்னா டேபிளுக்கு கீழே கிடக்குறாங்கன்னு வேதனைப்படறதான்னு ரசிகர்கள் மறுபடியும் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்காங்க.

சின்னசாமி மைதானம் பௌலர்களுக்கான மைதானம் இல்லை, அது ஒரு கொலைக்களம். ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் ஆடுன ஆட்டத்தைப் பார்த்தால் பவுண்டரி லைனை ஒரு மூன்று கிலோமீட்டர் தள்ளி வைக்க அரசுக்கு கோரிக்கை விடலாம்னு ரசிகர்களுக்கு தோணி இருக்கும், தோனிக்கும்கூட.

முதல் பாதில ரன் ஏறுன அந்த கிராஃபைப் பார்த்தால் ஏதோ ராக்கெட் லான்ச் பண்ற மாதிரி இருந்தது!

​முதல் 10 ஓவர் (91 ரன் – 9.1 ரன்ரேட்): ஆரம்பத்துல விராட் கோலி (28) விக்கெட்டை எடுத்த உடனே, அப்பாடா, கும்பிட்ட குலசாமி கைவிடல, கோலியையே காலி பண்ணிட்டோமுன்னு சிஎஸ்கே ரசிகர்கள் விசில் அடிச்சாங்க. பங்கம் வராத அளவு பவர்பிளேலகூட வெறும் 51 ரன்கள்தான் வந்துச்சு.

Salt
Salt

பில் சால்ட்டும் (46) படிக்கல்லும் 9 ரன் ரேட்ல ஆடுனப்ப, தம்பிங்க ஏதோ பவுண்டரி அடிக்க கத்துக்குறாங்கன்னு ருதுராஜ் கொஞ்சம் ரிலாக்ஸா இல்லாம அப்போவே முடிச்சு விட்ருந்தா முதலுக்கே மோசம் வந்துருக்காது.

​அடுத்த 5 ஓவர் (62 ரன் – 12.4 ரன்ரேட்) : 11-லிருந்து 15 ஓவர் வரைக்கும் பார்த்தா, பௌலர்கள் பந்து வீசுறாங்களா இல்ல பேட்ஸ்மேன்களுக்கு கிப்ட் பார்சல் பண்ணி அனுப்புறாங்களான்னு சந்தேகமே வந்துருச்சு. இங்கதான் தேவ்தத் படிக்கல் (50) தன் பங்கிற்கு அரைசதம் அடிச்சு மேட்ச்சை சூடாக்கினாரு, அவுட்டும் ஆனாரு.

​இறுதி 5 ஓவர் (97 ரன் – 19.4 ரன்ரேட்): இந்த கடைசி 5 ஓவரை மட்டும் தனியா சிஎஸ்கே தயாரிப்பில் `இருண்ட இரவு’னு ஒரு ஹாரர் படமே ரிலீஸ் பண்ணலாம். 19.4 ரன் ரேட்னா பாத்துக்கோங்க! ரஜத் பட்டிதர் (48 – 15 பந்துகள்ல) மற்றும் டிம் டேவிட் (70 -25 பந்துகள்ல) ரெண்டு பேரும் சேர்ந்து பௌலர்களை வாஷிங் மெஷின்ல போட்டு துவைக்கிற மாதிரி துவைச்சு எடுத்துட்டாங்க. குறிப்பா டிம் டேவிட் மட்டும் 8 சிக்ஸர். திரும்பயும் சின்னசாமி பக்கம் வந்துராதீங்கடாங்ற மாதிரி ஒரு அடி.

ருதுராஜ் இன்னைக்கு ஸ்பின்னர்களை வச்சு ரன் வேகத்தை குறைக்கப் பார்த்தாரு. ஆனா நூர் அகமது (4 ஓவர், 49 ரன்) போட்ட பந்துகளை பேட்ஸ்மேன்கள் தள்ளுவண்டி பிரியாணி மாதிரி ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டாங்க. டிம் டேவிட்லாம் ஹாட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்டாரு. `ஸ்லாட்ல மட்டும்தான் போடுவோம்’னு எல்லா பௌலருமே தாராளமய கொள்கையைக் கடைபிடிச்சாங்க. கலீல் மட்டும் ஓரளவுக்கு கட்டுக்கோப்பா வீசுனதுதான் ஒரே ஒரு ஆறுதல். சின்னசாமி மைதானத்தில் ஒரு சிக்ஸர் திருவிழானு ஆர்சிபி ரசிகர்கள் கப்பே வாங்குன மாதிரி கொண்டாடிட்டு இருந்தாங்க.

என்னதான் சேட்டன் இருந்தாலும், கெய்க்வாட், ஆயுஷ், சர்ஃப்ராஸ் மற்றும் உறவினர்கள்லாம் இருந்தாலும் 251-ன்றதுலாம் கானல் நீர்ல போய் கரண்ட் எடுக்குற கதைதான், அதுக்கு மேலயும் அது நடந்தா நிஜமாவே மெடிக்கல் மிராகிள்தான்.

Tim David
Tim David

தண்ணீர்ல மீனைப் போட்டா நீந்தும், கருவாடைப் போட்டா என்ன யூஸ்? இதுதான் சிஎஸ்கே ரசிகர்களோட மைண்ட் வாய்ஸா இருந்துச்சு.

ஆர்சிபி இன்னிங்க்ஸுக்கு இருண்ட இரவுனு பெயர் வச்சா சிஎஸ்கே இன்னிங்ஸோட முதல் பாதிக்கு ‘உடைந்த மனது’னு பேர் வச்சுக்கலாம்.

பத்தே ஓவருக்குள்ல ஆறு விக்கெட், அதுவும் சிங்கிள் டிஜிட்லதான் அவுட் ஆவோம்னு சபதம் செய்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் `ரயில் விடப் போலாமா’னு கிளம்பிட்டாங்க. டிரேடிங்ல ஏண்டா சேட்டனை வாங்குனோம்னு சிஎஸ்கே ரசிகர்களே நொந்து போற மாதிரிதான் சஞ்சு ஆடிட்டு இருக்காரு. எப்போவும் எம்ஜிஆர் ஸ்டைல்ல ஒருசில மேட்ச் அடிவாங்கிட்டுதான் சேட்டன் அடிகொடுப்பாரு. ஆனா அவரு ஆரம்பிக்கறதுக்குள்ல சிஎஸ்கேவுக்கு மூடுவிழா நடத்திடக் கூடாதுன்றதுதான் பயமே.

சீரியல்ல எப்போவோ முடிஞ்சுருக்க வேண்டிய கதைய ஏதோ ஒரு கேரக்டர் பல எபிசோடுக்கு இழுத்துட்டுப் போகும்ல, அது மாதிரிதான் சர்ஃப்ராஸ் கான் ஆடியிருந்தாரு. 25 பந்துகள்ல 50 ரன்கள அவர் எடுக்காம இருந்திருந்தா 10 ஓவர்கள்ல 100 ரன் மார்க்கை சிஎஸ்கே தாண்டியிருக்காது. அதேமாதிரி 15 ஓவர்கள்ல 160 ரன்கள தாண்ட வச்சது ஓவர்டன் – பிரசாந்த் வீர் பார்ட்னர்ஷிப்.

14.2 கோடியை தனக்காக செலவழிச்சது தப்பே இல்லேன்றத பிரசாந்த் வீர் காட்ட, அவரோட விக்கெட் போன பிறகுகூட Intent-ஐ இறுக்கமா கைல பிடிச்சுட்டு இருந்தாரு ஓவர்டன். பார்ட்னர்ஷிப்களை வளரவிட்டது தான் சிஎஸ்கே பண்ண தப்பு. ஆர்சிபி பௌலர்கள் அதை பண்ணாம பார்ட்னர்ஷிப் உருவாக உருவாக தகர்த்தாங்க. ஓவர்டன் – பிரசாந்த வீர் கூட்டணி உடையாம இருந்திருந்தா ஏதோ ஒரு மூலையில வெற்றிக்கான வாய்ப்பு துளிர் விட்டிருக்கும்.

Sarfaraz
Sarfaraz

ஒரு விஷயத்துல சிஎஸ்கே சந்தோஷப்பட்டுக்கனும்னா முதல் பாதில அத்தனை விக்கெட் விழுந்தும் அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் போராடுன விதம்தான். அதேமாதிரி கடைசி ஓவர் வரை போட்டி போனதும், 200 ரன்களைத் தாண்டினதும் சிஎஸ்கேவிற்கு ஆறுதல் பரிசுகள்தான்.

ஓப்பனர்கள் பவர்பிளே முடியற வரையுமாவது சற்றே கவனத்தோட ஆடி கிக் ஸ்டார்ட் கொடுத்திருந்தா உண்மையில் போட்டி சிஎஸ்கே பக்கம் போய் முடிஞ்சிருக்கலாம்ன்றதைத் தான் 43 ரன்களிலான தோல்வி காட்டுது.

RCB
RCB

இடையில் கமெண்ட்ரியில் வேறு, ‘சிஎஸ்கே ரன்ரேட்டுக்காக ஆட வேண்டும்’ என சீரியஸாக விவாதித்திருந்தார்கள். மூன்று சீசன்களாக அதை மட்டும்தானே இந்த அணி செய்துகொண்டிருக்கிறது? ‘சென்னை அணியை எதிர்த்து ஆடும் எதிரணிகளுக்கு தலா 2 புள்ளிகள் பாரபட்சமின்றி விலையில்லாமல் வழங்கப்படும்!’ என தமிழகத்தின் முக்கிய கட்சிள் தங்களின் தேர்தல் அறிக்கையில் ஒரு பாய்ண்ட் சேர்த்துக் கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள மும்பை, ஆர்.சி.பி ரசிகர்களின் வாக்குகளைப் பெற உதவும். மேலும், மற்ற வாக்குறுதிகளைப் போல இந்த வாக்குறுதியை நிறைவேற்ற சிரமப்படவும் தேவை இல்லை.!

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com