பட மூலாதாரம், Getty Images
இரானில் தற்போது நடந்து வரும் மோதல், உலகெங்கிலும் உள்ள எரிசக்தி சந்தைகளையும் பிற முக்கியப் பொருட்களுக்கான சந்தைகளையும் பாதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரான் ஒரு முக்கியமான கடல்வழிப் பாதையை ஏறக்குறைய தடுத்துவைத்துள்ளது.
இதன் காரணமாக உலகளாவிய எரிசக்த்தி சந்தையில் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
இந்த நிலைமை, உலகை ஒரு பெரிய பிரச்னையின் மீது கவனம் செலுத்த வைத்துள்ளது. உலகளாவிய வர்த்தகத்தின் பெரும்பகுதி சில குறுகிய கடல்வழிப் பாதைகளையே சார்ந்துள்ளது. இந்தப் பகுதிகளில் ஏதேனும் நடந்தால், அது உலகம் முழுமைக்குமான வர்த்தகத்தைப் பாதிக்கக்கூடும்.
அத்தகைய மிக முக்கியமான பாதைகளில் ஒன்று ஹோர்முஸ் நீரிணை. இது இரானுக்கு அருகில் அமைந்துள்ளதோடு, பாரசீக வளைகுடாவை, தென்கிழக்கில் உள்ள ஓமன் வளைகுடா மற்றும் அரபிக் கடலுடன் இணைக்கிறது. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20% இந்தக் குறுகிய பாதை வழியாகவே செல்கிறது. இது இந்தப் பகுதியை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது.
இதனுடன் சேர்த்து, இப்பகுதிக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுத் தொடர்பும் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இரானில் இருந்து குஜராத்திற்கு வந்த பார்சிகள், இந்தியாவை அடைவதற்கு முன்பு ஹோர்முஸில் சிறிது காலம் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. எனவே, ஹோர்முஸின் வரலாறு என்பது வர்த்தகம் மற்றும் அரசியல் பற்றியதாக மட்டுமின்றி, இடப்பெயர்வு, கலாசாரத் தொடர்புகள் பற்றியதாகவும் உள்ளது.
இரானில் ஜொராஸ்ட்ரியர்களின் வீழ்ச்சி
கி.பி.651இல் இரானில் ஜொராஸ்ட்ரியர்களின் வீழ்ச்சி, பார்சி வரலாற்றின் முக்கிய அங்கமாகும். இந்த வரலாற்றைப் பற்றிய முக்கியமான எழுத்துப்பூர்வ ஆதாரம், ‘கிஸ்ஸா-இ-சஞ்சன்’ எனப்படும் ஒரு நூல் மட்டுமே என்று பல வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இந்த நூல் கி.பி.1600ஆம் ஆண்டளவில், பஹ்மன் கேகோபத் சஞ்சன் என்பவரால் எழுதப்பட்டது.
பல பார்சி வரலாற்றாசிரியர்கள் கடந்த காலத்தைப் பற்றி எழுத, இந்த நூலையே ஓர் ஆதாரமாகப் பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும், இதில் இடம்பெற்றுள்ள அனைத்து விவரங்களையும் அனைவரும் முழுமையாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்த நூலில் உள்ள விஷயங்களில் முரண்பாடுகளும், பிழைகளும் இருக்கக்கூடும் என்று சில வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
எனவே இதிலுள்ள அனைத்தையும் முழுமையான துல்லியத்துடன் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. ஆனாலும், பார்சிகள் எவ்வாறு குஜராத்திற்கு புலம்பெயர்ந்தனர் என்பது குறித்த ‘ஒரே ஆதாரம்’ என்றே இந்நூல் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு பல புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன.
இரானில் பாரசீக பேரரசின் வீழ்ச்சி கி.பி.651இல் தொடங்கியது. ‘நெஹாவந்த் போர்’ நிகழ்ந்த பிறகு, அந்தப் பேரரசின் கடைசி ஆட்சியாளரான யஸ்தெஹார்ட் ஷஹ்ரியார் தோல்வியடைந்தார். பார்சி வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அரபுப் படைகள் இரானில் “கொடூரமான படுகொலைகளை” அரங்கேற்றியதுடன், “ஜொராஸ்ட்ரிய மதத்தைப் பின்பற்றிய பார்சிகளை இஸ்லாத்திற்கு மதம் மாறும்படி கட்டாயப்படுத்தின.”
பாலோன்ஜி பர்ஜோர்ஜி தேசாய் என்ற பார்சி வரலாற்றாசிரியர், ‘பாரசீக மன்னர்களின் வரலாறு’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலில், பண்டைய இரானின் வரலாற்றையும் பார்சிகள் எவ்வாறு இந்தியாவுக்கு வந்தனர் என்பதையும் அவர் விவரிக்கிறார்.
அதில் அவர், “யஸ்தெஹார்ட்டின் பேரரசு வீழ்ந்த ஒரு நூற்றாண்டு காலத்திற்குள், ஜொராஸ்ட்ரிய மதத்தைப் பின்பற்றிய பல பார்சிகளும் இரானியர்களும் வெற்றி பெற்ற புதிய ஆட்சியாளர்களால் முழுமையாக அடிமைப்படுத்தப்பட்டனர்” என்று எழுதியுள்ளார்.
மேலும் அவர், “அவர்களில் சிலர் நீண்ட காலத்திற்கு, வெளித்தோற்றத்திற்கு இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவராக வாழ்ந்து வந்தாலும், தங்கள் மனதுக்குள் தங்களது மத நம்பிக்கையைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தனர். வேறு சிலரோ, தங்கள் மதத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்ததால், தங்களது தாய்நாட்டை விட்டு வெளியேறிப் பல்வேறு திசைகளில் சிதறிச் சென்றனர். அவ்வாறு சிதறிச் சென்ற குழுக்களில் ஒன்று இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பார்சி வரலாற்று ஆசிரியரான தோசாபாய் ஃபராம்ஜி கராக்கா, தனது பார்சிகளின் வரலாறு என்ற நூலில், “குர்ஆனை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் கோராசான் பகுதியின் மலைப் பிரதேசங்களுக்குத் தப்பி ஓடினர். அவர்கள் அங்கே சிறிது காலம் தங்கினர். ஆனால் அங்கும் எதிரிகள் அவர்களைத் துரத்துவதை நிறுத்தவில்லை. அவர்கள் கோராசானில் சுமார் நூறு ஆண்டுகள் தங்கியிருந்தனர்.
ஆனால் அங்கும் அவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாயினர். மீண்டும் ஒருமுறை அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் கணிசமான எண்ணிக்கையிலானோர், பாரசீக வளைகுடாவின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஓர்முஸ் (Ormus – Hormuz) என்னும் சிறிய தீவைச் சென்றடைந்தனர்,” என்று எழுதியுள்ளார்.
பிலு நானாவதி என்பவரால் எழுதப்பட்ட பார்சி பிரஜா என்ற மற்றொரு நூல், ஜொராஸ்ட்ரிய மதத்தைப் பின்பற்றுவோர் கோஹிஸ்தான் மலைப் பகுதிகளுக்குத் தப்பிச் செல்ல நேர்ந்ததாகக் குறிப்பிடுகிறது. அந்த நூலின்படி, “அங்கே அவர்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுமையான சூழலில் வாழ வேண்டியிருந்தது. அதே வேளையில், வேறு சில ஜொராஸ்ட்ரியர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டிய நிலையும் ஏற்பட்டது.”
சுருக்கமாகக் கூறினால், இந்த வரலாற்றுக் குறிப்புகளின்படி, தங்கள் பேரரசு வீழ்ச்சியடைந்த பிறகு, இரானில் வாழ்ந்த பல ஜொராஸ்ட்ரியர்கள் வன்முறையையும், தங்கள் மதத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற அழுத்தத்தையும் எதிர்கொண்டனர். அவர்களில் சிலர் அங்கேயே தங்கி, மறைமுகமாகத் தங்கள் நம்பிக்கைகளைப் பின்பற்றினர். மற்றவர்களோ தங்கள் தாய்நாட்டைவிட்டு வெளியேறி, வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். இறுதியில் அவர்களில் சிலர் இந்தியாவை வந்தடைந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
ஹோர்முஸ் பகுதியில் பார்சிகள்
பிலூ நானாவதி எழுதிய பார்சி பிரஜா என்ற நூலின்படி, பார்சிகள் பாரசீக வளைகுடாவில் உள்ள ஹோர்முஸ் துறைமுகத்தில் சிறிது காலம் வசித்தனர். “பார்சிகள் ஹோர்முஸில் இருந்து ஏழு குழுக்களாகப் பிரிந்து, கத்தியவாரில் உள்ள டையூ துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டனர்” என்று அவர் எழுதியுள்ளார்.
மற்றொரு பார்சி வரலாற்றாசிரியரான தோசாபாய் ஃபராம்ஜி கராக்கா, ஹோர்முஸில் அவர்கள் தங்கியிருந்தது நீண்ட காலத்திற்கு அல்ல என்று விளக்கியுள்ளார். “இந்தத் தனிமைப்படுத்தப்பட்ட துறைமுகத்தில் (ஹோர்முஸில்) அவர்கள் மிகக் குறுகிய காலமே தங்கியிருந்தனர். அவர்கள் இன்னும் தங்கள் படையெடுப்பாளர்களின் பிடிக்குள் சிக்கும் நிலையிலேயே இருந்தனர். எனவே, தங்கள் நாட்டின் கொடூரமான வெற்றியாளர்களின் கைகளில் சிக்குவதைவிட, முன்னோர்களின் மண்ணை நிரந்தரமாக விட்டுவிட்டு வேறொரு நாட்டிற்குச் செல்ல அவர்கள் முடிவு செய்தனர்,” என்று அவர் எழுதியுள்ளார்.
பார்சி வரலாற்றாசிரியர்கள், ஹோர்முஸில் இருந்தபோது, அவர்கள் இந்தியாவுக்கு செல்வதற்கான திட்டங்களை வகுத்ததாகக் கூறுகின்றனர். தோசாபாய் ஃபராம்ஜி கராக்கா, “ஹோர்முஸில், தங்கள் பயணத்திற்காக அவர்கள் பல கப்பல்களை வாங்கியிருக்க வேண்டும். தங்கள் மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன், இந்தியாவை நோக்கி அவர்கள் புறப்பட்டிருக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார்.
இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும் பார்சிகள் (Parsis in India and the Diaspora) என்ற புத்தகத்தில், அதன் ஆசிரியர்களும் மான்செஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுமான ஜான் ஆர். ஹின்னல்ஸ் மற்றும் ஆலன் வில்லியம்ஸ், ‘கிஸ்ஸா-இ-சஞ்சன் குறித்துக் குறிப்பிடுகின்றனர். பார்சிகள் குஜராத்திற்கு வருவதற்கு முன்பு ஹோர்முஸில் தங்கியிருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். அதேவேளையில், அந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் சில வேறுபாடுகளும், சாத்தியமான பிழைகளும் இருக்கலாம் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹோர்முஸில் இருந்து, பார்சிகள் சௌராஷ்டிராவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள டையூ துறைமுகத்திற்குப் பயணம் செய்தனர். பல பார்சி வரலாற்று நூல்கள், அவர்கள் அங்கு சுமார் 19 ஆண்டுகள் வசித்ததாகக் கூறுகின்றன. டையூவில் தங்கியிருந்த பிறகு, அவர்கள் சஞ்சன் நகரை நோக்கி நகர்ந்தனர்.
இருப்பினும், பார்சிகள் அனைவரும் ஒரே பயணத்தில் இந்தியாவுக்கு வந்துவிடவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இந்த இடப்பெயர்வு பல்வேறு கட்டங்களாக நிகழ்ந்ததாகவும், சில குழுக்கள் இன்னும் முன்னதாகவே வந்திருக்கக் கூடும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, ஹோர்முஸில் இருந்து டையூவுக்கு வந்த பார்சிகள், குஜராத்தின் மொழி, பழக்கவழக்கங்கள், மதம் மற்றும் உள்ளூர் சூழல்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக அங்கு சிறிது காலம் தங்கியிருந்திருக்கலாம்.
அந்தப் பிராந்தியத்தைப் பற்றி நன்கு புரிந்துகொண்ட பிறகு, அவர்கள் சஞ்சனை நோக்கி நகர்ந்தனர். கிஸ்ஸா-இ-சஞ்சனா என்ற நூல், பார்சிகள் கி.பி.775இல் தெற்கு குஜராத்தில் உள்ள சஞ்சனை அடைந்ததாகக் கூறுகிறது. இருப்பினும், சில வரலாற்றாசிரியர்கள் அவர்கள் முன்னதாகவே அங்கு வந்துவிட்டதாக நம்புகிறார்கள்.
அந்தக் காலத்தில், ஜதி ராணா என்ற உள்ளூர் ஆட்சியாளர் ஆண்டு கொண்டிருந்தார். பார்சிகள் அங்கு தங்குவதற்கு அவரிடம் அனுமதி கேட்டனர். அவர் சில நிபந்தனைகளின் பேரில் அவர்கள் குடியேற அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பிரபலமான கதையின்படி, பார்சிகள் இந்தியாவில் “பாலில் சர்க்கரை போலக் கலந்தனர்”, அதாவது அவர்கள் சமூகத்துடன் அமைதியாக ஒன்றிணைந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் ஜதி ராணா உண்மையில் சஞ்சனை ஆண்டு கொண்டிருந்தாரா என்பது குறித்தும் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. சில வரலாற்றாசிரியர்கள், டையூவில் இருந்து சில பார்சிகள் காம்பத் மற்றும் வரியாவுக்கும் சென்றதாக நம்புகிறார்கள். பின்னர் அவரக்ள் நவ்சாரி, வல்சாத் போன்ற இடங்களில் குடியேறினர். இறுதியில் அவர்கள் சஞ்சனுக்கு அருகிலுள்ள உத்வாடாவை தங்கள் முக்கிய மத மையமாக ஆக்கி, அங்கு இரான்ஷா என்று அழைக்கப்படும் தங்கள் புனித நெருப்பை நிறுவினர்.
ஹோர்முஸ் பற்றி மீண்டும் பேசுகையில் தோசாபாய் ஃபராம்ஜி கரக்கா, “741ஆம் ஆண்டில் பார்சிகள் இந்தத் துறைமுகத்தில் குடியேறியபோது, அது இன்று இருப்பது போல பிரதான நிலப்பரப்பில் இருந்து தனித்த ஒரு தீவாக இருக்கவில்லை. மாறாக, அது இரான் நிலப்பரப்புடன் இணைத்திருந்தது. பின்னர் 950ஆம் ஆண்டில், இந்த நகரம் வர்த்தகர்களின் மையமாக மாறியது. பின்னர் சில அராபியர்கள் ஹோர்முஸ் துறைமுகத்தில் இருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்த ஒரு தீவுக்கு ‘புதிய ஹோர்முஸ்’ என்று பெயரிட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
ஹோர்முஸ் என்ற பெயர் வந்தது எப்படி?
இந்தக் கேள்விக்குப் பல வரலாற்றாசிரியர்கள் பதிலளிக்க முயன்றுள்ளனர். ஆனால் இதில் மாறுபட்ட கருத்துகளும் உள்ளன.
குஜராத்திற்கு வருவதற்கு முன்பு பார்சிகள் தங்கியிருந்த இடம் இன்றைய ஹோர்முஸாக இருந்திருக்காது என்று சில வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். பகாவுதீன் கல்லூரியில் பேராசிரியராக இருந்த ஷாபூர்ஷா ஹோர்மஸ்ஜி ஹோடிவாலா, தனது ‘பார்சி வரலாற்று ஆய்வுகள்’ என்ற நூலில், “அது தற்போதைய ஹோர்முஸாக இருக்க முடியாது. மாறாக அக்காலத்தின் ஒரு பழைய நகரமாக இருந்திருக்க வேண்டும். அது பாரசீக வளைகுடாவின் வடக்குக் கடற்கரையில் அமைந்திருந்தது. அது அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து 30 மைல் தொலைவில் இருந்த ஓரிடமாக இருந்திருக்க வேண்டும். சர் லூயிஸ் பாலே இந்தப் பண்டைய நகரத்தை அகழாய்வு செய்தார்” என்று எழுதியுள்ளார்.
தற்போதைய மினா மாவட்டத்தில் இருந்து சுமார் 607 மைல் தொலைவில், ஒரு கோட்டைக்கு அருகில் இந்தப் பழைய நகரத்தின் இடிபாடுகளை லூயிஸ் பாலே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
நிலவியலாளர் அபுல் ஃபெடாவின் கூற்றுப்படி, ஹோர்முஸ் ஒரு துறைமுக நகரமாகவும், மிகவும் வெப்பமான காலநிலையைக் கொண்டதாகவும், பேரீச்ச மரங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்தப் பண்டைய ஹோர்முஸ் ஒரு தாக்குதலில் அழிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
குஜராத் கலைக் களஞ்சியம், ஹோர்முஸ் என்பது இரானில் ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஒரு தீவு என்று விவரிக்கிறது. இது பந்தர் அப்பாஸில் இருந்து சுமார் 80கி.மீ கிழக்கே, மினா நகருக்கு அருகில் உள்ளது. இந்தச் சிறிய தீவின் வடக்குப் பகுதியில் பழைய துறைமுகத்தின் எச்சங்கள் காணப்படுகின்றன.
கடந்த 14 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஹோர்முஸ் பாரசீக வளைகுடாவில் ஒரு முக்கியமான வர்த்தக மையமாக விளங்கியது.

ஹோர்முஸ் பற்றிய முதல் குறிப்பு, கி.மு.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நியர்கஸ் பதிவேடுகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மகா அலெக்சாண்டரின் கடற்படை கடற்கரைக்கு அருகில் நின்றபோது, முதலாம் அர்தஷீரால் இந்த நகரம் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. அரபுப் படையெடுப்புக்குப் பிறகு இதன் முக்கியத்துவம் அதிகரித்தது.
அல்-இத்ரீசி, அல்-இஸ்தக்ரி, அல்-மக்திசி போன்ற பல புகழ்பெற்ற நிலவியலாலர்கள் ஹோர்முஸை ஒரு முக்கிய வர்த்தக மையமாக விவரித்துள்ளனர். யாகூத் அல்-ஹமாவியின் (12-13ஆம் நூற்றாண்டு) கூற்றுப்படி, இது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கு ஒரு முக்கியமான இணைப்பாக இருந்தது.
கடந்த 1272க்கும் 1293க்கும் இடைப்பட்ட காலத்தில் மார்கோ போலோ இந்தத் துறைமுகத்திற்கு இரண்டு முறை வருகை தந்தபோது, ஹோர்முஸ் ஏற்கெனவே ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது.
கடந்த 1507இல் போர்ச்சுகல் ஹோர்முஸை தாக்கியது. 1514-1515இல் அஃபோன்சோ டி அல்புகெர்க்கின் தலைமையில், அவர்கள் துறைமுகத்தைக் கைப்பற்றி ஒரு கோட்டையைக் கட்டினார்கள். 1622 வரை போர்த்துகீசியர்கள் ஹோர்முஸை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்தக் காலகட்டத்தில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி பாரசீகத்துடன் வர்த்தக உறவுகளைத் தொடங்கியது.
பிரிட்டிஷ் மற்றும் போர்த்துகீசியர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. இறுதியாக, முதலாம் ஷா அப்பாஸ், பிரிட்டிஷ் கடற்படை உதவியுடன், 1622இல் ஹோர்முஸை கைப்பற்றினார். இதற்குப் பிறகு, வர்த்தக நடவடிக்கைகள் பந்தர் அப்பாஸுக்கு மாற்றப்பட்டன. இன்றும்கூட, ஹோர்முஸில் ஒரு போர்த்துகீசிய கோட்டையின் இடிபாடுகளைக் காணலாம்.

“ஹோர்முஸ்” அல்லது “ஓர்முஸ்” என்ற பெயரைப் பொறுத்தவரை, பல விளக்கங்கள் உள்ளன. சில புத்தகங்கள் இது அஹுரா மஸ்தாவில் இருந்து வந்ததாகக் கூறுகின்றன. சில வரலாற்றாசிரியர்கள் இது சசானிய பேரரசுடனும் “ஹோர்மிஸ்ட்” போன்ற பழைய பெயர்களுடனும் அல்லது “பனை மரங்களின் பாதை” என்று பொருள்படும் பாரசீக வார்த்தையான “ஹுர்-மோக்” என்பதுடனும் தொடர்புடையது என்று நம்புகிறார்கள். இது சில நேரங்களில் “ஹோர்மோஸ்” என்றும் அழைக்கப்படுகிறது.
ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் வருவதற்கு முன்பு, இரானில் ஜொராஸ்ட்ரிய மதம் பரவலாகப் பின்பற்றப்பட்டது. பின்னர், அதன் பெயர் ஓர்முஸ் அல்லது ஹோர்முஸ் என்று மாறியது. மேலும் இந்த இரண்டு வடிவங்களும் ஐரோப்பிய பதிவுகளில் காணப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய வர்த்தகர்கள் வந்தபோது, அவர்கள் “ஹோர்முஸ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கினர் என்று நம்பப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையின் பெயர் இஃப்ரா ஹோர்மிஸ்த் என்பவரிடம் இருந்து வந்தது என்ற நம்பிக்கையும் உள்ளது. அவர் இரண்டாம் ஷாபூரின் தாயார் ஆவார். இரண்டாம் ஷாபூர் குழந்தையாக இருந்தபோது 309 முதல் 325 வரை அவருக்காக இஃப்ரா ஹோர்மிஸ்த் ஆட்சி செய்தார். இரண்டாம் ஷாபூர் பின்னர் பத்தாவது பேரரசராகவும், சசானிய பேரரசின் நீண்டகாலம் ஆட்சி செய்த மன்னராகவும் ஆனார்.
எளிதாகக் கூறுவதெனில், “ஹோர்முஸ்” என்ற பெயர் மதம், பண்டைய ஆட்சியாளர்கள், மொழி அல்லது நிலவியல் ஆகியவற்றில் ஏதோவொன்றில் இருந்து வந்திருக்கலாம். இதற்கு ஒரேயொரு ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கம் இல்லை. ஆனால், இந்தக் கருத்துகள் அனைத்தும் சேர்ந்து அதன் நீண்ட, வளமான வரலாற்றைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு