கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் அதிகமுள்ள பெண்களுக்கு நஞ்சு சரியாக உருவாகாமலிருக்கலாம். நஞ்சிலுள்ள `ஸ்பைரல் ஆர்ட்டீரியோல்ஸ்’ (spiral arterioles) எனப்படும் ரத்த நாளங்கள் சரியாக உருவாகியிருக்காது. அதுதான் இதில் பிரச்னையாக இருக்கும். பாதிக்கப்பட்ட ரத்த நாளங்களின் மூலம் எந்தளவுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியுமோ, அதை முயற்சிசெய்வதற்குதான் ஆன்டி ஹைப்பர்டென்சிவ் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். அதை கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகளில் 8 முதல் 10 சதவிகிதம் பேருக்கு ரத்த அழுத்தம் வருகிறது.
இதற்கு, மிக இளவயதில் முதல் கர்ப்பம், அதிக உடல் பருமன், முந்தைய கர்ப்பத்தின்போது அதிக ரத்த அழுத்தம் இருந்தது, ஒன்றுக்கு மேலான குழந்தைகளைச் சுமப்பது, வயதானபிறகு கர்ப்பமாவது போன்ற பல காரணங்கள் இருக்கலாம். ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கர்ப்பகாலத்தில் அது தீவிரமாகலாம். ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர் பிரச்னை உள்ளவர்கள், கிட்னி பாதிப்புள்ளவர்களுக்கும் கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்.
கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம் வராமலிருக்க முதலில் அதிகப்படியான எடையைக் குறைக்க வேண்டும். கர்ப்பத்துக்கு முன்பே ரத்த அழுத்தம், கிட்னி பாதிப்புகள் இருந்தால் அவற்றுக்கான முறையான சிகிச்சைகளை மேற்கொண்டு ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு கர்ப்பத்துக்குத் திட்டமிடலாம். முதல் கர்ப்பத்தில் அதிக ரத்த அழுத்தம் இருந்திருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அப்படி வராமலிருக்க முன்கூட்டியே மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.