சர்தார்ஜி சப்பாத்தி ஜோக் போல், ‘இத்தனைக்கும் வங்கதேசம்தாங்க டாஸ் ஜெயிச்சுது’! கிறைஸ்ட் சர்ச்சில் இன்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் ஜெயிச்சு பீல்டிங் எடுத்ததே பார்க்கலாம் வங்கதேசம்… நியூசிலாந்து குஷி ஆகிவிட்டது, டாம் லேதம், வில் யங் இறங்கினர். கடந்த டெஸ்ட்டின் 7 விக்கெட் நாயகன் இபாதத் ஹுசைனை புரட்டி எடுத்தனர், அவர் 21 ஓவர் 1 மெய்டன் 114 ரன்கள் விளாசப்பட்டார். விக்கெட் இல்லை. போன டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றீர்களா இப்போது சாத்து வாங்குங்கள் என்பது போல் நியூசிலாந்து பதிலடி ஆட்டத்தை ஆடுவது போல்தான் தெரிகிறது.
கேப்டன் டாம் லேதம் 186 ரன்களுடனும் டெவன் கான்வே 99 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். வில் யங் என்ற ஒரே தொடக்க வீரர்தான் 54 ரன்களில் அவுட் ஆக்கப்பட்டுள்ளார். லேதமும், டெவன் கான்வேயும் 201 ரன்களை இதுவரை 2வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், இன்னும் எத்தனை ரன்களோ என்று நியூசிலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்த வங்கதேச கேப்டன் மோமினுல் ஹக் உள்ளுக்குள் சக வீரர்களிடம் ஏத்து வாங்குவார் என்றே தோன்றுகிறது.
நியூசிலாந்து தொடக்க ஜோடி லேதம், வில் யங்
பிளே என்றவுடனேயே அடிக்க ஆரம்பித்த அடி வில் யங், டாம் லேதம் 148 தொடக்கக் கூட்டணியில் முடிந்தது. 2012-க்குப் பிறகு நியூசிலாந்து தொடக்கக் கூட்டணி சதக்கூட்டணி அமைப்பது இதுவே முதல் முறையாம். 90 ஓவர்கள் வீசப்பட்ட முதல் நாளில் வங்கதேசம் மொத்தம் 44 பவுண்டரிகளை வாரி வழங்கியது.
டாம் லேதம் ஆஃப் சைடின் கடவுள் என்பது போல் ஆடினார், கட், ட்ரைவ், பந்தை திருப்பி விடுவது என்று தன் 29 பவுண்டரிகளில் 21 பவுண்டரிகளை ஆஃப் சைடில்தான் அடித்தார். டெவன் கான்வே தான் ஆடிய முதல் 5 டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்சில் 5 அரைசதம் கண்ட டெவன் கான்வே, இந்த டெஸ்ட்டில் இறங்கியவுடன் மெஹதி ஹசன் மிராசை ஒரு கவர் டிரைவ் பவுண்டரி விளாசி தொடங்கினார், ஆட்ட நேர முடிவில் டஸ்கின் அகமடை இன்னொரு கவர் ட்ரைவ் விளாசினார். 10 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் 99 நாட் அவுட்.
கடைசி செஷனில் டாம் லேதம் 150 ரன்களை 199 பந்தில் எட்டினார். பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2017-ல் லேதம் 177 ரன்கள் எடுத்தார் இப்போது அதைக் கடந்தார். இதுலேதமின் 12 வது டெஸ்ட் சதமாகும். வங்கதேசத்துக்கு நேரம் சரியில்லை. ஒரே நாளில் 349 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியது. நாளை டாம் லேதமின் இரட்டைச் சதம் டெவன் கான்வே சதமெடுத்து எத்தனை தூரம் செல்வார் என்பதையும் பார்க்க வேண்டும்.
ஒன்று மட்டும் பட்சி சொல்கிறது, ஏதோ பெரிய உலக சாதனை பார்ட்னர்ஷிப் அங்கு நடக்கப்போகிறது என்று தோன்றுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.